80. கலவி கருதிப் புலத்தல்
 
   
நிலை நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி,  
வான் தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி,  
புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்  
சீறுணவு இன்பத் திருந்தா வாழக்கை,  
கான்றிடு சொன்றியின் கண்டு, அருவருத்து,
5
புலன் அறத் துடைத்த நலன் உறு கேள்வியர்,  
ஆரா இன்பப் பேர் அமுது அருந்தி,  
துறவு எனும் திருவுடன் உறவு செய் வாழ்க்கையர்,  
வாயினும், கண்ணினும், மனத்தினும், அகலாப்  
பேர் ஒளி நாயகன்; கார் ஒளி மிடற்றோன்;
10
மண் திரு வேட்டுப் பஞ்சவற் பொருத  
கிள்ளியும், கிளையும், கிளர் படை நான்கும்,  
திண்மையும், செருக்கும், தேற்றமும், பொன்றிட,  
எரிவாய் உரகர் இருள் நாட்டு உருவக்  
கொலைக் கொண்டாழி குறியுடன் படைத்து,
15
மறியப் புதைத்த மறம் கெழு பெருமான்;  
நீர் மாக் கொன்ற சேயோன் குன்றமும்,  
கல்வியும், திருவும், காலமும், கொடியும்,  
மாடமும், ஓங்கிய மணி நகர்க் கூடல்  
ஆலவாயினில் அருளுடன் நிறைந்த
20
பவளச் சடையோன்--பதம் தலை சுமந்த  
நல் இயல் ஊர! நின் புல்லம் உள் மங்கையர்  
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக,  
கேளாச் சிறு சொல் கிளக்கம் கலதியர்  
இவ்வுழி ஆயத்தினர்களும் ஆக,
25
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய்  
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக,  
மலர்ச் சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத்  
திருமனம் கொள்ளாச் சேக்கை-அது ஆக,  
நின் உளம் கண்டு, நிகழ் உணவு உன்னி,
30
நாணா நவப் பொய் பேணி உள் புணர்த்தி,  
யாழொடு முகமன் பாணனும் நீயும்,  
திருப் பெறும் அயலவர் காண  
வரப் பெறு மாதவம் பெரிது உடையேமே.
உரை