26. இரவுக் குறி வேண்டல்  
 
வள்ளியோர் ஈதல் வரையாது போல,  
எண் திசை கரு இருந்து, இன மழை கான்றது;  
வெண் நகைக் கருங் குழல் செந் தளிர்ச் சீறடி  
மங்கையர் உளம் என, கங்குலும் பரந்தது;  
தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த
5
நல் வழி மான, புல் வழி புரண்டது;  
காலம் முடிய, கணக்கின் படியே,  
மறலி விடுக்க வந்த தூதுவர்  
உயிர்தொறும் வளைந்தென, உயிர் சுமந்து உழலும்  
புகர்மலை இயங்காவகை அரி சூழ்ந்தன;
10
(வெள் உடற் பேழ்வாய்த் தழல் விழி மடங்கல்-  
உரிவை மூடி, கரித் தோல் விரித்து,  
புள்ளி பரந்த வள் உகிர்த் தரக்கின்  
அதள் பியற்கு இட்டு, குதி பாய் நவ்வியின்  
சருமம் உடுத்து, கரும் பாம்பு கட்டி,
15
முன்பு உகுவிதிகள் என்பு குரல் பூண்டு,  
கருமா எயிறு திரு மார்பு தூக்கி,  
வையகத் துயரின் வழக்கு அறல் கருதி--  
தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர்  
அண்ணாந்த வன முலைச் சுண்ணமும் அளறும்,
20
எழிலி வான் சுழலப் பிளிறு குரற் பகட்டினம்  
துறை நீர் ஆடப் பரந்த கார் மதமும்;  
பொய்கையும், கிடங்கும், செய்யினும் புகுந்து;  
சிஞ்சை இடங்கரை, பைஞ் சிலைச் சேலை,  
உடற் புலவு மாற்றும் படத்திரை வையை
25
நிறைநீர் வளைக்கும் புகழ் நீர்க் கூடல்--  
வெள்ளிஅம் பொதுவில், கள் அவிழ் குழலொடும்  
இன்ப நடம் புரியும் தெய்வ நாயகன்)  
அருவி உடற் கயிறும், சுனை மதக் குழியும்,  
பெருந்தேன் செவியும், கருந் தேன் தொடர்ச்சியும்,
30
ஓவா, பெரு மலைக் குஞ்சரம் மணக்க,  
வளம் தரும் உங்கள் தொல் குடிச் சீறூர்க்கு,  
அண்ணிய விருந்தினன் ஆகி  
நண்ணுவன்--சிறு நுதற் பெரு விழியோளே!  
உரை