|
|
செய்யுள்
12
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
குரவ
மலர்ந்த குவையிருட் குழலி
யிருவே மொருகா லெரியத ரிறந்து
விரிதலைத் தோன்முலை வெள்வா யெயிற்றியர்க்
கரும்புது விருந்தெனப் பொருந்திமற் றவர்தரு
மிடியுந் துய்த்துச் சுரைக்குட மெடுத்து |
10
|
|
நீணிலைக்
கூவற் றெளிபுன லுண்டும்
பழம்புற் குரம்பை யிடம்புக் கிருந்து
முடங்கத ளுறுத்த முகிணகை யெய்தியு
முடனுடன் பயந்த கடவொலி யேற்று
நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்து |
15
|
|
முயர்ந்தவின்
பதற்கின் றுவம முண்டெனின்
முலைமுன் றணந்த சிறுநுதற் றிருவினை
யருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவ னாகி
மேதினி புரக்கும் விதியுடை நன்னா |
20
|
|
ணடுவூர்
நகர்செய் தடுபவந் துடைக்கு
மருட்குறி நிறுத்தி யருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வா ழிறைவன்
முண்டக மலர்த்தி முருகவி ழிருதா
ளுறைகுந ருண்ண மின்ப |
|
|
மறைய
லன்றி மற்றொன்று மடாதே. |
(உரை)
கைகோள் கற்பு. தலைவன் கூற்று
துறை: முன்னிகழ்வுரைத்தூட
றீர்த்தல்.
(இ-ள்) இதற்கு, கரணத்தி
னமைந்து முடிந்த காலை (தொல்-கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண்.
பயங்கெழு துணையணை
புல்லிய புல்லா
துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவிலும் |
எனவரும் விதிகொள்க.
1-4:
குரவம்..................................பொருந்தி
(இ-ள்)
குரவம் மலர்ந்த இருள்குவை குழலி-குரவ மலர்மாலை மலர்ந்துள்ள குவிந்த இருட்குவியல் போன்ற
கூந்தலை யுடையோய்!; ஒருகால் இருவேமும் எரி அதர் இறந்து-முன்பொரு பொழுது நாமிருவரும்
தீயையுடைய பாலைநில வழியிலே சென்று; விரிதலை தோல் முலைவெள்ளாய் எயிற்றியர்க்கு-விரிந்த
தலையினையும் தோலாகிய முலையினையும் வெள்ளிய வாயினையுமுடைய பாலைநில மகளிர்க்கு;
அரும் புது விருந்து எனப் பொருந்தி- அவர்கட்குக் கிடைத்தற்கரிய புதிய விருந்தென்று
அவர் பாராட்டும்படி பொருந்தி என்க.
(வி-ம்.) இது தனோடு
ஊடிக்கிடந்த தலைவியின் அடியை வருடியவாறே அவள் விரும்பிக் கேட்கும்படி பண்டு நிகழ்ந்த
நிகழ்ச்சி யொன்றினைத் தலைவன் அவட்குக் கூறத்தொடங்கியபடியாம். குரவம்-குரவமலர்.
குவை-குவியல். குழலி விளி. இருட்குவியல் தலைவியின் கூந்தலுக்குவமை. ஒருகால் என்றது
உடன்போக்கு நிகழ்ந்த காலத்தை. எரி-தீ. அதர்-வழி. தோல்முலை-வற்றித் தோலாகித்
தூங்குகின்ற முலை. விரிதலைத் தோன்முலை வெள்வாய் எயிற்றியர் என்னுந் தொடர் சொல்லோவியமாய்த்
திகழ்தல் உணர்க. ஒப்பாரும் மிக்காரும் இலராகிய தலைவனும் தலைவியும் எயிற்றியர்க்குக்
கிடைத்தற்கரிய விருந்தாதல் உணர்க. அரிய விருந்தினைப் பாராட்டுதலை,
கூடன் மகளிர்
கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது
(சிலப். மதுரைக். 14. 9. 14) |
எனவரும் மாதிரி கூற்றானும்
உணர்க,
4-7: மற்றவர்.................................இருந்தும்
(இ-ள்) அவர் தரும்
இடியும் துய்த்து-அவ்வெயின மகளிர் நமக்கு அன்புடன் அளித்த தினைமாவினையும் உண்டு பின்னர்;
சுரைக்குடமெடுத்து-சுரை நெற்றாலாகிய குடத்தைக் கொண்டு; நீள் நிலைகூவல் தெளிபுனல்
உண்டும்-ஆழ்ந்த நிலையினையுடைய கிணற்றின்கண் முகந்து தெளிந்த நீரைப் பருகியும் என்க.
(வி-ம்.) அவர்-எயிற்றியர்.
தரும் என்றது அன்போடு அளித்த என்பதுபட நின்றது. இடி-மா. ஈண்டுத் தினைமா என்க. சுரைக்குடம்-சுரைக்
குடுக்கை. நீள்நிலை கூவல் என்புழி நீளம் ஈண்டு ஆழத்தைக் குறித்து நின்றது.
8-11:
பழம்..................................உண்டெனின்
(இ-ள்) பழம்புல்
குரம்பை இடம் புக்கிருந்தும்-அவருடைய பழைய புல்லால் வேய்ந்த சிறுகுடிலில் புகுந்து தங்கியும்;
முடங்கு அதன் உறுத்த முகிழ் நகை எய்தியும்-அவ்வெயிற்றியர் நமக்குப் பாயலாகச் சுருட்டிவைத்த
தோலை விரித்துக் கொடுப்ப யாம் அச்செயலைக் கண்டு நம்முள் புன்சிரிப்புக் கொண்டும்
பின்னர்; உடன் உடன் பயந்த கடஒலி ஏற்று-அடிக்கடி தோன்றிய கடமாவினது முழக்கத்தைச்
செவியில் ஏற்றுக் கொண்டும்; நடைமலை எயிற்றின் இடைதலை வைத்தும்-யானையினது மருப்பின்மேல்
தலைவைத்துப் பாயல்கொண்டும்; உயர்ந்த இன்பு அதற்கு-அற்றைநாள் நுகர்ந்த பேரின்பத்திற்கு;
உவமம் இன்று உண்டெனின்-ஓர் உவமையும் இல்லை; ஓர் உவமை கண்டு கூறவேண்டுமெனின், என்க.
(வி-ம்.) புற்குரம்பை-புல்லால்
வேய்ந்த குடில். தம் தகுதிக் கொல்லாது என்பது தோன்றப் பழம்புற் குரம்பை இடம் என்றான்.
முடங்கதள்-சுருட்டிவைத்த தோல். புலி முதலியவற்றின் தோலைப் பாயலாகப் பயன்படுத்துதல்
அவர் இயல்பு. உறுத்த- விரிப்ப. அதனைக் கண்டு நகையெய்தி என்க. தமது தகுதிக்கு ஒவ்வாதிருந்தும்
அவர் அன்பு கருதி ஏற்றுக்கொண்டமையால் தம்முள் புன்னகை கொண்டனர் என்பது கருத்து.
முகிழ்நகை என்புழி நிலைமொழி இறுதி ழகர ஒற்று ணகர ஒற்றாய்த் திரிந்தது. முகிழ்நகை-புன்முறுவல்.
நடைமலை-யானை. வைத்தும் நுகர்ந்தன் இன்பம் என ஒரு சொல் வருவித்தோதுக. அதற்கு உவமம்
எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. உவமமும் இன்று என மாறுக. கடவொலி என்றும் பாடம்.
பாலைநிலமாகலின் இப்பாடம் சிறவாமை யுணர்க.
12-15:
முலை.....................................நன்னாள்
(இ-ள்) அணைந்த மூன்று
முலை சிறுநுதல் திருவினை-உயர்ந்த மூன்று முலைகலையும் சிறிய நெற்றியினையுமுடைய அழகுடைய தடாதகையை;
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து-நான்முகன் சடங்கு காட்டத் திருமனம் புணர்ந்து;
மதிக்குலம் வாய்த்த மன்னவன் ஆகி-திங்கள் மரபிற்றோன்றிய பாண்டிய மன்னனாய்;
மேதினி புரக்கும் விதியுடை நன்னாள்-இந்நில உலகத்தினைப் பாதுகாத்தருளும் முறைமையினையுடைய
நல்ல நாளிலே என்க.
(வி-ம்.)
அணந்த மூன்றுமுலை என மாறுக. அணத்தல்-நிமிர்தல். திரு-அழகு. பண்பாகு பெயராகக் கொண்டு
தடாதகைப் பிராட்டி என்க. என்னை! அப்பிராட்டியாரைத் திருமகள் போல்வாள் எனல்
சிறப்பின்மையால் என்க. அருமறை- அன்மொழித்தொகை. நான்முகன் என்க. மதிக்குலம்-திங்கள்
மரபு. மதிக்குலம் வாய்த்த மன்னவனைப் போல ஆகி என விரித்துக் கொள்க.
16-21:
நடுவூர்..............................அடாதே
(இ-ள்)
ஊர்நடு நகர்செய்து-மதுரை மூதூரின் நடுவிடத்தே திருக்கோயில் இயற்றி; அடுபவந் துடைக்கும்-அடியார்களை
வருத்துகின்ற பிறவிப்பிணியைக் கெடுத்தற்குக் காரணமான; அருள் குறிநிறுத்தி-திருவருட்குறியாகிய
சிவலிங்கத்தை அக்கோயிலின்கண் நிறுத்தி; தேவநாயகன்-தேவேந்திரனால்; அருச்சினை
செய்த- வழிபாடு செய்யப்பட்டமையாலே; கூடல்வாழ் இறைவன்- அம்மதுரைமா நகரத்தே எழுந்தருளியிருக்கின்ற
இறைவனுடைய; முருகு அவிழ் இருதாள்-நறுமணங் கமழும் இரண்டாகிய திருவடிகள் பொருந்துதற்
கிடனாக; முண்டகம் மலர்த்தி-தம்முடைய நெஞ்சத் தாமரை மலரை அன்பொளியாலே மலர்வித்து;
உறைகுநர்- சிவயோகத்தே தங்குகின்ற அடியார்கள்; உண்ணும் இன்பம் அறையல் அன்றி-நுகரும்
வீட்டின்பத்தைக் கூறலாமல்லது; மற்று ஒன்றும் அடாது-வேறு எவ்வின்பமும் உவமையாகாது என்க.
அந்நிகழ்ச்சியை நீ நினைத்துப் பார்த்ததுண்டோ என்பதாம்.
(வி-ம்.) நடுவூர்-ஊர்நடு.
நகர்-கோயில். பவம்-பிறப்பு. அருட்குறி-சிவலிங்கம். அருச்சினை-வழிபாடு. தேவநாயகன்-இந்திரங்
முண்டகம்-ஈண்டு நெஞ்சத்தாமரை என்க. முருகு-மணம். தேனுமாம். உறைகுநர் என்றது யோகத்திலிருக்கும்
சிவயோகிகளை. இனி, குழலி! யாம் இருவேமும் இறந்து, பொருந்தி, துய்த்து, எடுத்தும்
உண்டும் இருந்தும் எய்தியும் ஏற்றும் தலைவைத்தும் நுகர்ந்த இன்பத்திற்கு உவமம் இன்று
ஒரோஒவழி உண்டெனின் முண்டகம் மலர்த்தி இறைவன் தாள் உறைகுநர் உண்ணும் இன்பம்
அதற்கு உவமம் ஆகும் என்று அறையலன்றி மற்றொன்றும் அடாதுகாண் என இயைத்துக் கொள்க.
நீ அதனை உள்ளியும் அறிதியோ என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.
|