4. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
 
 
அண்டம் ஈன்று அளித்த கன்னி முனிவாக,  
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்,  
ஆயிர மணிக் கரத்து அமைத்த வான் படையுடன்  
சயம் பெறு வீரனைத் தந்து, அவன் தன்னால்,  
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
5
இருள் மனத் தக்கன் பெரு மகம் உண்ணப்  
புக்க தேவர்கள் பொரு கடற்படையினை  
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய  
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து--  
அருவி அம் சாரல் இருவி அம் புனத்தினும்,
10
மயிலும், கிளியும், குருவியும், 'நன்றி  
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல' என்னும்  
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்  
தங்குவன கண்டும், வலி மனம் கூடி,  
ஏகவும் துணிந்தனம்--எம் பெரும் படிறு
15
சிறிது நின்று இயம்ப, உழையினம்! கேண்மின்: இன்று,  
ஊற்று எழும் இரு கவுட் பெரு மதக் கொலை மலைக்  
கும்பம் மூழ்கி, உடல் குளித்து ஓட,  
பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி,  
தோகையர் கண் எனச் சுடு சரம் துரக்கும்
20
எம்முடைக் குன்றவர் தம் மனம் புகுத, இப்  
புனக் குடிக் கணியர் தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து,  
வரிப்புற அணில் வாற் கருந் தினை வளை குரல்  
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து,  
நிழலும் கொடுத்து, அவர் ஈன்ற
25
மழலை மகார்க்கும் பொன் அணிந்தனரே.
உரை