82. நெஞ்சொடு வருந்தல்
 
   
வடமொழி மதித்த இசை நூல் வழக்குடன்  
அடுத்தன எண்-நான்கு அங்குலியகத்தினும்,  
நாற்பதிற்று இரட்டி நால் அங்குலியினும்,  
குறுமையும், நெடுமையும், கோடல் பெற்று; ஐதாய்,  
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து;
5
கோடி மூன்றில் குறித்து; மணி குயிற்றி;  
இரு நிலம் கிடத்தி; மனம், கரம், கதுவ;  
ஆயிரத்து எட்டில் அமைத்தன பிறப்பு,  
பிரவிப் பேதத் துறையது போல,  
ஆரியப் பதம் கொள் நாரதப் பேரியாழ்
10
நன்னர் கொள் அன்பால் நனிமிகப் புலம்ப--  
முந் நான்கு அங்குலி முழு உடல் சுற்றும்,  
ஐம்பதிற்று இரட்டி ஆறுடன் கழித்த  
அங்குலி நெடுமையும் அமைத்து, உள் தூர்ந்தே,  
ஒன்பது தந்திரி உறுத்தி, நிலை நீக்கி,
15
அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரை கட்டி,  
தோள் கால் வதிந்து, தொழில்படத் தோன்றும்  
தும்புருக் கருவியும் துள்ளி நின்று இசைப்ப--  
எழு என உடம்பு பெற்று, எண்பது அங்குலியின்,  
தந்திரி நூறு தழங்கு மதி முகத்த
20
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல--  
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து,  
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து,  
அந் நரம்பு இருபத்தாறு அங்குலி பெற  
இடக் கரம் துவக்கி, இடக்கீழ் அமைத்து,
25
புற விரல் மூன்றின், நுனிவிரலகத்தும்,  
அறுபத்திரண்டு இசை அனைத்து உயிர் வணக்கும்  
மருத்துவப் பெயர் பெறும் வானக் கருவி,  
தூங்கலும், துள்ளலும், துவக்கி நின்று இசைப்ப--  
நான்முகன் முதலா மூவரும் போற்ற,
30
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப,  
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச,  
இன்பப் பசுங்கொடி இடப்பால் படர,  
வெள்ளிஅம் குன்றம் விளங்க வீற்றிருந்த--  
முன்னவன் கூடல் முறைவணங்கார் என,
35
அரவப் பசுந் தலை, அரும்பு அவிழ் கணைக் கால்,  
நெய்தற் பாசடை நெடுங் காட்டு ஒளிக்கும்  
கண் எனக் குறித்த கருங் கயல் கணத்தை,  
வெள் உடல், கூர்வாய், செந் தாட் குருகினம்,  
அரவு எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள்
40
கான்று அலர் கடி மலர் கரந்து உறைந்து, உண்ணும்  
கருங் கழி கிடந்த கானல்அம் கரைவாய்,  
மெய் படு கடுஞ் சூள் மின் எனத் துறந்தவர்  
சுவல் உளைக் கவனப் புள் இயல் கலி மான்  
நோக்கம் மிறைத்த பரிதி கொள் நெடுந் தேர்ப்
45
பின்னொடும் சென்ற என் பெரும் பிழை நெஞ்சம்,  
சென்றுழிச்சென்றுழிச் சேறலும் உளவோ?  
அவ் வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ?  
இடை வழி நீங்கி என் எதிர் உறுங்கொல்லோ?  
அன்றியும், நெடு நாள் அமைந்து உடன் வருமோ?
50
யாது என நிலைக்குவன்மாதோ--  
பேதை கொள்ளாது ஒழி மனம், கடுத்தே?  
உரை