85. இரங்கல்
 
   
பழுது அறு தெய்வம் காட்டிப் பண்டையின்  
உழுவலின் நலத்தால் ஓர் உயிர் என்றும்,  
கடஞ் சூள் தந்தும், கைபுனை புனைந்தும்  
பூழிஅம் போனகம் பொதுவுடன் உண்டும்,  
குழமகற் குறித்தும், சில மொழி கொடுத்தும்,
5
கையுறை சுமந்தும், கடித் தழை தாங்கியும்,  
உயிரினில் தள்ளா இரங்கியும், உணங்கியும்,  
பனையும், கிழியும் படைக்குவன் என்றும்,  
இறடிஅம் சேவற்கு எறி கவண் கூட்டியும்,  
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும்,
10
அழுங்குறு புனல் எடுத்து அகிற் புகை ஊட்டியும்,  
ஒளி மணி ஊசல் பரிய விட்டு யாத்தும்,  
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்,  
இருவிஅம் புனத்திடை எறி உயிர்ப்பு எறிந்தும்,  
தெரித்து அலர் கொய்தும், பொழில் குறி வினவியும்,
15
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி,  
செறிஇருட் குழம்பகம் சென்று, பளிங்கு எடுத்த  
இற் பொழில் கிடைக்கும் அளவும் நின்று அலைந்தும்,  
பல நாள் பல் நெறி அழுங்கினர்: இன்று,  
(முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க
20
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து,  
மூஉடல் அணைத்த மும் முகத்து ஓர் முகத்து  
எண் கடிப்பு விசித்த கல்லலகு எறிய,  
இருட் குறள் ஊன்றி, எம் அருட்களி ஆற்றி,  
உருள் வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க,
25
கரம், கால், காட்டி, தலையம் இயக்கி,  
இதழ் அவிழ் தாமரை எனும் தகுணிச்சம்  
துவைப்ப, நீள் கரத்துக் கவைகள் தோற்றி,  
கரிக் கால் அன்ன மொந்தை கலித்து இரங்க,  
துடி எறிந்து இசைப்ப, துகளம் பரப்பி,
30
வள்ளம் பிணைத்த செங் கரடிகை மலக்க,  
எரியகல் ஏந்தி, வெம் புயங்கம் மிசை ஆக்கி,  
எரி தளிர்த்தன்ன வேணியில் குழவிப்  
பசும் பிறை அமுதொடு நிரம்பியதென்ன  
மதுக் குளிர் மத்தமும் மிலைத்து, ஒரு மறு பிறை
35
மார்பமும் இருத்தியதென்னக் கூன் புறத்து  
ஏனக்கோடு வெண் பொடிப் புறத்து ஒளிர,  
பொலன் மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்  
தனிக்கொடி காண, எவ்விடத்து உயிர் தழைப்ப,  
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல்
40
கனவிலும் வினவாதவரினும் நீங்கி,  
சூளும் வாய்மையும் தோற்றி,)  
நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே!  
உரை