93. இரவு இடை விலக்கல்
 
   
முதுக் குறிப் பெண்டிர் வரத்து இயல் குறிப்ப,  
வழி முதல் தெய்வதம் வரைந்து, மற்று-அதற்குப்  
பருக்காடு உறுத்திப் பலி முதல் பராவ,  
கிள்ளை அவ் அயலினர் நா உடன்று ஏத்தப்  
பக்கம் சூழுநர்: குரங்கம், மண் படப்
5
பெற்று உயிர்த்து அயரும் பொற்றொடி மடந்தைதன்  
குரு மணி ஓவியத் திரு நகர்ப் புறத்தும்,  
கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த  
இருளுடைப் பெரு முகில் வழி தெரிந்து ஏகன்மின்--  
(அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த
10
புடை மனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்,  
அத் தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு,  
ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசு இருந்து,  
ஊடு உகள் சிரலைப் பச்சிற அருந்தும்  
பழனக் குருநாடு அணி பதி தோற்று,
15
முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்,  
கண்டீரவத்தொடு கறையடி வளரும்  
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்,  
அனைத்துள வஞ்சமும் அழித்து, நிரை மீட்சி  
முடித்து, தமது முடியாப் பதி புக,
20
'ஊழ் முறையே எமக்கு உள மண் கருதிச்  
சேறி' என்று இசைப்ப, செல் பணித் தூதினர்க்கு  
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன்)  
பாடல் சான்ற தெய்வக்  
கூடல் கூடார் குணம் குறித்து எனவே.
25
உரை