8. செலவு நினைந்து உரைத்தல்
 
   
உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்  
பழவினை புகுந்த, பாடகம் போல,  
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க  
கட்டுடைச் சூர் உடல் காமம் கொண்டு  
பற்றி உட்புகுந்து, பசுங் கடல் கண்டு,
5
மாவொடும் கொன்ற மணி நெடுந் திரு வேல்  
சேவல்அம் கொடியோன் காவல் கொண்டிருந்த  
குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை,  
தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன்  
(புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில்,
10
இரு விரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி,  
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க;  
ஒரு விரல் தெறித்தும், ஐவிரல் குவித்தும்,  
பெரு வாய் ஒரு முகப் படகம் பெருக்க;  
தடா உடல் உம்பர்த் தலை பெறும் முழவம்
15
நான் முகம் தட்டி, நடு முகம் உரப்ப;  
ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த  
சல்லரி அங்கைத் தலை விரல் தாக்க;  
கயந்தலை அடி என, கயிறு அமை கைத்திரி,  
இரு விரல் உயர்த்திச் செரு நிலை, இரட்ட;
20
இரு தலை குவிந்த நெட்டுடல்-தண்ணுமை  
ஒரு முகம் தாழ்த்தி, இரு கடிப்பு ஒலிப்ப;  
திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து  
அங்குலி இரண்டு இரண்டு அணைத்து விளர் நிறீஇ,  
மும் முகக் கயலுடன் மயிர்க் கயிறு விசித்த
25
கல்லவடத் திரள் விரல்-தலை கறங்க;  
மரக்கால் அன்ன ஒருவாய்க்கோதை  
முகத்தினும் தட்ட, மூக்கினும் தாக்க;  
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்)  
திருவடி வினவாக் கரு உறை மாக்கள்
30
நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில்,  
செல்லவும் உரியம், தோழி, நில்லாது--  
எம் எதிர்வு இன்றி, இருந்து எதிர்ப்பட்டு,  
மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்  
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போலச்
35
சேர மறைத்த கூர் இருள் நடு நாள்,  
'அரிதின் போந்தனிர்' என்று, ஓர்  
பெரிது இன் வாய்மை வெற்பனின் பெறினே!  
உரை