52. காவற்பிரிவு அறிவித்தல்
 
   
நடைத் திரைப் பரவை நாற் கடல் அணைத்து  
வரையறுத்து, அமைந்த வகை நான்கு ஆக,  
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை--  
குரு மணி விரித்தலின், தேனொடு கிடந்து  
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின்--
5
வரை என நிறுத்திய திரு உறை பெருந்தோள்  
தரித்தும், அணைத்தும், தான் எனக் கண்டும்,  
செய்ததும் அன்றி, திருமனம் பணைத்துக்  
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்--  
(விடையா வடந்தை செய் வெள்ளிஅம் சிலம்பினும்,
10
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்,  
கொண்டல் வந்து உலவும் நீலக் குவட்டினும்,  
கோடை சென்று உடற்றும் கொல்லிக் கிரியினும்,  
பிறந்தவர் பிறவாப் பெரும் பதியகத்தும்,  
முடிந்தவர் முடியா மூதூரிடத்தும்,
15
கண்டவர் காணாக் காட்சி செய் நகரினும்,  
வேதத் தலையினும், விதி ஆகமத்தினும்,  
கல்வியர் உளத்தும், கலர் நெஞ்சகத்தும்,  
தெய்வம் விடுத்துப் பொய் கொள் சிந்தையினும்,  
கொலையினர் கண்ணும்; குன்றாது இயைந்து,
20
வெளியுறத் தோன்றி, இருளுற மறைந்த  
விஞ்சை வந்தருளிய, நஞ்சு அணி மிடற்றோன்--  
சந்தமும், பதமும், சருக்கமும், அடக்கமும்,  
சின்னக் குறளும், செழுங் கார் போலப்  
பெரு மறை முழங்கும்--திரு நகர்க் கூடல்
25
ஒப்புற்று) அடை மலர் சுமந்த  
மைப்புறக் கூந்தல் கொடி வணங்கு இடையே!  
உரை