40. விரதியரைவினாவல்  
   
நிலவு பகல் கான்ற புண்ணிய அருட்பொடி  
இரு வினை துரந்த திருவுடல் மூழ்கி,  
நடு உடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர்,  
சுத்தி அமர் நீறுடன், தோள்வலன் பூண்டு,  
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி,
5
இரு மூன்று குற்றம் அடியறக் காய்ந்து, இவ்  
ஆறு எதிர்ப்பட்ட அருந் தவத் திருவினிர்!  
"தணியாக் கொடுஞ் சுரம் தரும் தழல் தாவிப்  
பொன்-உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி,  
கொண்மூப் பல் திரைப் புனலுடன் தாழ்த்தி,
10
பொதுளிய தருவினுள் புகுந்து, இமையாது,  
மருந்து பகுத்து உண்டு, வல் உயிர் தாங்கும்  
வட்டை வந்தனை!" என, வழங்கு மொழி நிற்க:  
"தாய் கால் தாழ்ந்தனள்; ஆயம் வினவினள்;  
பாங்கியைப் புல்லினள்; அயலும் சொற்றனள்;
15
மக்கட் பறவை பரிந்து உளம் மாழ்கினள்;  
பாடலப் புதுத் தார்க் காளையின் ஒன்றால்  
தள்ளா விதியின் செல்குநள்" என்று--  
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் துளி முலை,  
பைங் கண் புல்வாய், பால் உணக் கண்ட
20
அருள் நிறை பெருமான், இருள் நிறை மிடற்றோன்,  
மங்குல் நிரை பூத்த மணி உடுக் கணம் எனப்  
புன்னைஅம் பொதும்பர்ப் பூ நிறை கூடல், நும்  
பொன் அடி வருந்தியும் கூடி--  
அன்னையர்க்கு உதவல் வேண்டும் இக் குறியே.
25
உரை