54. புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்
 
 
கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து,  
வால் உளை எருக்கில் வளர் உழை பாடி,  
கூவிளங்கண்ணியில் குலக் கிளை முரற்றி,  
வெண் கூதளத்தில் விளரி நின்று இசைத்து,  
வண்டும், தேனும், ஞிமிறும், சுரும்பும்,
5
உமிழ்நறவு அருந்தி உறங்கு செஞ் சடையோன்;  
மது மலர் மறித்துத் திருவடி நிறைத்த  
நான்மறைப் பாலனை நலிந்து உயிர் கவரும்  
காலற் காய்ந்த காலினன்; கூடல்  
திரு மறுகு அணைந்து வரு புனல் வையை
10
வரை புரண்டென்னத் திரை நிரை துறையகத்து,  
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள்  
மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை--  
ஆட்டியும் அணைத்தும், கூட்டியும் குலவியும்,  
ஏந்தியும் எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும்,
15
முழுக்கியும் தபுத்தியும், முலை-ஒளி நோக்கியும்,  
விளி மொழி ஏற்றும், விதலையின் திளைத்தும்,  
பூசியும் புனைந்தும், பூட்டியும் சூட்டியும்,  
நிறுத்தியும் நிரைத்தும், நெறித்தும் செறித்தும்,  
எழுதியும் தப்பியும், இயைத்தும் பிணித்தும்,
20
கட்டியும் கலத்தியும், கமழ்த்தியும் மறைத்தும்--  
செய்தன எல்லாம் செய்யலர் போல, என்  
நெட்டிலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்--  
பாசடைக் குவளைக் சுழல் மணக் காட்டினைக்  
கரு வரிச் செங் கண் வராலினம் கலக்க,
25
வேரி மலர் முண்டகத்து அடவி திக்கு எறிய  
வெள் உடற் கருங் கட் கயல் நிரை உகைப்ப,  
மரகதப் பன்னத்து ஆம்பல்அம் குப்பையைச்  
சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப,  
படிந்து சேடு எறியும் செங் கட் கவரியும்,
30
மலை சூழ் கிடந்த பெருங் குலைப் பரப்பும்,  
மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும்,  
மிடைந்து, வயல் இரிந்து முதுகு சரிந்து உடைந்து  
சிறியோன் செரு என முறிய, போகி,  
உழவக்கணத்தைக் குலைக் குடில் புகுத்தும்--
35
பெரு நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச்  
செறிந்தது என்? எனக் கேண்மின்,  
மறிந்துழை விழித்த மறி நோக்கினரே!  
உரை