37. தோழி இயற்பழித்தல்  
   
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை,  
பெருங் கடல் முகந்த வயிறு நிறை நெடுங் கார்  
விண் திரிந்து முழங்கி வீழாதாகக்  
கருவொடு வாடும் பைங் கூழ்போல,  
கற்பு நாண் மூடிப் பழங்கண் கொள்ள--
5
உயர்மரம் முளைத்த ஊரி போல,  
ஓர் உடல் செய்து மறு மனம் காட்டும்  
மாணிழை-மகளிர்வயின் வைகுதலால்,  
(கரு முகிற் கனி நிறத் தழற்கண் பிறை எயிற்று  
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை,
10
செங்கோல் முளை இட்டு, அருள்நீர் தேக்கி,  
கொலை களவு என்னும் படர் களை கட்டு,  
தீப் படர் ஆணை வேலி கோலி,  
தருமப் பெரும் பயிர் உலகு பெற விளைக்கும்  
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான்--
15
முள் உடைப் பேழ்வாய்ச் செங் கண் வராலினம்  
வளை வாய்த் தூண்டிற் கருங் கயிறு பரிந்து,  
குவளைப் பாசடை முண்டகம், உழக்கி,  
நெடுங் கால் பாய்ந்து, படுத்த ஒண் தொழில்  
சுருங்கை வழி அடைக்கும் பெருங் கழிப் பழனக்
20
கூடற்கு இறைவன்--இரு தாள் விடுத்த  
பொய்யினர் செய்யும் புல்லம் போல,)  
பேரா வாய்மை ஊரன்,  
தாரொடு மயங்கி, பெருமையும் இலனே.
உரை