57. தலைவி தோழியோடு புகல்தல்
 
   
நடைமலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை  
ஆழி வலவன் அடர்த்தன போல,  
புன் தலை மேதி புனல் எழ முட்டிய  
வரி உடற் செங் கண் வராலுடன் மயங்க,  
உள் கவைத் தூண்டில் உரம் புகுந்து உழக்கும்
5
நிறை நீர் ஊரர்--நெஞ்சகம் பிரிக்கும்  
பிணி மொழிப் பாணனுடன் உறை நீக்கி;  
நூலொடு துவளும் தோல் திரை உரத்தின்  
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய்  
வெள்ளி குமிழ்த்த வெரூஉக் கட் பார்ப்பான்
10
கோலுடன் படரும் குறு நகை ஒருவி;  
பூ விலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு;  
திக்கு விண் படர் நதி, திரு மதி, கயிலை,  
நாமகள், பெருங்கடல், நாற் கோட்டு ஒருத்தல்,  
புண்ணியம், இவை முதல் வெள் உடல் கொடுக்கும்
15
புகழ்க் கவிப் பாவலர் புணர்ச்சி இன்பு அகற்றி;  
எல்லாக் கல்வியும் இகழ்ச்சி செய் கல்வியர்  
பெரு நகைக் கூட்டமும் கழிவு செய்து; இவ் இடை,  
மயக்குறு மாலை மா மகள் எதிர--  
ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம்
20
ஆயிரம் எடுத்து வான்வழி படர்ந்து,  
மண் ஏழ் உருவி மறியப் பாயும்  
பெருங் கதத் திரு நதி ஒருங்குழி மடங்க,  
ஐம் பகை அடக்கிய அருந் தவ முனிவன்  
இரந்தன வரத்தால், ஒரு சடை இருத்திய
25
கூடல் பெருமான் குரைகழல் கூறும்  
செம்மையர் போல--கோடா  
நம்மையும் நோக்கினர், சிறிது கண் புரிந்தே.
உரை