38. பொழுது கண்டு மயங்கல்  
   
கோடிய கோலினன் செருமுகம் போல,  
கனைகதிர் திருகிக் கல் சேர்ந்து முறை புக;  
பதினெண் கிளவி ஊர் துஞ்சியபோல்,  
புட் குலம் பொய்கைவாய் தாழ்க்கொள்ள;  
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி,
5
இருள்மகள் கொண்ட குறுநகை போல,  
முல்லையும் மௌவலும், முருகு உயிர்த்து, அவிழ;  
தணந்தோர் உளத்தில் காமத்தீப் புக;  
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட;  
அன்றில் புற் சேக்கை புக்கு, அலகு பெடை அணைய;
10
அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க;  
முது கனி, மூலம், முனிக்கணம் மறுப்ப;  
கலவையும், பூவும், தோள், முடி, கமழ;  
விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி,  
துத்தம், கைக்கிளை, அளவையின் விளைப்ப;
15
நீரரமகளிர் செவ் வாய் காட்டிப்  
பசுந் தாட் சேக் கொள் ஆம்பல் மலர,  
(தோளும் இசையும், கூறிடும் கலையும்,  
அருள்-திரு எழுத்தும், பொருள்-திரு மறையும்,  
விரும்பிய குணமும், அருந் திரு உருவும்,
20
முதல் என் கிளவியும், விதமுடன் நிரையே--  
எட்டும், ஏழும், சொற்றன ஆறும்,  
ஐந்தும், நான்கும், அணிதரு மூன்றும்  
துஞ்சல் இல் இரண்டும், சொல் அரும் ஒன்றும்--  
ஆர் உயிர் வாழ அருள் வர நிறுத்திய,
25
பேர் அருட் கூடல் பெரும்பதி நிறைந்த)  
முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார்  
தொக்க தீப் பெரு வினை சூழ்ந்தன போலவும்;  
துறவால், அறனால், பெறல் இல் மாந்தர்  
விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும்;
30
செக்கர்த் தீயொடு புக்க நல் மாலை!  
என் உயிர் வளைந்த தோற்றம் போல,  
நாற் படை வேந்தன் பாசறை-  
யோர்க்கும் உளையோ" மனத் திறன் ஓதுகவே.
உரை