60. முகம் கண்டு மகிழ்தல்
 
   
நிறைமதி புரையா! நிறைமதி புரையா!  
'தேரான் தெளிவு' எனும் திருக்குறள் புகுந்து  
குறைமதி மனனே! நிறைமதி புரையா!--  
உவர்க் கடற் பிறந்தும், குறைஉடல் கோடியும்,  
கருங் கவைத் தீ நாப் பெரும் பொறிப் பகுவாய்த்
5
தழல்விழிப் பாந்தள்தான் இரை மாந்தியும்,  
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும்,  
தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும்,  
குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும்,  
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும்--
10
பெரு மறை கூறி அறை விதிதோறும்,  
'முத் தழற்கு உடையோன் முக்கட் கடவுள்' என்று  
உய்த்திடும் வழக்குக் கிடக்க என்று, ஒருகால்,  
வானவர் நதிக் கரை மருள் மகம் எடுத்த  
தீக்குணத் தக்கன் செருக்களம்தன்னுள்,
15
(கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும்,  
வளை உமிழ் ஆரமும், சுரிமுகச் சங்கும்,  
வலம்புரிக் கூட்டமும், சலஞ்சலப் புஞ்சமும்,  
நந்தின் குழுவும், வயல்வயல் நந்தி  
உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும்)
20
கூடற்கு இறையோன் குரை கழற்படையால்  
ஈர்-எண் கலையும் பூழிபட்டு உதிர  
நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும்,  
சிதைந்து நைந்து எழு பழித் தீ மதி புரையா!--  
முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும்,
25
தீக் கதிர் உடலுள் செல்லாதிருந்தும்,  
திளையாத் தாரைகள் சேரா  
முளையா வென்றி இவள் முகமதிக்கே!  
உரை