6. சுவடு கண்டு இரங்கல்
 
   
நிணம், உயிர் உண்ட, புலவு பொறாது,  
தலை உடல் அசைத்து, சாணை வாய் துடைத்து,  
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை--  
அந்தணர் உகும் நீர்க்கு அருட்கரு இருந்து  
கோடா மறை மொழி நீடுறக் காணும்
5
கதிர் உடல் வழி போய்க் கல்லுழை நின்றோர்  
நெருப்பு உருத்தன்ன செருத் திறல் வரைந்த  
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;  
துணை விளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்  
தோகை மண் புடைக்கும் காய்புலி மாய்க்க
10
வாய் செறித்திட்ட மாக் கடிப்பு இதுவே;  
செடித்தலைக் கார் உடல் இடிக் குரற் கிராதர்  
மறைந்து கண்டு அக் கொலை மகிழ் உழி இந் நிலை;  
தவ நதி போகும் அரு மறைத் தாபதர்  
நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை;
15
கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை  
மலை மறை அதகம் மாற்றிய அதுபோல்,  
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,  
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலைக்  
கை வளர் கொழுந்து மெய் பொடியாகென
20
சிற்றிடைப் பெரு முலைப் பொற்றொடி மடந்தை தன்  
கவைஇய கற்பினைக் காட்டுஉழி இதுவே;  
குரவம் சுமந்த குழல் விரித்து இருந்து  
பாடலம் புனைந்த கற் பதுக்கை இவ் இடனே;  
ஒட்டு விட்டு உலறிய பராரை நெட்டாக் கோட்டு,
25
உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி,  
வளை வாய்க் கரும் பருந்து இடை பறித்து உண்ணக்  
கண்டு நின்று உவந்த காட்சியும் இதுவே;  
செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்,  
குடுமி அம் தழலும் அவண் இருட் குவையும்,
30
முளை வரும் பகனும் அதனிடை மேகமும்,  
சேயிதழ் முளரியும் கார் இதழ்க் குவளையும்,  
ஓர் உழைக் கண்ட உவகையது என்ன,  
எவ் உயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின்  
அண்டப் பெருந் திரள் அடைவு ஈன்று அளித்த
35
கன்னி கொண்டு இருந்த மன் அருட் கடவுள்  
(மலை உருக் கொண்ட உடல் வாள் அரக்கர்  
வெள்ளமும், சூரும், புள் இயல் பொருப்பும்,  
நெடுங் கடற்கிடங்கும், ஒருங்கு உயிர் பருகிய  
மணி வேற் குமரன் முதல் நிலை வாழும்
40
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்)  
தாள் தலை தரித்த கோளினர் போல,  
நெடுஞ் சுரம் நீங்கத் தம் கால்  
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே.
உரை