67. ஊடல் நீட வாடி உரைத்தல்
 
   
நிரை வளை ஈட்டமும், தரளக் குப்பையும்,  
அன்னக் குழுவும், குருகு அணி இனமும்,  
கருங் கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும்,  
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும்,  
அலவன் கவைக் கால் அன்ன வெள் அலகும்,
5
வாலுகப் பரப்பின் வலை வலிது ஒற்றினர்க்கு,  
'ஈது' என அறியாது ஒன்றி, வெள் இடையாம்  
மாதுடைக் கழிக் கரைச் சேரி ஓர் பாங்கர்,  
புள்ளொடு பிணங்கும் புள் கவராது  
வெள் இற உணங்கல் சேவல் ஆக,
10
உலகு உயிர் கவரும் கொலை நிலைக் கூற்றம்  
மகள் எனத் தரித்த நிலை அறிகுவனேல்;  
(விண் குறித்து எழுந்து, மேலவர்ப் புடைத்து,  
நான்முகன்-தாங்கும் தேனுடைத் தாமரை  
இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து,
15
வானவர்க்கு இறைவன் கடவு கார் பிடித்துப்  
பஞ்சு எழப் பிழிந்து தண் புனல் பருகி,  
ஐந்து எனப் பெயரிய நெடு மரம் ஒடித்து,  
கண் உளத்து அளவா எள்ளுணவு உண்டு,  
பொரி எனத் தாரகைக் கணன் உடல் கொத்தி,
20
அடும் திறல் அனைய கொடுந் தொழில் பெருக்கிய  
மாயா வரத்த பெருங் குருகு அடித்து,  
வெண் சிறை முடித்த செஞ் சடைப் பெருமான்)  
கூடற்கு இறையோன், குறி, உரு, கடந்த  
இரு பதம் உளத்தவர் போல,
25
மருவுதல் ஒருவும் மதியா குவனே.
உரை