18. மகிழ்ந்து உரைத்தல்  
   
குங்குமக் கோட்டு அலர் உணங்கல் கடுக்கும்  
பங்குடைச் செங் கால் பாட்டு அளி அரிபிடர்க்  
குரு, வில், தோய்ந்த அரி கெழு மரகதக்  
'கல்' எனக் கிடப்பச் சொல்லிய மேனித்  
திருநெடு மாலுக்கு, ஒருவிசை, புரிந்து
5
சோதி வளர் பாகம் ஈந்தருள் நித்தன்;  
முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில்,  
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்  
புதிய நாயகன்; பழ மறைத் தலையோன்;  
கைஞ்ஞின்றவன்--செங் கால் கண்டனர் போல,
10
விளக்கமும், புதுமையும், அளப்பு இல் காட்சியும்,  
வேறு ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்,  
அறிவோர் காணும் குறியாய் இருந்தன--  
(இருந் திண் போர்வைப் பிணி விசி முரசம்,  
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப;
15
மணம் கொள் பேர் அணி பெருங் கவின் மறைத்தது என்று,  
எழுமதி குறைத்த முழுமதிக் கருங் கயல்,  
வண்டு மருவி உண்டு களியாது,  
மற்று, அது பூத்த பொன் திகழ் தாமரை  
இரண்டு முகிழ் செய்து நெஞ்சுறப் பெருகும்,
20
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய;  
நுனித்தலை அந்தணர் கதழ் எரி வளர்த்துச்  
சிவந்த வாய்தோறும் வெண் பொரி சிதறிச்  
செம்மாந்து மணத்த வளரிய கூர் எரி  
மும் முறை சுழன்று, தாயர் உள் மகிழ;
25
இல் உறை கல்லின், வெண்மலர் பரப்பி,  
இலவு அலர் வாட்டிய செங் கால் பிடித்து,  
களி தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி;  
இரண்டு பெயர் காத்த தோலாக் கற்பு  
முகன் உறக் காணும் கரியோர் போல,
30
இடப்பால் நிறுத்தி, பக்கம் சூழ  
வடமீன் காட்டி; விளக்கு அணி எடுத்துக்  
குலவாழ்த்து விம்ம, மண அணிப் பக்கம்  
கட்புலம் கொண்ட இப் பணி அளவும்)  
வாடி நிலை நின்றும், ஊடி ஏமாந்தும்,
35
என் முகம் அளக்கும் காலக் குறியைத்  
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்,  
'உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது' என்று,  
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்,  
கல் உயர் நெடுந் தோள் அண்ணல்
40
மல் உறத் தந்த ஈர்ந் தழைதானே.
உரை