|
|
செய்யுள்
11
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலையினிற்
சலியா நிலைமை யானும்
பலவுல கெடுத்த வொருதிறத் தானு
நிறையும் பொறையும் பெறுநிலை யானுந்
தேவர் மூவருங் காவ லானுந்
தமனியப் பராரைச் சைல மாகியு |
10
|
|
மளக்கவென்
றமையாப் பரப்பின தானு
மமுதமுந் திருவு முதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானு
முள்ளுடைக் கோட்டு முனையெறி சுறவ
மதிர்வளை தடியு மளக்க ராகியு |
15
|
|
நிறையுளங்
கருதி னிகழ்ந்தவை நிகழ்பவை
தருதலின் வானத் தருவைந் தாகியு
மறைவெளிப் படுதலிற் கலைமக ளிருந்தலி
னகமலர் வாழ்தலிற் பிரம னாகியு
முயிர்பரிந் தளித்தலிற் புலமிசை போக்கலிற் |
20
|
|
படிமுழு
தலந்த நெடியோ னாகியு
மிறுதியிற் சலியா திருந்த லானு
மறுமைதந் துதவு மிருமை யானும்
பெண்ணிடங் கலந்த புண்ணிய னாகியு
மருள்வழி காட்டலி னிருவிழி யாகியுங் |
25
|
|
கொள்ளுநர்
கொள்ளாக் குறையா தாகலி
னிறையுள நீங்கா துறையரு ளாகியு
மவைமுத லாகி யிருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி யுண்ணிதழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணுங் |
|
|
குடக்கோச்
சேரன் கிடைத்திது காண்கென
மதிமலி புரிசைத் திருமுகங் கூறி
யன்புருத் தரித்த வின்பிசைப் பாணன் பெறநிதி
கொடுக்கென வுறவிடத் தருளிய |
30
|
|
மாதவர்
வழுத்துங் கூடற் கிறைவ
னிருசரண் பெருகுநர் போலப்
பெருமதி நீடுவர் சிறுமதி நுதலே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று
துறை: ஓதற்குப்
பிரிய நினையும் தலைவன் தன் கருத்தினைத் தலைவிக்குக் கூறி ஆற்றுவித்தற் பொருட்டுக்
குறிப்பாகத் தோழியை நோக்கிக் கல்வியின் நன்மையைப் பெரிதும் பாராட்டிக் கூறுதல்.
(இ-ள்) இதற்கு, ஒன்றாத்
தமரினும் (தொல். 44. அகத்.) எனவரும் நூற்பாவின்கண், வாயினுங் கையினும் வகுத்த
பக்க்மொடு ஊதியம் கருதிய ஒருதிறத் தானும் என வரும் விதிகொள்க.
1-5:
நிலையினின்.............................................ஆகியும்
(இ-ள்) நிலையினில்
சலியா நிலையாமயானும்-தான் நிற்கும் நிலையினின்றும் அசையாத தன்மை உடைமையானும்;
பல உலகு எடுத்த ஒருதிறத்தானும்-நாடுகள் பலவற்றையும் கைகொண்ட ஒப்பற்ற ஆற்றலுடைமையானும்;
நிறையும் பொறையும் பெறும் நிலையானும்-நிறத்தையுடையவனும் பொறையுடைமையும் உண்டாகும்
இயல்புடைமையானும்; தேவர் மூவருங் காவலானும்-படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முத்தொழிலையுமுடைய
நான்முகனும் திருமாலும் சிவபெருமானுமாகிய இறைவர் மூவரும் தனக்குக் காவலாய் இருத்தலானும்;
பராரைத் தமனியச் சைலம் ஆகியும்-பரிய அடிப்பகுதியையுடைய பொன்னாகிய மகமேரு வாகியும்
என்க.
(வி-ம்.) இதன்கண்
கல்விக்கு மேருமலை உவமையாகக் கூறப்படுகின்றது. பொதுத் தன்மைகள் வருமாறு. கல்வியும்
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை உணர்த்தும் தன்னிலையிற் சலியாமையும்,
மேருவும்தான் உலகிற்கு நடுவாக நிற்கும் நிலையிற் சலியாமையும் காண்க. இனி, கல்வியும்
பலநாட்டிலும் பரவித் தன்வயப்படுத்தும் ஆற்றலுடைத்தாதலும் மேருவும் உலகத்தைத் தாங்குதலும்
காண்க. பல உலகு என்றது குறிஞ்சி முதலிய திணைகலை என்னை! மாயோன் மேய காடுறை உலகமும்...............என
வருதலும் காண்க. இனி, கல்வியும் நிறை உடைத்தாதலும் எல்லாப் பொருள்களையும் தனக்குள்
பொறுத்திருத்தலும் மேருவும் ஏனைப் பொருள்களினுங் காட்டில் நிறைவுடையதாயிருத்தலும்
உலகினைச் சுமத்தலும் காண்க.
இனிக் கல்வியும் இறைவனுடைய
திருவருளால், உண்டாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருதலும் தானே அக்கடவுளர்க்கு உறைவிடமாதலும்.
அங்ஙனமே மேருவும் கடவுளால் உண்டாக்கப்பட்டுத் தானே அக்கடவுளர்க்கு உறைவிடமாதலும்
காண்க. தேவர்மூவர்-நான்முகன் முதலியோர். தமனியச் சைலம்-பொன்மலை.
6-10:
அளக்க...........................................ஆகியும்
(இ-ள்) அளக்க என்று
அமையாப் பரப்பினதானும்; யாரானும் அளந்தறிதற்கு இயலாத விரிவுடைமையானும்-அமுதமும்
திருவும் உதவுதலாலும்-உலகினுக்கு அமுதத்தையும் திருவினையும் வழங்குதலானும்; பலதுறை முகத்தொடு
பயிலுதலானும்-பலவாகிய துறைமுகங்களை உடைத்தாய் இயங்குதலானும்; முள் உடை போட்டு முனைஎறி
சுறவம் அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்-இவ்வேதுக்களால் முள்ளையுடைய கோட்டின் முனையாலே
கொல்லுகின்ற சுறாமீன் முழங்குகின்ற சங்கினைக் கொல்லுதற்கிடனாகிய கடலை ஒத்தும்
என்க.
(வி-ம்.) யாவரானும்
அளக்கப்படாமை கல்விக்கும் கடலுக்கும் பொருந்துதல் உணர்க. இனி, கல்வி அமுதம் திரு
என்னும் மங்கல மொழிகளால் தொடங்குதலும் அல்லதூஉம் பயில்வோர்க்கு அமுதம்போன்று
சுவைத்தலும் திருவுண்டாக்குதலும் உடைத்தாதல் காண்க. கடல் அமுதத்தையும் திருமகளையும்
அளித்தமை புராணங்களால் உணர்க. கல்வியும் பல்வேறு துறைகளை உடைத்தாதலும் கடலும் அங்ஙனமே
பற்பல துறைகளை உடைத்தாதலும் உணர்க. கோட்டு முனையால் எறிகின்ற சுறவம் என்க. அதிர்வளை-முழங்கும்
சங்கம். அளக்கர்-கடல்.
11-12:
நிறை........................................ஆகியும்
(இ-ள்) நிறை உளம்
கருதின் நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின்-நிறைந்த நெஞ்சம் நினைக்குமிடத்தே நிகழ்ந்த
பொருள்களையும் நிகழப்போகும் பொருள்களையும் வழங்குதலாலே; வானத்தரு ஐந்து ஆகியும்-வானுலகத்திலுள்ள
கற்பக முதலிய தருக்கள் ஐந்தையும் ஒத்தும் என்க.
(வி-ம்.) நிறைஉளம்
என்பதற்குக் கல்வியால் நிறைந்த உள்ளம் என்றும், அவா நிறைந்த உள்ளம் என்றும்
பொருளுக்கும் உவமைக்கும் ஏற்றபெற்றி பொருள் கொள்க. கல்வியுடையோர் இறந்தகாலப்
பொருளையும் எதிர்காலப் பொருளையும் அறியும் ஆற்றலுடையராதலும் கற்பகத் தருவினை வழிபடுவோர்
நினைக்குங்கால் முக்காலப் பொருளையும் அக்கற்பகத்தரு வழங்கும் என்பதனையும் உணர்க.
தருவைந்தும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஐந்தருவாவன
சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிசாதம் என்பன. இவை பொன்னுலகில்
உள்ளன: வேண்டுவோர் வேண்டும் பொருளை யீவன.
(இ-ள்) மறை வெளிப்படுத்தலின்-மறைகளைத்
தோற்றுவித்தலாலும்; கலைமகள் இருத்தலின்-தன்பால் எப்பொழுதும் கலைமகள் குடிகொண்டிருத்தலாலும்;
அகமலர் வாழ்தலின்-(உள்ளத்) தாமரைமலரின்கண் வாழ்தலாலும்; பிரமனாகியும்-நான்முகனை
ஒத்தும் என்க.
(வி-ம்.) இதன்கன்
மறைவெளிப்படுத்தல் என்புழிக் கல்விக்கு மறைந்துள்ள நுண்பொருளையும் வெளிப்படுத்திக்
காட்டுதல் என்றும், பிரமனுக்கு வேதங்களைத் தோற்றுவித்தல் என்றும் பொருள் காண்க.
கலைமக்ளிருத்தல் உவமைக்கும் பொருளுக்கும் ஒத்தல் உணர்க. அகமலர் வாழ்தல் என்புழி.
கல்விக்கு உள்ளத்தாமரையில் உறைதல் என்றும், பிரமனுக்கு மலரகம் என மாற்றித் தாமரை
மலரின்கண் வாழும் என்றும் பொருள் கொள்க.
15-16:
உயிர்............................ஆகியும்
(இ-ள்) பரிந்து உயிர்
அளித்தலின்-இரங்கி உயிரைப் பாதுகாத்தலானும்; புலமிசை போக்கலின்-தன்னுருவத்தை
(உலகிற்கு) அறிவுடைமையின்கண் உயரச் செலுத்துதலினாலும்; படி முழுது அளந்த நெடியோன்
ஆகியும்-உலகம் முழுவதையும் தன் அடியினாலே அளந்தருளிய திருமாலை ஒத்தும் என்க.
(வி-ம்.) உயிர்-ஈண்டுச்
சிறப்பினால் மாந்தர் உயிர் என்பதுபட நின்றது. திருமாலும் கல்வியும் உயிர்களைப்
பாதுகாத்தல் உணர்க. புலமிசை போக்கலின் என்புழிக் கல்விக்கு அறிவை உயர்த்துதலால்
எனவும் திருமாலுக்குக் கூறுங்கால் தன்னை உலகிற்கு அப்பாற் போக்குதல் என்றும் பொருள்
கொள்க. புலம்-அறிவு, உலகம் என்பது பலபொருள் ஒருசொல். படி-நிலம். நெடியோன்-திருமால்.
அளித்தலினும் போக்கலினும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன.
17-19:
இறுதி...............................ஆகியும்
(இ-ள்) இறுதியில்
சலியாது இருத்தலானும்-பேரூழி முடிவினும் அழிகின்ற நிலைத்திருத்தலாலும்; அறுமை தந்து
உதவும் இருமையானும்-ஆறு உறுப்புக்களையும் தன்னிடத்துண்டாக்கி உலகிற்கு வழங்கும் பெருமை
உடைமையானும்; இடம் பெண்கலந்த புண்ணியன் ஆகியும்-இடப்பாகத்தே உமையை வைத்துள்ள
அறவோனாகிய சிவபெருமானை ஒத்தும் என்க.
(வி-ம்.) அறுமை-ஈண்டு
ஆறு என்னும் எண்ணின்மேல் நின்றது. இருமை வகை தெரிந்து ஈண்டறம் பூண்டார் எனவும்,
தெரிமாண்டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பு: எனவும் வருவன போல என்க. இறுதி-ஊழி
முடிவு. ஆறு-ஈண்டு ஆறு உறுப்புக்கள். அவையாவன: மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதி,
நிருத்தம், சோதிடம் என்பன. இனி இறைவனுக்குக் கூறுங்கால் மறுமை தந்துதவும் எனக் கண்ணழித்து
மறுமைப் பயனைத் தந்துதவுகின்ற எனப் பொருள் கொள்க. இனி, கல்வியும் சுத்தமாயையின்
பரிணாமமாதலின் அசுத்த மாயையாலாய உலகங்களின் அழிவின்கண் அழியாது நிற்பது கருதி
அங்ஙனம் கூறினார் எனினுமாம். இருமை-பெருமை. இனி, ஒருமையிற் கற்ற கல்வி சாவின்கண்
அழியாமல் எழுமையினும் தொடர்தல்பற்றி இறுதியிற் சகியாதிருத்தலின் என்றார் எனினுமாம்.
20:
அருள்..................................ஆகியும்
(இ-ள்) அருள்வழி
காட்டலின்-திருவருள் நெறியை விளக்குதலாலே; இருவிழி ஆகியும்-இரண்டு கண்களே ஆகியும்;
என்க.
(வி-ம்.) அருள்வழி-அருளை
மேற்கொண்டு செல்லும் வீட்டு நெறி. புறக்கண்கள் நல்ல நெறியைக் காட்டுதலும் உணர்க.
இனி,
கண்ணுடைய ரென்பவர்
கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லா தவர் (குறள். 393) |
எனவரும் திருக்குறளையும்
நினைக.
21-22:
கொள்ளுநர்....................................ஆகியும்
(இ-ள்) கொள்ளுநர்
கொள்ளக் குறையாதாகலின்-ஏற்றுக் கொள்ளுவோர் எவ்வலவு ஏற்றுக் கொள்ளினும் குறைதல்
இல்லாமையின்; நிறைஉளம் ந்ங்காது உறைஅருள் ஆகியும்-தான் நிறைந்த நெஞ்சினின்றும்
ஒருகாலத்தும் ந்ங்காமல் உறைகின்ற அருளை ஒத்தும் என்க.
(வி-ம்.) கொள்ளுநர்
கல்விக்குக் கூறுங்கால் நல்மாணாக்கரையும் அருளுக்குக் கொள்ளுங்கால் உயிர்களையும்
கொள்க. இனி அருளுக்குச் சமயக் கணக்கர் எனினுமாம். என்னை! ஒன்றனோடொன்று முரண்படுகின்ற
சமயங்கள் எல்லாம் அருளைக் கொள்ளுதலின் என்க.
23-24:
அவை..............................மாக்கள்
(இ-ள்) அவை முதலாகி-அவையின்கண்
முதன்மையுடையதாய்; இருவினை கெடுக்கும்-இருள்சேர் இருவினைகளையும் அழிக்கும்; புண்ணியக்
கல்வி உள்நிகழ் மாக்கள்-அறப்பண்புடைய கல்வியைத் தம்முள்ளத்தே நிகழ்விக்கின்ற
சான்றோர் என்க.
(வி-ம்.) அவை-நல்லவை.
நல்லவையின் இயல்பினை,
தொடைவிடை
உழாத் தொடைவிடை துள்ளித்
தொடைவிடை ஊழிவை தோலாத்-தொடைவேட்டு
அழிபடல் ஆற்றல் அறிமுறையேன் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை (புறப்பொ.
173) |
எனவும்,
குடிப்பிறப்
புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பெ ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை யவாஅ வின்மையென
இருபெரு நிதியமு மொருதா மீட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை
(ஆசிரியமாலை-புறத்திரட்டு) |
எனவும்,
குடிப்பிறப்புக்
கல்வி குணம்வாய்மை தூய்மை
நடுச்சொல்லு நல்லணி யாக்கம்-கெடுக்கும்
அழுக்கா றவாவின்மை அவ்விரண்டோ டெட்டும்
இழுக்கா வவையின்கண் எட்டு
(புறப்பொ. பழையஉரை. 173) |
எனவரும் பிற சான்றோஎ
இலக்கியங்களிலும் காண்க. இரிவினை-நல்வினை, தீவினை. நல்வினையும் பிறப்புக்குக்
காரணமாதலின் இருவினை கெடுக்கும் எனப்பட்டது. புண்ணியக் கல்வி-புண்ணியம் செய்ததற்குக்
காரணமான கல்வி. உள்நிகழ் மாக்கள்-உள்ளே நிகழ்விக்கும் மாக்கள் என்க. மாக்கள்
என்பது ஈண்டுத் தன் சிறப்புப் பொருளாகிய ஐயறிவுடையோரைக் குறியாமல் மாந்தர் என்னும்
பொதுப் பொருள் குறித்து நின்றது.
32:
சிறு..................................நுதலே
(இ-ள்) சிறுமதி-இளம்பிறையை
யொத்த; நுதலே-நெற்றியை யுடையோய் என்க.
(வி-ம்.) இது தலைவன்
தோழியை விளித்தபடியாம். சிறுமதி நுதல்: அன்மொழித்தொகை. ஏ; விளியுருபு.
25-32:
பரி........................................நீடுவர்
(இ-ள்) பரிபுரக்கம்பலை
இருசெவியுண்ணும் குடக்கோச்சேரன்-இறைவன் அம்பலத்திற் கூத்தாடுங்கால் அவன் திருவடியிலணிந்த
சிலம்புகளின் ஓசையைத் தன் இருசெவியாலும் கேட்டு மகிழும் பேறுடைய குடநாட்டு மன்னனாகிய
சேரமான்; மதிமலிபுரிசை
திருமுகங்கூறி-மதிமலிபுரிசை என்று அடி எடுத்துப் பாடி இந்த வோலையை; கிடைத்துக் காண்க
எனக் கூறி-பெற்றுக் காண்பானாக என்று திருவாய் மலர்ந்தருளி; அன்பு உருக்கரித்த இன்பு
இசைப்பாணன்-அன்பு தானே ஒருவடிவாகப் பெற்ற இனிய இசையினையுடைய பாணன்; நிதிபெறக்
கொடுக்கென- பொருளைப் பெறும்படி வழங்குவானாக என்று; உறவிடுத்து அருளிய-பொருந்தச்
செலுத்தியருளிய; மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்-பெரிய தவத்தையுடையோர் வணங்குகின்ற
நான்மாடக் கூடலுக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; இருசரண் பெருகுநர்போல-இரண்டாகிய
திருவடிகளையும் பெற்ற அடியார் போல; பெருமதி நீடுவர்-மிகுந்த மெய்யறிவின்கண் நெடிது
நிலைப்பர் காண் என்க.
(வி-ம்.) பரிபுரம்-சிலம்பு.
குடக்கோச்சேரன்-குடநாட்டுக் கோவாகிய சேரமாங் மதிமலிபுரிசை- மதிமலிபுரிசை என்னும்
தொடக்கத்தையுடைய செய்யுள்; அன்பே ஒரு வடிவங் கொண்டாற் போன்ற பாணன் என்க. பெருமதி-மெய்யறிவு.
மெய்யறிவின்கண் நீடுவர் என்றது மெய்யாய இன்பத்தின்கண் நிலைத்து வாழ்வர் என்றவாறு.
இனி இதனைச் சிறுமதிநுதலே! பொன்மலை முதலியவற்றை ஒப்பதாகிய கல்வியையுடைய மாக்கள்
இறைவன் சரண் பெருகுநர் போலப் பெருமதியின்கண் நீடுவார்காண் என வினைமுடிவு செய்க.
எனவே யானும் அக்கல்வியைப் பெறுதற்குச் சிறிதுகாலம் நும்மைப் பிரிந்து போவேன்.
நீ இக்கருத்தினைத் தலைவிக்குக் கூறி யான் வருமளவும் ஆற்றுவித்திடுவாயாக என்பது குறிப்பெச்சம்.
மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-பிரிவுணர்தல்
|