88. உடன்பட உரைத்தல்
 
   
வேலிஅம் குறுஞ் சூல் விளைகாய்ப் பஞ்சினம்  
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டென,  
நிறை நாண் வேலி நீங்கி, தமியே  
ஓர் உழி நில்லாது, அலமரல் கொள்ளும் என்  
அருந் துணை நெஞ்சிற்கு உறும் பயன் கேண்மதி:
5
மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்,  
இருள் அறு புலனும், மெய்ப்பொருள் அறி கல்வியும்,  
அமரர் பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு  
குறுஞ் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில்  
விதலை உள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும்,
10
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும்  
துவருறத் தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன்,  
'பொம்மல்அம் கதிர் முலை புணர்வுறும்கொல்?' எனச்  
சென்றுசென்று இரங்கலை; அன்றியும், தவிர்மோ--  
(நெட்டுகிர்க் கருங் கால் தோல்முலைப் பெரும் பேய்
15
அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,  
பேழ்வாய் இடாகினி கால் தொழுது ஏத்திக்  
கையடை கொடுத்த வெள் நிண வாய்க் குழவி,  
ஈமப் பெரு விளக்கு எடுப்ப, மற்று-அதன்  
சுடு பொடிக் காப்பு உடல் துளங்க, சுரிகுரல்
20
ஆந்தையும் கூகையும் அணி ஓலுறுத்த,  
ஓரி பாட்டு எடுப்ப, உவணமும் கொடியும்  
செஞ் செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும்  
இட்ட செய்பந்தர் இடைஇடை கால் என,  
பட்டு உலர் கள்ளிஅம்பால், துயில் கொள்ளும்
25
சுள்ளிஅம் கானிடை, சுரர் தொழுது ஏத்த--  
மரகதத் துழாயும், அந் நிறக் கிளியும்,  
தோகையும், சூலமும்; தோளில், முன்கையில்,  
மருங்கில், கரத்தில், வாடாது இருத்தி,  
போர் வலி அவுணர் புகப் பொருது உடற்றிய
30
முக் கண், பிறை எயிற்று, எண் தோட் செல்வி,  
கண்டு உளம் களிப்ப--கனைகழல் தாமரை  
வானக-வாவியூடு உற மலர,  
ஒரு தாள் எழு புவி உருவ, திண் தோள்  
பத்துத் திசையுள் எட்டு அவை உடைப்ப--
35
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன்)  
கூடல்அம் பதியகம் போற்றி  
நீட நின்று எண்ணார் உளம் என நீயே.
உரை