36. நாண் இழந்து வருந்தல்  
   
மை குழைத்தன்ன தொள்ளிஅம் செறுவில்,  
கூர்வாய்ப் பறை தபு பெருங் கிழ நாரை,  
வஞ்சனை தூங்கி, ஆரல் உண்ணும்  
நீங்காப் பழனப் பெரு நகர்க் கூடல்,  
கரம் மான் தரித்த பெருமான் இறைவன்
5
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி  
உளம் விழுங்காத களவினர் போல, என்  
உயிரொடும் வளர்ந்த பெரு நாண்-தறியினை,  
வெற்பன் காதற்கால் உலை வேலையின்--  
வலி உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக்
10
கட்புலன் காணாது, காட்டை கெட உந்தலின்;  
என்போல், இந் நிலை, ஆறுவரப் படைக்கும்  
பேறு, ஆங்கு ஒழிக: பெரு நாண் கற்பினர்  
என் பேறு உடையர் ஆயின்,  
கற்பில் தோன்றாக் கடன் ஆகுகவே.
15
உரை