பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 10

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் றொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமல ரன்பொடு
முணக முகையின் முலைமுகந் தரிமி
னுருளிற் பூழி யுள்ளுற வாடுமி
10
  னெதிர்மி னிறைஞ்சுமி னேத்துமி னியங்குமின்
கருப்புரந் துதைத்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரு மருத்தினு முறுமின்
பெருங்வின் முன்னாட் பேணிய வருந்தவங்
கண்ணிடை யுளத்திடைக் காண்மின் கருதுமின்
15
  பூவஞ் சுண்ணமும் புகழ்ந்தெதி ரெறிமின்
யாழிற் பரவுமி னீங்கிவை யன்றிக்
கலத்துமென் றெழுமின் கண்ணளி காண்மின்
வென்சுடர் செஞ்சுட ராகிய விண்ணொடு
புவிபுன லனல்கான் மதிபுல வோனென
20
  முழுது நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர்க் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய வந்நாட்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடற் சிறுநகைக் குறுந்தாட் பாரிட
25
  மாற்றா தலைந்த நீர்நசை யடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத் தருளிய
கூடலம் பதியுறை குணப்பெருந் கடவுண்
முண்டக மலர்த்து முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை யூரன்
  பெற்றுணர்த் தாமம் புனைந்தொளிர் மணித்தேர்
வீதிவந் ததுவர லானம்
மேதந் தீர விருமருங் கெழுந்தே.

(உரை)
கைகோள், கற்பு, பரத்தையர்க்குப் பாங்காயினார் கூற்று

துறை: தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

     (இ-ள்) இதனைப் ‘புல்லுதல் மயக்கும்’ (தொல். கள. 24) என்னும் நூற்பாவின்கண் பிறவும் என்பதனால் அமைத்துக் கொள்க.

14-16: வெண்சுடர்.......................................பெருமான்

     (இ-ள்) வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு-திங்களும் ஞாயிறும் அச்சுடர்கள் தோன்றுதற் கிடனான வெளியும்; புவி புனல் அனல் கால்மதிபுலவோன் என-நிலமும் நீரும் காற்றும் மதிக்கும் உயிரும் என்று கூறும்படி; முழுதும் கண் நிறைந்த முக்கண் பெருமான்-யாண்டும் நிறைந்த மூன்று கண்களையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) வெண்சுடர்-திங்கள். செஞ்சுடர்-ஞாயிறு. வெண்சுடரும் இவை உண்டாக்கிய விண்ணும் என்க. ஒடு எண்ணின்கண் வந்தது. கால்-காற்று. மதிப்புலவோன்-மதிக்கும் அறிவினையுடைய உயிர் என்க. இவற்றை இறைவனுடைய எண் வகை வடிவங்கள் என்ப. இதனை,

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலவனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ” (திருத்தோ. 2)

எனவரும் திருவாசகத்தானும் உணர்க. இவ்வெண்வகைப் பொருள்களுள் உயிர் தனிச்சிறப்புடையது என்பது தோன்ற மதிபுலவோன் என்று வியந்தார். மதிபுலவோன்: வினைத்தொகை.

17-18: பனி................................அந்நாள்

     (இ-ள்) பனிக்கதிர் குலவன் பயந்து அருள் பாவையை-திங்கட் குலத்தோனாகிய மலையத்துவச பாண்டியன் ஈன்றருளிய கொல்லிப் பாவையை ஒத்த தடாதகைப் பிராட்டியாரை; திருபெருவதுவை பொருந்திய அந்நாள்-அழகிய பெரிய மணச்சடங்கு வாயிலாகப் பொருந்திய அந்த நாளிலே என்க.

     (வி-ம்.) பனிக்கதிர்: அன்மொழித் தொகை. குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் என்க. புலத்தையுடையவனைப் புலவன் என்றாற் போலக் குலத்தையுடையவனைக் குலவன் என்றார்; என்றது மலயத்து வசபாண்டியனை. பாவை: உவமவாகு பெயர். தடாதகைப் பிராட்டியார் என்க.

19-23: சொன்றி.........................................கடவுள்

     (இ-ள்) பெரு சொன்றிமலை நனிதின்று தொலைத்த-பெரிய சோறாகிய மலையினை மிகவும் தின்று தீர்த்த; கார்உடல் சிறுநகைக் குறுந்தாள் பாரிடம்-கரிய உடலையும் சிறிய நகையினையும் குறிய கால்களையுமுடைய குண்டோதரன் என்னும் பூதம்; ஆற்றாது அலைந்த நீர்நசை அடக்க-ஆற்றாது வருந்துதற்குக் காரணமாகிய அதன் வேட்கையைத் தணிக்கும் பொருட்டு; மறிதிரைப் பெருநதி வரவழைத்து அருளிய-புரளுகின்ற அலைகளையுடைய வையைப் பேரியாற்றின்கண் வெள்ளம் வரும்படி செய்தருளிய; கூடல் அம்பதி இறை குணம்பெறுங் கடவுள்- நான்மாடக் கூடலாகிய அழகிய மதுரை நகரத்தின்கண் எழுந்தருளி இருக்கின்ற எண்குணங்களையுமுடைய அக்கடவுளுடைய என்க.

     (வி-ம்.) சொன்றி-சோறு. நனி: மிகுதிப்பொருள் குறித்த உரிச்சொல். தின்னுதல் அரிதென்பது தோன்ற நனிதின்று தொலைத்த என்றார். பாரிடம்-பூதம். நீர்நசை-நீர்வேட்கை. பெருநதி-வையை; நதி என்றது ஈண்டு வெள்ளத்தை. குணம்- எண்குணம். அவையாவன. தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன. திருமால் முதலிய ஏனைக் கடவுளர்க்கும் கடவுள் என்பார் பெருங்கடவுள் என்றார்.

24-24: முண்டகம்...............................................எழுந்தே

     (இ-ள்) முண்டகம் மலர்த்தும் முதிராச் சேவடி-அன்பருடைய நெஞ்சத்தாமரையை மலரச்செய்கின்ற மூவாத சிவந்த திருவடிகளை; தரித்த உள்ளத் தாமரையூரன்-எப்பொழுதும் சுமந்துள்ள நெஞ்சத்தாமரையையுடைய மருத நிலத்தலைவனாகிய நம்பெருமானுடைய; பொன்துணர் தாமம் புனைந்து ஒளிர் மணித்தேர்- பொன்னினாற் செய்த பூங்கொத்தினையுடைய மாலைகளைப் புனைந்து ஒளிரா நின்ற மணி கட்டப்பட்ட தேர்; வீதி வந்தது-உதோ நம்முடைய தெருவிலே வந்துற்றது கண்டீர்; வரலால் நம் ஏதம்தீர இருமருங்கு எழுந்து-ஆதலால் நம்முடைய குற்றம் தீரும்படி தேரினுடைய இரண்டு பக்கங்களினும் எழுந்து சென்று என்க.

     (வி-ம்.) முண்டகம்-தாமரை மலர். ஈண்டு அன்பருடைய நெஞ்சத்தாமரை மலர் என்க. முதிர்தல்-மூத்தல். எனவே முதிராச் சேவடி என்றது மூவாத சேவடி என்றவாறு. உள்ளத்தாமரை: பண்புத்தொகை. இணர்-பூங்கொத்து. தாமம்-மாலை. ஏதம்-அவன் இதுகாறும் நம்பால் வாராதிருந்தற்குக் காரணமான நங்குற்றம் என்க.

1-4: வடி...............................தரிமின்

     (இ-ள்) வடிவிழி சிற்றிடை பெருமுலை மடவீர்-மாவடுவின் பிளவுபோன்ற கண்களையும் சிறிய இடையினையும் பெரிய கொங்கைகளையுமுடைய மடந்தையீர்; தொழுமின் வணங்குமின் சூழ்மின் தொடர்மின்-அத்தேரினைக் கைகுவித்துத் தொழுவீராக! அன்றியும் அப்பெருமானைத் தலையால் வணங்குவீராக! அன்றியும் அத்தேரினை வலம் வருவீராக! அன்றியும் அதனைத் தொடர்ந்து செல்வீராக! கடிமலர் கோதை அன்பொடு கட்டுதிர்-அன்றியும் மணம்மிக்க மலர்மாலைகளைக் காதலோடு முடிவீராக!; முகையின்முலை முகம் முண்டகம் தரிமின்-அரும்பு போன்ற நும்முலை முகத்திலே தாமரை மலரினை அணிந்து கொள்வீராக! என்க.

     (வி-ம்.) வடி-மாவடு. சிற்றிடைப் பெருமுலை என்புழிச் செய்யுளின்ப முணர்க. தொழுதல்-கைக்குவித்துக் கும்பிடுதல்; வனங்குதல். தலைவணங்கி நிற்றல். “தலையே நீவணங்காய்” எனவரும் அப்பர் திருவாக்காலும் உணர்க. இனி, கடிமலர் தோகை கட்டுதிர் அதனை அன்போடு முண்டக முகைபோன்ற நும் முலைமுகம் தரிமின் எனினுமாம்.

5-8: உருளின்...................................உறுமின்

     (இ-ள்) உருளின் பூழி உள்ளூற ஆடுமின்-நம்பெருமானுடைய தேர் உருளையின் துகளை நும் உடலில் பொருந்த ஏற்றுக் கொள்வீராக!; எதிர்மின் இறைஞ்சுமின் ஏத்துமின் இயங்குமின்- அன்றியுமவனை நீவிர் எதிர்கொள்வீராக! அன்றியும் அவன் அடிகளில் வீழ்ந்து தொழுமின்! அன்றியும் அவனைப் புகழ்வீராக! இன்னும் அவனை அணுகிச் செல்வீராக! அன்றியும்; கருப்புரம் துதைந்தகல் உயர்மணித் தோள்வசம் படரும் மருந்தினும் உறுமின்-கருப்பூரம் பூசப்பட்ட மலையினும் உயர்ந்த அவனுடைய அழகிய தோளினது நறுமணத்தோடு வருகின்ற காற்றினூடும் பொருந்துவீராக! என்க.

     (வி-ம்.) உருளிற்பூழி-தேருருளையில் எழுகின்ற துகள். கருப்புரம்- கற்பூரம். கல்-மலை. மணி-அழகு, மருந்து-காற்று.

9-13: பெருங்கவின்.............................................கண்மின்

     (இ-ள்) முன்னாள் பெருங்கவின் பேணிய-முற்பிறப்பிலே இந்த நம்பியினுடைய பேரழகினை யாம் போற்றி நுகர்தற்கு அருந்தவம்- யாம் செயற்கரிய நோன்பினைச் செய்துள்ளோம் என்பதனை; கண்ணிடைக் காண்மின் உளத்திடைக் கருதுமின்- இப்பெருமான் நம்பால் வருதலின் அத்தவத்தின் காரியத்தை நுங்கள் கண்ணாலே காணுங்கள்! நெஞ்சத்தினும் நினைந்து நினைந்து மகிழ்வீராக! அன்றியும்; பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்-மலர்களையும் பொற்சுண்ணங்களையும் இந்நம்பியின் புகழ்பாடி அவனெதிரே தூவுவீராக! அன்றியும்; யாழில் பரவுமின்- யாழ் இசையோடே இவன் புகழைப் பாடி வாழ்த்துவீராக; ஈங்கு இவை அன்றி-இங்கு இவற்றைச் செய்தலோடன்றி; கலத்தும் என்று எழுமின்-இந்நம்பியை யாம் கூடுவோம் என்று துணிந்து எழுவீராக; கண் அளிகாண்மின்- அங்ஙனங் கூடுங்கால் அவனுடைய கண்ணின்கண் மெய்ப்பாடாகத் தோன்றும் அருளினும் அழுந்தி மகிழ்வீராக என்க.

     (வி-ம்.) பெருங்கவின்-பேரழகு. முற்பிறப்பில் தவம் செய்தார்க்கன்றி இத்தகைய பேறு எய்த மாட்டாது; இப்போது நமக்கு எய்தியதனாலேயே யாம் பண்டு அருந்தவம் செய்துள்ளோம் என்பது விளங்குகின்றது; என்பாள் முன்னாள் செய்த அருந்தவத்தை உளத்திடைக் கருதுமின் என்றாள். அத்தவத்தின் பயனாக நம்மெதிரே வருகின்ற நம்பியையும் கண்கூடாகக் காண்மின் என்பாள் கண்ணிடைக் காண்மின் என்றாள். பேணிய-பேணுதற்குக் காரணமான. எறிமின்-தூவுக. யாழ்-யாழிசை. கலத்தும்-கூடுவோம். கண்ணளி-கண்ணின்கட் தோன்றும் அருள். இனி முக்கட்பெருமானும் குணப்பெருங்கடவுளுமாகிய இறைவனுடைய சேவடியைத் தரித்த உள்ளத்தையுடைய ஊரனுடைய தேர் உதோ நம்விதி வந்தது வரலால் நம் ஏதம்தீர இருமருங்கும் எழுந்து தொழுதல் முதலியன செய்து அவனுடைய அளிகாண்மின் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.