69. பதி பரிசு உரைத்தல்
 
   
எரி தெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை;  
முகில் தலை சுமந்து ஞிமிறு எழுந்து இசைக்கும்  
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக!  
கடுங் கடத்து, எறிந்த கொடும் புலிக்கு ஒடுங்கினை;  
வரி உடற் செங் கண் வராலினம் எதிர்ப்ப,
5
உழவக் கணத்தர் உடைவது நோக்குக!  
கொலைஞர் பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை;  
வேதியர் நிதி மிக விதிமகம் முற்றி,  
அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி,  
பொன் உருள் வையம் போவது காண்க!
10
ஆறு அலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை;  
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து,  
கழுநீர் களைநர்தம் கம்பலை காண்க!  
தழல் தலைப்படுத்த பரல் முரம்பு அடுத்தனை;  
சுரி முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த
15
குளிர் வெண் தரளக் குவால் இவை காண்க!  
அலகை நெட்டிரதம் புனல் எனக் காட்டினை;  
வன்மீன் நெடுங் கயல் பொதி வினையகத்துக்  
கிடங்கு எனப் பெயரிய கருங் கடல் காண்க!  
முனகர்கள் பூசல் துடி ஒலி ஏற்றனை;
20
குடுமிஅம் சென்னியர் கரு முகில் விளர்ப்பக்  
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேண்மதி!  
அமரர்கள், முனிக் கணத்தவர், முன் தவறு  
புரிந்து, உடன் உமை கண் புதைப்ப, மற்று, உமையும்  
ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த
25
ஒற்றைஅம் பசுங் கழை ஒல்கிய போல,  
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருஉரு அணைந்து,  
வளைக் கரம்கொடு கண் புதைப்ப, அவ்வுழியே  
உலகு இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர்,  
பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும்
30
தமக்கு எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும்,  
மற்று-அவர் மயக்கம் கண்டு, அவர் கண் பெறத்  
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன்  
தாங்கிய கூடல்-பெரு நகர்  
ஈங்கு இது காண்க!--முத்து எழில் நகைக் கொடியே!
35
உரை