47. முகிலொடு கூறல்
 
 
கருங் குழற் செவ் வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு  
உளத்துயர் ஈந்து, கண் துயில் வாங்கிய  
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்,  
(விரிபொரி சிந்தி, மண மலர் பரப்பி,  
தெய்வக் குலப் புகை விண்ணொடும் விம்ம,
5
இரு-நால் திசையும், உண்பலி தூவி,  
நல் நூல் மாக்கள் நணிக் குறி சொற்று,  
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில்  
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க் காலும்,  
வெங்கார் பெய்து நாள் குறித்து உழுநரும்,
10
சூல் நிறைந்து உளையும் சுரி வளைச் சாத்தும்,  
இனக் கயல் உண்ணும் களிக் குருகினமும்,  
வரைப் பறை அரிந்த வாசவன்-தொழுது  
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும்,  
நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும்,
15
தாமரை பாடும் அறுகால்-கிளையும்,  
உறைத்து எழு கம்பலை உம்பரைத் தாவி  
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்  
அள்ளற் பழனத்து அணிநகர்க்) கூடல்  
நீங்காது உறையும் நிமிர்சடைப் பெருமான்--
20
உரகன் வாய் கீண்ட மாதவன் போல  
மண் அகழ்ந்து எடுத்து வருபுனல் வையைக்  
கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி,  
நரைத் தலை முதியோள் இடித்து அடு கூலி கொண்டு  
அடைப்பது போல, உடைப்பது நோக்கி,
25
கோமகன் அடிக்க, அவன் அடி வாங்கி,  
எவ் உயிர், எவ் உலகு, எத் துறைக்கு எல்லாம்,  
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன்--  
திரு மிடற்று இருள் எனச் செறி தரும் மா முகில்!  
எனது கண் கடந்து நீங்கித்
30
துனைவுடன் செல்லல், ஒருங்குபு புரிந்தே.
உரை