25. நின் குறை நீயே சென்று உரை என்றல்
 
 
வேற்றுப் பிடி புணர்ந்த தீராப் புலவி  
சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்,  
கருங் கை வெண் கோட்டுச் சிறு கட் பெருங் களிறு,  
உளத்து நின்று அளிக்கும் திருத்தகும் அரு நூல்  
பள்ளிக் கணக்கர் பால் பட்டாங்கு,
5
குறிஞ்சிப் பெருந் தேன் இறாலொடு சிதைத்து,  
மென் நடைப் பிடிக்குக் கைபிடித்து உதவி,  
அடிக்கடி வணங்கும் சாரல் நாட!  
(அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்தென,  
நல் நயம் கிடந்த பொன்னகர் மூடிப்
10
புலை செய்து, உடன்று, நிலைநிலை தேய்க்கும்  
தள்ளா மொய்ம்பின், உள் உடைந்து, ஒருகால்,  
வேதியன் முதலா அமரரும் அரசனும்  
போது தூய் இரப்ப, புணரா மயக்கம்  
நாரணன் நடித்த பெரு வாய்த் தருக்கத்து
15
அறிவு நிலை போகி, அருச்சனை விடுத்த  
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும்,  
அடுக்கு நிலை சுமந்த வலித் தடப் பொன்மலை  
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி,  
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளீஇ,
20
மாதவன், அங்கி, வளி, குதை, எழு நுனி,  
செஞ்சரம்; பேர் உருள், அருக்கன், மதி ஆக;  
தேர் வரை வையம் ஆகத் திருத்தி,  
சென்னி மலை ஈன்ற கன்னி விற் பிடிப்ப;  
ஒரு கால் முன் வைத்து, இரு கால் வளைப்ப,
25
வளைத்த வில் வட்டம் கிடைத்தது கண்டு,  
சிற நகை கொண்ட ஒரு பெருந் தீயின்,  
ஏழ் உயர்வானம் பூழிபடக் கருக்கி;  
அருச்சனை விடாது, அங்கு, ஒருப்படும் மூவரில்  
இருவரைக் காவல் மருவுதல் ஈந்து,
30
மற்று ஒருவற்கு வைத்த நடம் அறிந்து  
குடமுழவு இசைப்பப் பெறும் அருள் நல்கி,  
ஒரு நாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும்  
அரும்பெறல் உளது ஆம் பெரும் பதம் காட்டி,  
எரியிடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு
35
உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த  
சுந்தரக் கடவுள், கந்தரக் கறையோன்,  
மாமி ஆடப் புணரி அழைத்த  
காமர் கூடற்கு இறைவன் கழல் இணை,  
களிப்புடை அடியர்க்கு வெளிப்பட்டு என்ன)
40
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து,  
கள்ளமும் வெளியும் உள்ள முறை அனைத்தும்  
விரித்துக் கூறி, பொருத்தமும் காண்டி--  
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்தென்ன  
நுண் இடை சுமந்து ஆற்றாது
45
கண்ணிய சுணங்கின் பெரு முலையோட்கே!  
உரை