பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 13

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நண்ணிய பாதி பெண்ணினர்க் கமுத
மடுமடைப் பள்ளியி னடுவவ தரித்தும்
திருவடி வெட்டினு ளொருவடி வாகியும்
முக்கணி லருட்கண் முறைபெற முயங்கியும்
படியிது வென்னா வடிமுடி கண்டும்
10
  புண்ணிய நீறெனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி நிற்றொழா தேற்கு
நன்னரிற் செய்குறு நன்றியொன் றுளதால்
ஆயிரந் தழற்கரத் திருட்பகை மண்டிலத்
தோரொரு பனிக்கலை யொடுங்கிநின் றடைதவிற்
15
  கொலைநுதி யெயிறென் றிருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை யொருவிசை தடித்தும்
மதுவிதழ்க் குவளையென் றடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதையப் புகுந்தெடுத் தளித்தும்
செறிபிறப் பிறப்பென விருவகை திரியும்
20
  நெடுங்கயிற் றுசல் பரிந்துகலுழ் காலை
முன்னையிற் புனைந்து முகம னளித்தும்
தந்தவெங் குரிசி றனிவந் தெமது
கண்ணெனக் கிடைத்தெங் கண்ணெதிர் நடுநாட்
சமயக் கணக்கர் மதிவழி கூறா
  துலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் றோன்றிக் கூடலு ணிறைந்தோன்
25
  தன்னைநின் றுணர்ந்து தாமுமொன் றின்றி
யடங்கினார் போல நியும்
ஒடுங்கிநின் றமைதி யிந்நிலை யறிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தோழிக்கூற்று

துறை: நிலவு வெளிப்பட வருந்தல்.

     (இ-ள்) இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல். களவி. 23) என்னும் நூற்பாவின்கண் ‘புணர்ச்சி வேண்டினும்’ எனவரும் விதிகொள்க.

11-12: கொலை....................................தடிந்தும்

     (இ-ள்) கொலைநுதி எயிறு என்று-கொலைத்தொழிலினையும் கூர்மையுமுடைய மருப்பு என்று பெயர் கூறப்பட்டு; இருபிறை முளைத்த புகர்முகம்-வாயின்கண் இரண்டு பிறைகள் தோன்றப்பெற்ற புள்ளிகளையுடைய முகத்தினையுடைய யானை தன்னைவந்து எதிர்த்த நாளிலே; ஒருவிசை புழை கை தடித்தும்-ஒருமுறை அந்த யானையின் துளையையுடைய கையை வெட்டியும் என்க.

     (வி-ம்.) இது களிதரு புணர்ச்சி கூறுகின்றது. தலைவியை ஒரு யானை துரத்திவந்தபொழுது அதன் கையை வெட்டி வீழ்த்தித் தலைவன் அவளை உய்யக் கொண்டான் என்பது கருத்து. புகர்முகம்-யானை: அன்மொழித்தொகை. புழை-துளை. ஒருவிசை-ஒருமுறை. தடிதல்- வெட்டுதல்.

13-14: மதுவிதழ்,.....................................அளித்தும்

     (இ-ள்) மது இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த நெடுஞ்சுனை புதைய-எம்பெருமாட்டி ஒருநாள் தேனையும் இதழ்களையுமுடைய குவளை மலர்கள் என்று பெயர் கூறப்பட்டுக் கொல்லுகின்ற கண்களை மலர்ந்த நெடிய சுனையிடத்தில் நீராடுங்கால் முழுகாநிற்ப; புகுந்து எடுத்து அளித்தும்-அச்சுனை நீரினூடு புகுந்து அவளை எடுத்துக் கரையேற்றி உய்யக் கொண்டும் என்க.

     (வி-ம்.) இது புனல்தரு புணர்ச்சி கூறுகிறது. குவளை என்று கண் மலர்ந்த எனப் பொருளை உவமையாக்கிக் கூறினும் கண்போன்று குவளை மலர்ந்த சுனை என்க. புதைய-மூழ்க.

15-17: செறி....................................அளித்தும்

     (இ-ள்) செறிபிறப்பு இறப்பு என இருவகை திரியும்-பொருந்துகின்ற பிறப்பும் இறப்பும் போலப் போக்கும் வரவும் என்னும் இரண்டு கூறுபாடாகத் திரியும்; நெடுங்கயிறு ஊசல் பரிந்து கழலும்காலை-நெடிய கயிற்றினையுடைய ஊசலின்கண் எம்பெருமாட்டி ஏறி ஆடுகின்றுழி; அதன் கயிறு அற்றதனால் அழுதனளாக அப்பொழுது; முன்னையின் புனைந்து முகமன் அளித்தும்-முன்புபோல அவ்வூசற் கயிற்றினைச் சீர்திருத்திக் கொடுத்து அவள் மனமகிழும்படி இன்மொழிகள் பற்பல கூறித் தேற்றியும் என்க.

     (வி-ம்.) பிறப்பும் இறப்பும் ஊசல்வருவதற்கும் போதற்கும் உவமை. இருவகை-வருதலும் போதலுமாகிய இரண்டுவகை என்க. முன்னையில்-முன்புபோல. முகமன்-இன்மொழிகள். கலுழ்வாளைத் தேற்றி என்க. கலுழ்தல்-அழுதல்.

18-19: தந்த.....................................நடுநாள்

     (இ-ள்) தந்தஎம் குரிசில்-இங்ஙனமாக எம்பெருமாட்டிக்கு உற்றுழி யுதவி உயிர் வழங்கிய எந் தலைவன்; தனிவந்து எமது கண்கிடைத்து என-எம்பொருட்டுக் கொடுவிலங்குகள் திரியும் இக்கானகத்தே தமியனாய் வந்து யாங்கள் இழந்திருந்த எம்முடைய கண்கள் மீண்டும் எமக்குக் கிடைத்தாற்போல எமக்குக் கிடைத்தது; எம்கண் எதிர் நடுநாள்-எங்களுடைய கண்ணாற்கண்டு எதிர் கொள்ளும் இந்நள்ளிரவிலே என்க.

     (வி-ம்.) தந்த, உயிர் தந்த என்க. குரிசில்-தலைவங் கொடு விலங்குகள் திரியும் இக்காட்டு நெறியில் எம்பொருட்டு வந்தான் என்பாள் தனிவந்து என்றும், அவன் எம்மைப் பிரிதல் யாங்கள் கண்ணிழத்தலை ஒக்கும். அவன் வரவு அக்கண்களை யாங்கள் மீண்டும் பெறுதலை ஒக்கும் என்பாள். எம்கண் கிடைத்தென என்றாள். கிடைத்து என மாறுக. நடுநாள்-நள்ளிரவு.

7: பெருமதி

     (இ-ள்) பெருமதி-பெருமையினையுடைய திங்களே! என்க.

     (வி-ம்.) பெருமதி: விளி. இஃது இகழ்ச்சிக் குறிப்பு. மதி-திங்கள்.

1-2: நண்ணிய..................................அவதரித்தும்

     (இ-ள்) பாதி நண்ணிய பெண்ணினர்க்கு-தன்றிரு மேனியில் ஒரு கூறாகப் பொருந்திய உமாதேவியாரை உடையவர்க்கு; அமுதம் அடும்-உணவாகிய நஞ்சினை உண்டாக்கும்; மடைப்பள்ளியின் நடு அவதரித்தும்-மடைப்பள்ளியாகிய திருப்பாற்கடலின் நடுவே பிறந்து வைத்தும் என்க.

     (வி-ம்.) பாதி நண்ணிய பெண்-இடப்பாகத் தமர்ந்த உமை. பெண்ணினர்-பெண்ணையுடையோர். அமுதம்-உணவு. ஈண்டு நஞ்சு. அடுதல்-சமைத்தல். மடைப்பள்ளி-அடுக்களை. திருப்பாற்கடல் கடையுங்காலத்தே ஆங்குக் கடைகயிறாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சினைச் சிவபெருமான் உண்ணுதலால் அக்கடலைச் சிவபெருமானுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளி என்றார்.

3-7: திரு.................................நின்றெனை

     (இ-ள்) திருவடிவு எட்டினுள் ஒருவடிவு ஆகியும்-அன்றியும் அவ்விறைவனுடைய அழகிய எண்வகை வடிவங்களுள் நீ ஒரு வடிவமாகி இருந்தும்; முக்கணில் அருள்கண் முறைபெற முயங்கியும்-மேலும் அவ்விறைவனுடைய திருக்கண் மூன்றனுள் நீ அருட்கண் என்று கூறும் முறைமையினைப் பெறுமாறு அவன் திருமுகத்தே பொருந்திக் கிடந்தும்; படி இது என்னா அடிமுடி கண்டும்-திருமால் முதலிய தேவர்களாலும் இவற்றின் தன்மை இவை என்று கூறவியலாத அவ்விறைவனுடைய திருவடியையும் திருமுடியையும் நீ கண்டு வைத்தும்; புண்ணிய நீறு என பொலிகதிர் காற்றியும்-அன்றியும் அவ்விறைவனுடைய அறந்தரும் திருநீறு என்னும்படி பொலிகின்ற நிலவொளியினை வீசியும்; நின்றனை-புகழொடு நின்றாய் என்க.

     (வி-ம்.) எண்வகை வடிவம் முன்னர்க் கூறப்பட்ட.ன. அவற்றுள் திங்களும் ஒன்றாதல் உணர்க. இறைவனுடைய கண்கள் மூன்றும் ஞாயிறும் திங்களும் நெருப்பும் என்ப. அவற்றுள் இடக்கண் அன்னையின் கண்ணாகலின் திங்களாகிய அக்கண்ணை அருட்கண் என்றார். முறை-எண்ணு முறை. அஃதாவது ஞாயிறும் திங்களும் நெருப்பும் என்பது. படி: உவமை: தன்மை. இறைவனுடைய திருவடிக்கு உவமையாதல், தன்மையாதல் கூறினார் யாரும் இலர் என்க. திருமாலும் நான்முகனும் இம்முயற்சியிலே தோல்வி யெய்தினர். ஆகலின் படி இது என்னா அடிமுடி என்றார். இறைவனுடைய முடியில் திங்கள் இருத்தலின் முடிகண்ட நீ அடிகண்டிருத்தலும் இயல்பே என்பாள் அடிமுடிகண்டும் என்றாள். இது என்னும் ஒருமையைத் தனித்தனி கூட்டுக. புண்ணிய நீறு-புண்ணியம் உண்டாக்கும் நீறு என்க. “பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு” என, திருஞான சம்பந்தரும் அருளிச் செய்தல் காண்க. (திருமறை. 2 பரையின் வரலாறு. திருநீற்றுப் பதிகம் 5)

7-8: நின்.................................உளதால்

     (இ-ள்) நின் தொழுதேற்று-உன்னைத் தொழுகின்ற அடிசியாகிய எனக்கு; நன்னரில்-நினக்கியல்பான நற்பண்பினாலே; செய்குறும் நன்றி ஒன்று உளது-செய்யவேண்டிய நன்மை ஒன்றிருக்கிறது அதுதான் யாதெனின் என்க.

     (வி-ம்.) திங்கட் கடவுள் தனக்கு நன்றிசெய்யும் கடமையும் உடையன் என்பதற்கு ஏதுக்கூறுவாள் நின்னைத் தொழாத எனக்கு என்றாள். இனி நீ இயல்பாகவும் நன்மை செய்பவன் என்று போற்றுவாள் நன்னரிற் செய்குறும் நன்றி என்றாள். நன்னர்-ஈண்டு நற்பண்புடைமை. நன்றி-உதவி.

9-10: ஆயிரம்.....................................அடைதலின்

     (இ-ள்) பனி ஓரொருகலை ஒடுங்கிநின்று-நீதானும் நாள்தோறும் குளிர்ந்த கலைகளுள் வைத்து ஒவ்வொன்றாக ஒடுங்கி இறுதியில் ஒருகலையோடு நின்று பின்னரும்; இருள்பகை- இருளுக்குப் பகையாகிய; ஆயிரம் நெருப்புக் கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தோடு ஒன்றி நின் உருக்கரந்து பொருந்தும் வழக்கம் உடையையாதலின் இப்பொழுதும் என்க.

     (வி-ம்.) பனி-குளிர்ச்சி. இருட்பகை மண்டிலம்-ஞாயிற்று மண்டிலம்.

20-27 சமய.......................................அறிந்தே

     (இ-ள்) வளர்கவிப் புலவர்முன்-பொருள் வளரும் இயல்புடைய செய்யுள்பாடும் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் முன்; சமயக்கணக்கர் மதிவழி லூறாது-அகமும் புறமுமாகிய பலவேறு சமயங்களை மேற்கொண்ட சமயக்கணக்கர் கருத்தின்வழியே கூறாமல்; உலகியல் கூறி-உலகத்திலுள்ள எல்லா மாந்தர்க்கும் பொருந்தும் முறையானே கூறி; இது பொருள் என்ற-இதுவே மெய்ப்பொருள் என்று வரையறுத்துக் காட்டிய; வள்ளுவன் தனக்கு-திருவள்ளுவர் என்னும் தெய்வப்புலவர் இயற்றிய திருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரமாக; முதற்கவிபாடிய முக்கண்பெருமான்- முதலில் வெண்பாப்பாடியருளிய மூன்று திருக்கண்களையுடையவனும்; மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்-அங்கையற்கண்ணி அம்மையாரோடு தோற்றம் செய்து மதுரைமா நகரத்தில் நிறைந்தருளியவனும் ஆகிய சிவபெருமானை; நின்று உணர்ந்து-அவனது ஞான நெறியிலே நின்று உணர்ந்து;தாமும் ஒன்று இன்றி-தாம்என ஒருபொருளும் இல்லையாய்; அடங்கினர்போல-அவனே தாமாய் இரண்டறக் கலந்துவிட்ட அடியார்கள் போல; இந்நிலை அறிந்து-எமக்கு உண்டாயிருக்கின்ற இந்த நிலைமையை உணர்ந்து; ஒடுங்கி நின்று அமைதி-நீயும் வான்என நீயென இரண்டின்றி வானே நீயாய் ஒடுங்கி அமைவாயாக இஃதே யான் வேண்டும் வரம் என்பதாம்

     (வி-ம்.) சமயக் கணக்கர்-சமயங்களை வளர்க்கும் ஆசிரியன்மார். சமயக்கணக்கர் ஒவ்வொருவரும் கூறுவன வல்லாம் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன வன்றிப் பிற சமயத்தார்க்கும் பொருந்தாதனவே ஆதலும் வள்ளுவர் கூறும் நெறி எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்துவனவாதலும் பற்றிச் சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இதுவென்ற வள்ளுவன் என்றார். வள்ளுவன் ஈண்டு ஆகுபெயராய்த் திருக்குறளைக் குறித்து நின்றது. இப்புலவர் பெருமான் வள்ளுவரைப் பாராட்டும் இப்பாராட்டுரை நினைந்து நினைந்து இன்புறற்பாலது. வளர்கவி: வினைத்தொகை. நோக்குந்தோறும் நோக்குந்தோறும் புதிய புதிய பொருள் தோன்றுதலால் வளர்கவி என்றார். புலவர்-சங்கப்புலவர். திருவள்ளுவமாலையின்கண் முன்னிற்கும் அசரீரி நாமகள் என்னும் தலைப்பையுடைய இரண்டு பாடலும் நிற்க. இறையனார் பாடலே முற்செய்யுளாதல் உணர்க. அதுவருமாறு.

“என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
 நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்-குன்றாத
 செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
 மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்”

என்பதாம். மாது: அங்கையற்கண்ணி. நிறைந்தோன் தன்னை நின்றுணர்ந்து தாமுமொன்றின்றி அடங்கினர் என்பது சிவோகம் பாவனையால் நான் என்னும் முனைப்பின்றி அருளில் முழுகி இரண்டறக் கலத்தலை என்க. இனி நீயும் நீ தோன்றுதற்கிடமான விண்ணின்கண் அடங்கி நீ எனப்தின்றின்றி அவ்விண்ணேயாய் விடுதி என வேண்டு இத்தோழியின் தத்துவ உணர்ச்சி சாலவும் பெரிதென்க. இங்ஙனமாக ஒடுங்குதற்கு நீ முன்னரே நன்கு பழகி இருக்கின்றாய் என்பாள் ஆயிரந் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து ஓரொரு பனிக்கலை ஒடுங்கி நின்றடைதலின் என்றாள். இந்நிலை-யாங்கள் எம் பெருமானை வரவேற்றற்குரிய இந்தநிலை என்க.

     இனி, மதியே நீ திருப்பாற்கடலில் தோன்றினை; இறைவன் எண்வகை வடிவங்களுள் ஒன்றாய் இருந்தனை; அவன் முக்கண்ணில் அருட்கண்ணாகினை; அவன் அடிமுடியுங் கண்டனை: இத்துணைப் பெருந்தகைமையுடைய நீ எளியேம் பெண் என்று எமக்கிரங்காயாம் எம்பெருமானை எதிர்கொள்ளும் இந்நள்ளிரவில் நின் வடிவந் தோன்றாது மறைந்து விசுதி! எனத் தோழி, திங்கட் கடவுளை வேண்டுகின்றாள் என்க. இதனால் சிறைப்புறத்தே நின்ற தலைவனுக்குத் தலைவியின் துன்பத்தையும் அவள் அவனை இரவுக்குறியின்கண் எதிர்கொள்ளற்கு இடையூறு இருத்தலையும் குறிப்பாக உணர்த்தி வரைவு கடாவினாள் ஆதலும் உணர்க. இனி இச்செய்யுள் பற்றிப் பழைய உரையாசிரியர் கூறும் விளக்கம் வருமாறு:

     “அசரீரிவாக்குஞ் சரசோதியும் பாடியதன்றி, “என்றும் புலராதியாணர்நாட் செல்லுகினும்” என்றுசங்கத்தார்க்கு முன் முதன்மையாகப் பாடினமையின் ‘முதற்கவி’ என்றார். பொருளாவன-அறமும் பொருளின்பமும் வீடும். அவற்றுள் வீடு நூலாற் கூறப்படாமையின் மூன்றுமே கூறினார். இதுவென் றொருமையாற் சுட்டியது ஒழுக்கம் வழக்குத் தண்டமென்ற மூன்றனுளொழுக்க மொன்றுமே கூறுங் கருத்தினாலும், பல்சுவையி லின்பச்சுவை யொன்றுமே கூறுங் கருத்தினாலும், பலநீதியிலரசன் காவல் நடாத்து முறைமை கூறுங் கருத்தினுமென்க. நீயிமென்னு மும்மை யெச்சவும்மை. என்பதென ஒருசொல் வருவிக்க. இந்நிலயறியதலாவது-பெண்ணினரெனவே, ஏகாதச கலைஐ யுண்டது பார்ப்பதியும் சதுர்த்தசகலையை யுண்டது சிவனுமென்றறிதல், மடைப்பள்ளியினடுவவதரித்தெனவே-சதுர்த்த கலையையுண்டது அதற்கிறைவனாகிய வருணனென்றறிதல். திருவடினெட்டினுளொரு வடிவாகியெனவே-பிரதம கலையையுண்டது அக்கினியென்றும், துதியகலையை யுண்டது ஆதித்தனென்றும், தசமகலையையுண்டது வாயுவென்றும் அறிதல். முக்கணி லருட்கண்ணெனவே-பகையுமுறவு முண்டென்றறிதல். அடியறிகுவையெனவே-நவமகலையையுண்ட மறலியை யுதைத்ததென்றறிதல். முடியறிகுவையெனவே-நெரித்துச் சூடினமையும் பாம்புமுண்டாகுமென்றறிதல். மாதுடன் றோன்றியென மீட்டு மதுவதித்துப் பயங்கரந்தோன்ற நிறைந்தோனடங்கின போலவெனவே-திரிதியகலையையுண்டது விச்சுவதேவரென்றும், பஞ்சமகலையை யுண்டது வஷட்காரமென்றும், சஷடகலையையுண்டது பூசிக்கும் வாசவனென்றும், சத்தம கலையையுண்டது முனிவரென்றும், அஷடமகலையையுண்டது ஏகபாதவசமென்றும், துவாதச கலையையுண்டது பிதிர்க்களென்றும், திரயோதசகலையை யுண்டது குபேரனென்றும், பூரணக்கலையை யுண்டது பிரமாவென்றும் அறிதல். இவை நுகர்ச்சியும் வருத்துதலுங் குறித்துக் கூறினாள். அசரீரிவாக்கு-ஆகாசவாணி. சரசோதி-சரசுவதி.

     “மதியே! நீ செய்யும் நன்மைக்கு நாங்கள் செய்யு நன்மை, இக் கடவுளிருக்குங் கூடல் இஃதாதலானும், நீறு போலத் தூளாக்குதற்கதுபோல் வொளியைக் காட்டுதலானு மமைதியென்பதாதலா னீயுமமைய்வாயாகவென வினைமுடிவு செய்க.

     நிலவு வெளிப்பட வதனோடிரக்கங்கூறி வரைவுகடாவிய தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகப் புலந்து கூறினமையின் இது வெகுளி விலக்கென்னு மலங்காரமாயிற்று. மெய்ப்பாடும் பயனும் அவை.