62. மருவுதல் உரைத்தல்
 
   
பெண் எனப் பெயரிய பெரு மகள் குலனுள்,  
உணா நிலன் உண்டு பராய அப் பெருந் தவம்  
கண்ணுற உருப்பெறும் காட்சி-அது என்னக்  
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை!  
நின்னையும் கடந்தது அன்னவள் அருங் கற்பு;
5
அரி கடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற  
நிலமகள் கடந்தது, நலனவள் பொறையே;  
இரு வினை நாடி உயிர்தொறும் அமைத்த  
ஊழையும் கடந்தது, வாய்மையின் மதனே;  
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த
10
நின் இலம் கடந்தது, அன்னவள் இல்லம்;  
பேரா வாய்மை நின் ஊரனைக் கடந்தது,  
மற்று-அவள் ஊரன் கொற்ற வெண்குடையே;  
ஏழ் உளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய  
சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன,
15
நின் முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர்,  
மற்று-அவட் பார்த்த மதிக் கிளையினரே;  
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும்  
என்னையும் கடந்தனள், பொன்னவட்கு இனியோள்;  
(கொலை மதில் மூன்றும் இகல் அறக் கடந்து,
20
பெரு-நிலவு எறித்த புகர் முகத் துளைக் கை  
பொழி மதக் கறையடி அழிதரக் கடந்து,  
களவில் தொழில் செய் அரிமகன் உடலம்  
திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து,  
மாறுகொண்டு அறையும் மதிநூற்கடல் கிளர்
25
சமயக் கணக்கர்தம் திறம் கடந்து,  
புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த--  
மலருடன் நிறைந்து வான்வழி கடந்த  
பொழில் நிறை கூடல் புது மதிச் சடையோன்  
மன் நிலை கடவா மனத்தவர் போல)
30
ஒன்னலர் இடும் திறைச் செலினும்,  
தன் நிலை கடவாது, அவன் பரித் தேரே.
உரை