23. காமம் மிக்க கழிபடர் கிளவி  
 
வானவர்க்கு இறைவன், நிலம் கிடை கொண்டு,  
திரு உடல் நிறை விழி ஆயிரத் திரளும்  
இமையாது விழித்த தோற்றம் போல,  
கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து,  
மணம் சூழ் கிடந்த நீள் கருங் கழியே!
5
கருங் கழி கொடுக்கும் வெள் இறவு அருந்தக்  
கை பார்த்திருக்கும் மடப் பெடைக் குருகே!  
பெடைக் குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு  
காவல் அடைகிடக்கும் கைதைஅம் பொழிலே!  
வெம்மையொடு கூடியும், தண்மையொடு பொருந்தியும்,
10
உலக இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர்,  
காலம் கோடா முறைமுறை தோற்ற  
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி;  
பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்  
களையாது உடுக்கும் பைந் துகில் ஆகி;
15
வேனிற் கிழவன் பேர் அணி மகிழ,  
முழக்காது தழங்கும் வார் முரசு ஆகி;  
நெடியோன் துயிலா அறிவொடு துயில,  
பாயற்கு அமைந்த பள்ளியறை ஆகி;  
சலபதி ஆய்ந்து, சேமநிலை, வைத்த
20
முத்து மணி கிடக்கும் சேற்று இருள் அரங்காய்;  
புலவு உடற் பரதவர் தம் குடி ஓம்ப,  
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி;  
கலம் எனும் நெடுந் தேர் தொலையாது ஓட,  
அளப்பு அறப் பரந்த வீதி ஆகி;
25
சுறவ வேந்து நெடும் படை செய்ய  
முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி;  
மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய,  
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி;  
நீர் நெய் வார்த்துச் சகரர் அமைத்த
30
தீ வளர் வட்டக் குண்டம் ஆகி;  
எண் திகழ் பகுவாய் இன மணிப் பாந்தள்-  
தண்டில் நின்று எரியும் தகளி ஆகி;  
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட,  
மாறிக் குனித்த நீறு அணி பெருமாற்கு
35
அமுத-போனகம் கதுமென உதவும்  
அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி;  
இன்னும் பலவாய் மன்னும் கடலே!  
நுங்கள் இன்பம் பெருந் துணை என்றால்,  
தண்ணம் துறைவற்கு இன்று இவள் ஒருத்தி,
40
நெருப்பு உறு மெழுகின் உள்ளம் வாடியும்,  
அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும்,  
அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும்,  
நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம்  
கொண்டனள் என் என, என் முகம் நாடி,
45
உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்  
அன்று எனின், நும்மின் ஒன்று பட்டு, ஒருகால்,  
'இவளோ துயரம் பெறுவது என்?' என்று  
வினவாது இருக்கும் கேண்மை,  
மனனால் நாடின், கொலையினும் கொடிதே!
50
உரை