59. ஆதரம் கூறல்
 
   
நெடு வரைப் பொங்கர்ப் புனம் எரி கார் அகில்  
கரும் புகை வானம் கையுறப் பொதிந்து,  
தருநிழல் தேவர்தம் உடல் பனிப்பப்  
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும்  
பொன்அம் பொருப்ப! நின் உளத்து இயையின்--
5
கனல்தலைப் பழுத்த திரள் பரல் முரம்பு,  
வயல் வளை கக்கிய மணி நிரைப் பரப்பே!  
அதர் விரிந்து எழுந்த படர்புகை நீழல்,  
பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே!  
தீ வாய்ப் புலிப் பற் சிறு குரல் எயிற்றியர்,
10
கழுநீர் மிலையும் வயல் மாதினரே!  
அயற்புலம் எறியும் எயினர் மாத் துடி,  
நடு நகர்க்கு இரட்டும் களி அரி கிணையே!  
இருள் கவர் புலன் எனச் சுழல்தரும் சூறை,  
மதுமலர் அளைந்த மலையக் காலே!
15
எழுசிறை தீயும் எருவையும் பருந்தும்,  
குவளை அம் காட்டுக் குருகொடு புதாவே!  
வலி அழி பகடு வாய் நீர்ச் செந்நாய்,  
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே!  
பட்டு உலர் கள்ளி நெற்றுடை வாகை,
20
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே!  
(வட திரு ஆலவாய், திருநடவூர்,  
வெள்ளியம்பலம், நள்ளாறு, இந்திரை,  
பஞ்சவனீச்சரம், அஞ்செழுத்து அமைத்த  
சென்னி மாபுரம், சேரன் திருத்தளி,
25
கன்னி செங்கோட்டம், கரியோன் திருஉறை--  
விண் உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன்,  
மறிதிரைக் கடலுள் மா எனக் கவிழ்ந்த  
களவு உடற் பிளந்த ஒளி கெழு திரு வேல்,  
பணிப்பகை ஊர்தி, அருட்கொடி இரண்டுடன்,
30
முன்னும், பின்னும், முதுக்கொள நிறைந்த  
அருவிஅம் சாரல் ஒரு பரங்குன்றம்--  
சூழ்கொள இருந்த) கூடல்அம் பெருமான்  
முழுதும் நிறைந்த இரு பதம் புகழார்  
போம் வழி என்னும் கடுஞ் சுரம் மருதம்!--
35
மாமை ஊரும் மணி நிறத்து இவட்கே.
உரை