87. தலைவனோடு ஊடல்
 
   
மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்  
நகைத்தொகை கூட்டிக் கவைத்து எழு சொல்லும்,  
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்  
இருமனப் பொய் உளத்து ஒரு மகள்தன்னை  
கரியோன் கடுப்பத் துகில் கவர்ந்து, ஒளிர்அலர்
5
விதியினும் பன்மை செய்முகன் படைத்து, அளவாச்  
சோதியின் படைக்கண் செல உய்த்து, அரும்புசெய்  
முண்டக முலையில் சாந்து அழித்து, அமைத் தோள்  
எழுதிய கழைக் கரும்பு எறிந்து, நூல் வளர்த்த  
கோதை வகை பரிந்து, மணிக்கலன் கொண்டு,
10
கழைத் தோள் நெகிழத் தழை உடல் குழையத்  
திரையினைத் தள்ளி, மலர்த்துகில் கண் புதைத்து,  
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும்  
சுண்ணம்-அவை கலந்து திமிர்ந்து உடல் தூற்றி,  
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி,
15
இறால் புணர் புதுத் தேன் ஈத்து, உடன் புணரும்  
அவ்வயின், மறித்தும் அன்னவள்தன்னுடன்  
கெழுமிய விழவுள், புகுமதி நீயே--  
(கவை நாக் கட்செவி அணந்து இரை துய்த்த  
பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும்,
20
பேழ்வாய்த் தழல்விழித் தரக்கு அடித்து அவிந்த  
நிலம் படர் தோகைக் குலம் கொள் சேதாவும்,  
அவ்வுழி மாத்திரை அரை எழு காலை,  
திரு நுதற்கண்ணும் மட மகள் பக்கமும்  
எரி மழு நவ்வியும், பெறும் அருள் திரு உருவு
25
எடுத்து, உடன் அந்தக் கடுக் கொலை அரவினை,  
தீவாய்ப் புலியினை, திருந்தலர் நகைப்ப  
எடுத்து அணிபூண, உரித்து உடை உடுப்ப,  
முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப,  
தருவன அன்றி--மலரவன்-அவன் தொழில்,
30
நாரணன் ஆங்கு-அவன் கூருடைக் காவல்,  
சேரத் துடைக்கும் பேர் அருள் நாளினும்,  
முத் தொழில் தனது முதல் தொழில் ஆக்கி,  
ஒரு தாள் தாரைகொள் முக் கவைச் சுடர் வேல்-  
தலை இருந்து, அருங்கதி முழுது நின்று அளிக்கும்
35
திரு நகர்க் காசிப் பதியகத்து, என்றும்  
வெளியுறத் தோன்றிய இருள் மணி மிடற்றோன்)  
நேமியங்குன்று அகழ் நெடு வேற் காளையன்-  
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு  
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும்
40
பெரும் புனல் ஊர! எம் இல்  
அரும் புனல் வையைஅம் புது நீர் அன்றே.
உரை