56. புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல்
 
 
அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும்,  
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும்,  
கருங் கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும்,  
மா உயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும்,  
என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும்,
5
நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும்,  
கரு வழி நீக்கலின் உயர் நிலைக் குருவும்,  
இரு நிலம் காத்தலின் மதியுடை வேந்தும்,  
ஆகிய மணி வேல் சேவல்அம் கொடியோன்--  
வானக மங்கையும், தேன் வரை வள்ளியும்,
10
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும்--  
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல்,  
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய  
நாயகன் திருவடி நண்ணலர் போல,  
பொய் பல புகன்று, மெய் ஒளித்து, இன்பம்
15
விற்று உணும் சேரி விடாது உறை ஊரன்,  
ஊருணி ஒத்த பொது வாய்த் தம்பலம்  
நீயும் குதட்டினை ஆயின்--சேயாய்!  
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலைத் தீம் பாற்கு  
உள்ளமும் தொடாது, விள் அமுது ஒழுக்கும்
20
குதலைவாய் துடிப்பக் குலக் கடை உணங்கியும்,  
மண் உறு மணி எனப் பூழி மெய் வாய்த்தும்,  
புடை மணி விரித்த உடைமணி இழுக்கியும்,  
சுடிகையும் சிகையும் சோர்ந்து கண் பனித்தும்,  
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும்,
25
மறிக்கட் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்  
சென்று அழியாது நின்று அயர் கண்டும்,  
உறுவதும் இப் பயன்: அன்றேல்,  
பெறுவது என் பால்; இன்று நின் பேறே.
உரை