5. இளமை கூறி மறுத்தல்
 
   
இரண்டு உடல் ஒன்றாய்க் கரைந்து, கண் படாமல்,  
அளவு இயல் மண நிலை பரப்பும் காலம்  
தளை கரை கடந்த காமக்கடலுள்  
புல் நுனிப் பனி என மன்னுதல் இன்றி,  
பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது,
5
வளை காய் விட்ட புளி அருந்தாது,  
செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது,  
மனை புகையுண்ட கரு மண் இடந்து  
பவள வாயில் சுவை காணாது,  
பொற்குட முகட்டுக் கரு மணி அமைத்தெனக்
10
குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது,  
மலர அவிழ்ந்த தாமரைக் கயல் என  
வரி கொடு மதர்த்த கண் குழியாது,  
குறி படு திங்கள் ஒருபதும் புகாது,  
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கெடுப்ப,
15
தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு,  
அரக்கர் கூட்டத்து அமர் விளையாட,  
நெருப்பு உமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்  
(கூடல் மாநகர், ஆட எடுத்த  
விரித்த தாமரை குவித்த தாளோன்)
20
பேர் அருள் விளையாச் சீர்-இலர் போல,  
துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன,  
இதழ் குவித்துப் பணித்த குதலை தெரியாது;  
முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது;  
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன,
25
விரிதரு கூழையும் திரு முடி கூடாது;  
துணை மீன் காட்சியின் விளை கரு என்ன,  
பார்வையின் தொழில்கள் கூர்விழி கொள்ளாது;  
மறு புலத்து இடுபகை வேந்து அடக்கியது என,  
வடுத்து எழு கொலை முலை பொடித்தில அன்றே:
30
செம் மகள் மாலை இம் முறை என்றால்,  
வழுத்தலும் வருதலும் தவிர்தி--  
மொழிக் குறி கூடாச் செவ் வேலோயே!  
உரை