99. ஆயத்து உய்த்தல்
 
   
வடவனத்து ஒரு நாள் மாறுபட்டு எதிர்ந்து  
வழி நடம் தனது மரக்கால் அன்றி,  
முதல் தொழில் பதுமன் முன்னாய், அவ் உழி  
மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி,  
தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து,
5
மற்று அதன் தாள் அம்புத்திரி ஆக்கி,  
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி,  
பாணியில் சிரம் பதித்து, ஒரு நடை பதித்து,  
கொடுகொட்டிக்குக் குறி அடுத்து எடுக்கும்  
புங்கம், வாரம், புடைநிலை பொறுத்து,
10
சச்சபுடத்தில், தனி எழு மாத்திரை,  
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி,  
எடுத்துத் துள்ளிய இனமுத்திரைக்கு,  
மங்கலப்பாணி மாத்திரை நான்குடன்  
சென்று எறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி,
15
ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்குப்  
பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி,  
புறக் கால் மடித்து, குறித்து எறி நிலையம்  
பதினான்கு அமைத்து, விடு மாத்திரைக்கு  
வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து,
20
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு  
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து,  
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த  
காலுடன் சுழல ஆடிய காளி  
நாணி நின்று ஒடுங்க, தானும் ஓர் நாடகம்,
25
பாண்டரங்கத்து ஒரு பாடு பெற்று அமைந்த  
மோகப் புயங்க முறைத் துறை தூக்கி,  
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்  
பாணி இரண்டும் தாளம் ஆக்கி,  
ஒரு தாள் மிதித்து, விண் உற விட்ட
30
மறு தாள் மலரில் மலர்க்கரம் துடக்கி,  
பார்ப்பதிப் பாணியைத் துடி மணி எடுப்ப,  
சுருதியைத் தண்டி வலி கொண்டு அமைப்ப,  
முதல் ஏழ்-அதனை ஒன்றினுக்கு ஏழ் என  
வீணை பதித்துத் தானம் தெரிக்க;
35
முன் துடி மணியில் ஒற்றிய பாணியை  
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து,  
மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால்  
முன் ஒரு நாளில் முழுக் கதி அடைந்த  
அம்மைப் பெயர் பெறும் அருட் பேய் பிடிப்ப;
40
பூதமும், கூளியும், பேயும், குனிப்ப;  
அமரர் கண் களிப்ப--ஆடிய பெருமான்  
மதுரைஅம் பதி எனும் ஒரு கொடிமடந்தை  
சீறிதழ்ச் சாதிப் பெரு மணம் போல,  
நின் உளம் நிறைந்த நெடுங் கற்பு-அதனால்
45
வினை உடல் புணர வரும் உயிர் பற்றிப்  
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல,  
காலம் உற்று ஓங்கும் நீள்முகில் கூடி  
மணி தரு தெருவில் கொடி நெடுந் தேரும்,  
நாற் குறிப் புலவர் கூட்டு எழு நனி புகழ்
50
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின  
உருள் எழு பூழியும், அவ் உருள் பூண்ட  
கலின மான் துகளும் கதிர் மறை நிழலின்  
நின்று, முன் இட்ட நிறை அணி பொறுத்து,  
பெருங் குலைக் கயத்துக் கருந் தாட் கழுநீர்
55
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என,  
நின் உயிர் ஆய நாப்பண்  
மன்னுக, வேந்தன் வரவினுக்கு எழுந்தே.
உரை