63. பள்ளியிடத்து ஊடல்
 
   
நீரர மகளிர் நெருக்குபு புகுந்து  
கண் முகம் காட்டிய காட்சித்து என்ன,  
பெருங் குலை மணந்த நிறைநீர்ச் சிறைப் புனல்  
மணி நிறப் படாம் முதுகு இடையறப் பூத்து,  
சுரும்பொடு கிடந்த சொரி இதழ்த் தாமரை
5
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது,  
நிழல் தலைமணந்து புனல் கிடவாது,  
விண் உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த  
வானவர் மங்கையர் மயக்கம் போல,  
பிணர்க் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி,
10
வெண் கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து,  
கடுக்கைச் சிறு காய் அமைத்த வாற் கருப்பை  
இணை எயிறு என்ன இடைஇடை முள் பயில்  
குறும் புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்து,  
செங் கட் பகடு தங்கு வயல் ஊரர்க்கு,
15
(அரு மறை விதியும், உலகியல் வழக்கும்,  
கருத்து உறை பொருளும், விதிப்பட நினைந்து,  
வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி,  
ஐந் திணை வழுவாது அகப்பொருள் அமுதினை,  
குறுமுனி தேறவும், பெறுமுதல் புலவர்கள்
20
ஏழ்-எழு பெயரும் கோது அறப் பருகவும்,  
புலனெறி வழக்கில் புணர் உலகவர்க்கும்,  
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும்,  
நின்று அறிந்து உணர, தமிழ்ப் பெயர் நிறுத்தி,  
எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன்
25
மெய்த் தவக் கூடல்) விளைபொருள் மங்கையர்  
முகத்தினும், கண்ணினும், முண்டக முலையினும்,  
சொல்லினும், துவக்கும் புல்லம் போல  
எம் இடத்து இலதால்; என்னை,  
தம் உளம் தவறிப் போந்தது இவ் இடனே?
30
உரை