51. குலமுறை கூறி மறுத்தல்
 
   
பெரு மறை நூல் பெறக் கோன்முறை புரக்கும்  
பெருந்தகை வேந்தன் அருங் குணம் போல,  
மணந்தோர்க்கு அமுதும், தணந்தோர்க்கு எரியும்,  
புக்குழிப் புக்குழிப் புலன் பெறக் கொடுக்கும்  
மலையத் தமிழ்க் கால் வாவியில் புகுந்து
5
புல் இதழ்த் தாமரைப் புது முகை அவிழ்ப்ப,  
வண்டினம் படிந்து மதுக் கவர்ந்து உண்டு,  
சேயிதழ்க் குவளையின் நிரை நிரை உறங்கும்  
நிலை நீர் நாடன்--நீயே: இவளே--  
மலை உறை பகைத்து, வான் உறைக்கு அணக்கும்
10
புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்  
பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே: நீயே--  
ஆயமொடு ஆர்ப்ப, அரிகிணை முழக்கி,  
மாயா நல் அறம் வளர் நாட்டினையே: இவளே--  
தொண்டகம் துவைப்ப, தொழிற் புனம் வளைந்து,
15
பகட்டினம் கொல்லும் பழி நாட்டவளே: நீயே--  
எழு நிலை மாடத்து இள முலை மகளிர்  
நடம் செயத் தரளவடம் தெறு நகரோய்: இவளே--  
கடம் பெறு கரிக் குலம் மடங்கல் புக்கு அகழத்  
தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே:நீயே--
20
அணிகெழு நவமணி அலர் எனத் தொடுத்த  
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே: இவளே--  
மணி வாய்க் கிள்ளை துணியாது அகற்ற,  
நெட்டிதண் ஏறும் இப் புனத்தினளே:  
ஆதலின், பெரும் புகழ் அணைகுதி ஆயின்,
25
(நாரணன் பாற, தேவர் கெட்டு ஓட,  
வளி சுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக்  
கரு முகில் வளைந்து பெருகியபோல,  
நிலை கெடப் பரந்த கடல் கெழு விடத்தை  
மறித்து, அவர் உயிர் பெறக் குறித்து உண்டருளி,
30
திருக்களம் கறுத்த அருட் பெரு நாயகன்)  
கூடல் கூடினர் போல,  
நாடல் நீ--இவள் கழைத் தோள் நசையே.
உரை