95. பரத்தையிற் பிரிவு உரைத்தல்
 
   
பெரு நிலத் தேவர்கள் மறை நீர் உகுப்ப,  
மற்று-அவர் மகத்துள், வளர்அவி மாந்த,  
விடையோன் அருச்சனைக்கு உரிமையின், முன்னவன்,  
அன்னவன் தன்னுடன் கடிகை ஏழ் அமர,  
அன்றியும், இமையவர் கண் எனக் காட்ட,
5
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க,  
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ,  
உடல் முனி செருவினர் உடல்வழி நடப்ப,  
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற,  
தண் மதிக் கலைகள் தான் அற ஒடுங்க,
10
எறிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய,  
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப,  
அவன் தரும் உலகத்து அருந் தொழில் ஓங்க,  
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற  
ஒருகால்-தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த
15
செங்கதிர் விரித்த செந் திரு மலர்த் தாமரைப்  
பெருந் தேன் அருந்தி, எப் பேர் இசை அனைத்தினும்  
முதல் இசைச் செவ்வழி விதிபெறப் பாடி, அத்  
தாது உடல் துதைந்த மென் தழைச் சிறை வண்டினம்,  
பசுந் தாள் புல் இதழ்க் கருந் தாள் ஆம்பல்,
20
சிறிது, உவா, மதுவமும் குறை பெற அருந்தி, அப்  
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை  
மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர!  
(தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப,  
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி,
25
முனி தழற் செல்வம் முற்றி, பழங் கல்  
பெண் வர, சனகன் மிதிலையில் கொடுமரம்  
இறுத்து, அவன் மகட் புணர்ந்து, எரிமழு இராமன்  
வில் கவர்ந்து, அன்னை வினை உள் வைத்து ஏவ,  
துணையும் இளவலும் தொடரக் கான் படர்ந்து,
30
மா குகன் நதி விட ஊக்கி, வனத்துக்  
கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து,  
இரு சிறைக் கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து,  
எறிவளி மகனை நட்டு, ஏழு மரத்தினுக்கு,  
அரிக்கு, கருங் கடற்கு, ஒரோஒரு கணை விடுத்து,
35
அக் கடல் வயிறு அடைத்து, அரக்கன் உயிர் வௌவி,)  
இலங்கை அவ் அரக்கற்கு இளையோன் பெறுக எனத்  
தமது ஊர் புகுந்து முடிசுமந்தோர்க்கும்;  
நான்முகத்தவர்க்கும்; இரு பால் பகுத்த  
ஒரு நுதற்கண்ணவன் உறைதரு கூடல்
40
தெளி வேற் கண் குறுந்தொடியினர் காணின்--  
நின்பால் அளியமும் நீங்கி,  
இன்பும், இன்று ஒழிக்கும்; எம் கால் தொடல்; சென்மே.
உரை