39. ஆடு இடத்து உய்த்தல்  
   
முன்னி ஆடுக; முன்னி ஆடுக--  
குமுதமும், வள்ளையும், நீலமும், குமிழும்,  
தாமரை ஒன்றில் தடைந்து வளர் செய்த  
முளரி நிறை செம்மகள்! முன்னி ஆடுக:  
நிற் பெறு தவத்தினை முற்றிய யானும்,
5
(பல குறி பெற்று இவ் உலகு, உயிர், அளித்த  
பஞ்சின் மெல் அடிப் பாவை கூறு ஆகி,  
கருங்குருவிக்குக் கண்ணருள் கொடுத்த  
வெண் திரு நீற்றுச் செக்கர் மேனியன்--  
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும்,
10
பொங்கர்க் கிடந்த சூற் கார்க் குளிறலும்,  
வல்லியில் பரியும் பகடு விடு குரலும்,  
யாணர்க் கொடிஞ்சி நெடுந் தேர் இசைப்பும்,  
ஒன்றி அழுங்க, நின்ற நிலை பெருகி,  
மாதிரக் களிற்றினைச் செவிடு படுக்கும்
15
புண்ணியக் கூடல் உள் நிறை பெருமான்--  
திருவடி சுமந்த அருளினர் போல)  
கருந் தேன் உடைத்துச் செம்மணி சிதறி,  
பாகற் கோட்டில் படர்கறி வணக்கி,  
கல்லென்று இழிந்து, கொல்லையில் பரக்கும்
20
கறங்கு இசை அருவிஅம் சாரல்  
புறம்பு தோன்றி, நின்கண் ஆகுவனே.
உரை