16. வெறி விலக்கல்  
   
உழைநின்றீரும், பிழை அறிந்தீரும்,  
பழங் குறி கண்ட நெடுங் கண் மாதரும்--  
ஒன்று கிளக்க, நின்று, இவை கேண்மின்:  
(ஒரு பால் பசுங்கொடி திருநுதல் பொடித்த  
குறு வெயர்ப்பு ஒழுக்கு எனப் பிறை அமுது எடுக்க.
5
படிறர் சொல் எனக் கடுவு நஞ்சு இறைப்ப,  
அண்டப் பொற் சுவர் கொண்ட அழுக்கை  
இறைத்துக் கழுவுவதென்னக் கங்கைத்  
துறை கொள் ஆயிரம் முகமும் சுழல,  
அப் பெருங் கங்கை கக்கிய திரை எனக்
10
கொக்கின் தூவல் அப்புறம் ஆக,  
மாணிக்கத்தின் வளைத்த சுவர் எனப்  
பாணிக்குள் பெய் செந் தழல் பரப்ப,  
தன்னால் படைத்த பொன் அணி அண்டம்  
எண் திக்கு அளந்து கொண்டன என்னப்
15
புரிந்த செஞ் சடை நிமிர்ந்து சுழல,  
மேருவின் முடி சூழ் சூரியர் என்னத்  
தங்கிய மூன்று கண் எங்கணும் ஆக--  
கூடல் மாநகர் ஆடிய அமுதை  
உண்டு களித்த தொண்டர்கள் என்ன)
20
இம் மது உண்ண உம்மையின் உடையோர்  
முருகு நாறப் பருகுதல் செய்க;  
வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக;  
அணங்கு ஆட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க;  
பிணிதர விசித்த முருகு-இயம் துவைக்க;
25
ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க;  
இன்னும் பல தொழிற்கு, இந் நிலை நின்று,  
மாறு பாடு கூறுதல் இலனே:  
ஈங்கு இவை நிற்க--யாங்கள் அவ் அருவியில்  
ஒழுக, புக்குத் தழுவி எடுத்தும்,
30
ஒரு மதி முறித்து, ஆண்டு, இரு கவுட் செருகிய  
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம், எம் உயிர்,  
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்,  
நெடுங் கை வேலால் அடும் தொழில் செய்து,  
பெறும் உயிர் தந்து மருவி அளித்த
35
பொன் நெடுங் குன்றம் மன்னிய தோளன்  
செவ்வே தந்தமை துயர் இருப்ப,  
கூறு பெயரொடு வேறு பெயர் இட்டு,  
மறி உயிர் உண்ணக் குறுகி வந்திருந்த  
தெய்வம் கற்ற அறிவை
40
உய்யக் கூறில், ஓர் நெஞ்சு இடம் பொறாதே.
உரை