7. நற்றாய் வருந்தல்
 
   
பொடித்து அரும்பாத சின் முலைக் கொடிமடந்தையள்,  
மணி மிளிர் பெருங் கட்கு இமை காப்பு என்ன,  
விழித்துழி விழித்தும், அடங்குழி அடங்கியும்,  
தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக;  
பல் மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்தென,
5
சுற்று உடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக;  
பிணிமுக-மஞ்ஞை செருமுகத்து ஏந்திய  
மூ-இரு திருமுகத்து ஒரு வேலவற்கு,  
வான் உற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்,  
மனவு அணி மடந்தை, வெறியாட்டாளன்,
10
வேல்மகன், குறத்தி, மா மதி முதியோள்--  
தொண்டகம் துவைப்ப, முருகு-இயம் கறங்க--  
ஒருங்கு வந்து, இமையா அருங் கடன் முற்றிய  
பின்னர், நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக;  
கருந் தலைச் சாரிகை, செவ் வாய்ப் பசுங்கிளி,
15
தூவி அம் தோகை, வெள் ஓதிமம், தொடர் உழை,  
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக;  
(சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி  
புகை முரிந்து எழுந்தென விண்ணத்து அலமர,  
குழை பொடி கூவையின் சிறை, சிறை தீந்த
20
பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ,  
உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும்  
வளை கட் கூகையும் மயங்கி வாய் குழற,  
ஆசையின் தணியா அழல் பசி தணிக்கக்  
காளிமுன் காவல் காட்டி வைத்து ஏகும்
25
குழிகட் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப,  
வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப,  
நெடுந் தாட் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப,  
திசை நின்று எழாது, தழல் முகம் தெறிப்ப,  
சுடலையில், சூறை இடை இடை அடிக்கும்
30
பேர் அழற் கானினும், நாடும் என் உளத்தினும்,  
ஒரு பால் பசுங்கொடி நிறை பாட்டு அயர,  
பாரிடம் குனிப்ப, ஆடிய பெருமான்)  
வையகத்து உருவினர் மலர் ஆவறிவினைப்  
புலன் நிரை மறைத்த புணர்ப்பு-அதுபோல,
35
குளிர் கொண்டு உறையும் தெளிநீர் வாவியை  
வள்ளை, செங்கமலம், கள் அவிழ் ஆம்பல்,  
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்  
செந் தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும்,  
மூவாத் தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர்
40
இரண்டு எனக் கவைத்த நல் அரண் தரு தோழியை,  
செரு விழும் இச்சையர், தமது உடல் பெற்ற  
இன்புகள் நோக்கா இயல்பு-அது போல,  
மருங்கு பின் நோக்காது, ஒருங்கு விட்டு அகல,  
பொருந்தியது, எப்படி, உள்ளம்--
45
அருந் தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே?  
உரை