பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 16

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உழைநின் றீரும் பிழையறிந் தீரும்
பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரு
மொன்று கிளக்க நின்றிது கேண்மி
னொருபாற் பசுங்கொடி திருநுதல் பொடித்த
குறுவெயர்ப் பொழுக்கெனக் பிறையமு தெடுக்கப்
10
  படிறர் சொல்லெனக் கடுநெஞ் சிறைப்ப
வண்டப் பொற்சுவர் கொண்ட வழுக்கை
யிறைத்துக் கழுவுவ தென்னக் கங்கைத்
துறைகொ ளாயிர முகமுஞ் சுழல
வப்பெருங் கங்கை கக்கிய திரையெனக்
15
  கொக்கின் றூவ லப்புற மாக
மாணிக் கத்தின் வளைத்த சுவரெனப்
பாணிக் குட்பெய் செந்தழல் பரப்பத்
தன்னாற் படைத்த பொன்னணி யண்ட
மெண்டிக் களந்து கொண்டன வென்னப்
20
  புரிந்த நெஞ்சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடிசூழ் சூரிய ராகத்
தயங்கிய மூன்றுகண் ணெங்கணு மாகக்
கூடன் மாநக ராடிய வமுதை
யுண்டு களித்த தொண்டர்க ளென்ன
25
  விம்மது வுண்ண வும்மையி னுடையோர்
முருகு நாறப் பருகுதல் செய்க
வேலனும் வெறிக்கள னேறுத லாக
வணங்காட்டு முதியோண் முறங்கோணெல் லெடுக்கப்
பிணிதர விசித்த முருகியந் துவைக்க
30
  வையவி யழலொடு செய்யிடம் புகைக்க
வின்னும் பலதொழிற் கிந்நிலை நின்று
மாறு பாடு கூறுத லிலனே
யீங்கிவை நிற்க யாங்களவ் வருவியி
லொழுகப் புக்குத் தழுவி யெடுத்து
35
  மொருமதி முறித்தாண் டிருகவுட் செருகிய
வேந்துகோட் டும்பல் பூம்புன மெம்முயி
ரழிக்கப் புகுந்த கடைக்கொ ணாளி
னெடுங்கை வேலா லடுந்தொழில் செய்தும்
பெறுமுயி ரிரண்டு மருவி யளித்த
40
  பொன்னெடுங் குன்ற மன்னிய தோளன்
செவ்வே தந்த மைதுய ரிருப்பக்
கூறு பெயரொடு வேறுபெய ரிட்டு
மறியுயி ருண்ணக் குறுகிவந் திருந்த
தெய்வங் கற்ற வறிவை
    யுய்யக் கூறினோர் நெஞ்சிடம் பொறாதே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.

துறை: வெறிவிலக்கல்.

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். கல, 23) எனவரும் நூற்பாவின்கண், ‘களம்பெறக் காட்டினும்’ என வரும் விதி கொள்க.

1-3: உழை..............................கேண்மின்

     (இ-ள்) உழை நின்றீரும்-ஈண்டுப் பக்கத்தே நின்று ஏவல் செவீரும்; பிழை அறிந்தீரும்-இந்தப் பிழையினால் இவளுக்கு இத்துன்பம் வந்தது என்று அறிந்து கொண்டீரும்; பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரும்-பழமையான குறி பார்த்தலாலே இவளுக்குற்ற நோயினை அறிந்து கூறிய நெடிய கண்களையுடைய கட்டுவித்தி முதலிய மகளிரும்; ஒன்று கிளக்க-இப்பொழுது யான் ஒரு காரியத்தைச் சொல்லாநிற்பேன்; இது நின்று கேண்மின்-இக்காரியத்தை விழிப்புடன் நின்று கேளுங்கள் என்க.

     (வி-ம்.) உழை நின்றார்-குற்றேவல் மகளிர். நெடுங்கண்மாதர் என்றது இகழ்ச்சி. என்னை? தலைவிக்கு உற்ற நோயின் காரணத்தைக் கண்டு கூறாமல் வேறு காரணம் கூறினார் என்றிகழ்வது தோழி கருத்தாகலின் என்க. ஒன்று-ஒரு காரியம். பழங்குறி-பழங்காலத்திலிருந்து வழங்கிவரும் குறி என்க. பிழை அறிந்தீர் என்றது செவிலி முதலியோரை.

4-5: பிறை............................எடுக்க

     (இ-ள்) பிறை அமுது ஒருபால் பசுங்கொடி-தன் சடையிலணிந்துள்ள பிறையின் கண் உண்டாகிய அமுதம் தன் ஒரு கூற்றிலே இருக்கும் பசிய பூங்கொடி போல்வளாகிய உமாதேயாருடைய; திரு நுதல் பொடித்த குறுவெயர்ப்பு ஒழுக்கு என எடுக்க-அழகிய நுதலில் தோன்றிய குறிய வியர்வை நீர்ப் புள்ளிகளின் வரிசைபோலத் தோன்றா நிற்பவும் என்க.

     (வி-ம்.) அம்மையின் நெற்றியில் வியர்வை தோன்றுமாப்போல சடையிலணிந்த பிறையின் உடலின் அமுடம் தோன்றாநிற்ப என்றவாறு. பிறையின் உடல் அமிழ்தமாகலின் அதனினின்றும் அமிழ்தமே வியர்வையாகவும் முகிழ்த்தது என்றார். ஒருபால் பசுங்கொடி என்றது அம்மையை. பிறைக்கு நுதலும், அமிழ்தத்திற்கு வியர்வையும் உவமை.

6: படிறர்..............................இறைப்ப

     (இ-ள்) படிறர் சொல்என-பொய்யருடைய மொழி நஞ்சினை சிந்துதல்போல, நெஞ்சு கடு இறைப்ப-தன் மிடறு நஞ்சினைச் சிந்தாநிற்பவும் என்க.

     (வி-ம்.) படிறர்-பொய்யர். சொல் நஞ்சினைச் சிந்துதல்போல என விரித்துக் கொள்க. கடு-நஞ்சு, நெஞ்சு-மிடறு.

7-9: அண்ட...............................சுழல

     (இ-ள்) கங்கைத் துறைகொள் ஆயிரம் முகமும்-தன் சடையிலணிந்துள்ள கங்கையினுடைய துறைகளையுடையாஅயிரம் முகங்களும்; அண்டப் பொன்சுவர் கொண்ட அழுக்கை-தன்னாற் படைக்கப்பட்ட அழுக்கினை; இறைத்துக் கழுவுவது என்ன-அகற்றிக் கழுவித் தூய்மை செய்வதுபோல அச்சுவர்காறும் சென்று; சுழல- சுழலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) அண்டச்சுவர் பொன்சுவர் எனத் தனித்தனி கூட்டுக. பழமையால் கொண்டுள்ள அழுக்கு என்க. இறைத்தல்-அகற்றுதல். இதனால் கூறியது இறைவன் கூத்தாடுங்கால் சடையிலுள்ள கங்கை அண்டச்சுவர் வரையிலும் பரவிச் சுழன்றது என்பதாம். கங்கை எண்ணிறைந்த முகங்கொண்டு பாயு இயல்புடையதாகலின் ஆயிரம் முகம் என்று சொல்லப்பட்டது.

10-11: அப்பெரும்..............................ஆக

     (இ-ள்) கொக்கின் தூவல்-தன் சடையில் அணிந்துள்ள கொக்கினது இறகுகள்; அப்பெரும் கங்கை கக்கிய திரை என-முற்கூறப்பட்ட பெரிய கங்கை வீசிய அலையினது நுரைகளைப்போல; அப்புறம் ஆக-அவ்வண்டச் சுவருக்கப்பால் சொல்லாநிற்பவும் என்க.

     (வி-ம்.) மேலே கூறப்பட்டமையின் அப்பெரும் கங்கை எனச் சுட்டினார். திரை கக்கிய நுரை என்க. திரை: ஆகுபெயர். கொக்கின் தூவல்-கொக்கிற்கு. தூவி தூவல் என்றாயிற்று. அப்புறம்-அண்டச்சுவருகு அப்பால். அப்புறமாக வென்றும் பாடம்.

12-13: மாணிக்...........................பரப்ப

     (இ-ள்) பாணிக்குள் பெய் செந்தழல்-தன் திருக்கையிற் கொண்ட சிவந்த நெருப்பு; மாணிக்கத்தின் வளைத்த சுவர் என-மாணிக்க மணியினாலே தன்னைச் சூழ எழுப்பியதொரு மதில் போல; செந்தழல் பரப்ப-சிவந்த பிழம்பினைப் பரப்பாநிற்பவும் என்க.

     (வி-ம்.) கூத்தாடுங்கால் கையிலேந்திய தீப்பிழம்பு தன்னைச் சூழ்ந்து இடையறாது தோன்றுதலாலே மாணிக்க மதிலை உவமை எடுத்தார். பாணி-கை.

14-16: தன்னால்........................சுழல்

     (இ-ள்) புரிந்த செஞ்சடை-தன்னுடைய திரித்துவிட்டாற் போன்ற சிவந்த சடைக்கற்றை; தன்னால் படைத்த பொன் அணி அண்டம்-தன்னாற் படைக்கப்பட்ட பொன்னாகிய அழகிய அண்டத்தை; எண்திக்கு அளந்து கொண்டன என்ன-எட்டுத் திக்குகளிடத்தும் பரவி அளந்து கொள்வனபோல; நிமிர்ந்து சுழல-உயர்ந்து எட்டுத் திக்குகளிலும் சென்று சுழலாநிற்பவும் என்க.

     (வி-ம்.) எண்டிக்கும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. ‘ஊட்டி அன்ன ஒண்டளிர்ச் செயலை’ என்றாற் போலப் புரியாததனைப் புரிந்த செஞ்சடை என்றார். எண்டிக்குகளினும் சென்று சுழல என்க.

17-18: மேருவின்......................................எங்கணுமாக

     (இ-ள்) தங்கிய மூன்றுகண்-விளங்கிய தன்னுடைய மூன்று திருக்கண்களும்; மேருவின் முடிசூழ் சூரியராக-மேருமலையின் முடியைச் சுற்றி வருகின்ற பல ஞாயிற்று மண்டிலங்களைப் போலத் தோன்றும்படி; எங்கணும் ஆக-எல்லாவிடங்களினும் தோன்றாநிற்ப என்க.

     (வி-ம்.) இஃது இல்பொருள் உவமை. இனி துவாதசாதித்தர் என்பது பற்றிச் சூரியர் எனப் பன்மை கூறினார் எனினுமாம். எங்கணும்-எல்லா இடங்களிலும் சுரியராக என்புழி: ஆக: உவம வுருபு. மூன்று கண்ணும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது.

19-20: கூடல்.................................என்ன

     (இ-ள்.) கூடல்மா நகர் ஆடிய அமுதை-நான்மாடக் கூடலாகிய பெரிய நகரத்தின்கண் இன்பக் கூத்தாடியருளிய இறைவனாகிய அமிழ்தத்தை; உண்டு களித்த தொண்டர்கள் என்ன-தங் கண்ணாகிய வாயினாலே பருகி மகிழ்ந்த மெய்யடியார்களைப் போல என்க.

     (வி-ம்.) 4-19. பிறை அமுதெடுக்கவும் நெஞ்சுகடு இறைப்பவும் கங்கையின் ஆயிர முகமும் சுழலவும் தூவல் அப்புறம் ஆகவும், தழல் பரப்பவும், சடை சுழலவும் கண்கள் எங்கணும் ஆகவும் ஆடிய அமுது என இயைத்துக்கொள்க. இறைவனாகிய அமுது என்க.அமுதை என்றதற்கேற்பக் கண்ணாகிய வாயால் உண்டு களித்தேன்க. தொண்டர்கள்-மெய்யடியார்.

21-22: இம்மது....................................செய்க

     (இ-ள்) இம்மது உம்மையின் உண்ண உடையோர்-இவ்வெறிக் களத்தில் உதோ நீயிர் வைத்துள்ள இந்தக் கள்ளைப் பருகுவதற்கு முற்பிறப்பிலே தவம் செய்துடையோர்; முருகு நாற பருகுதல் செய்க-அதன் நாற்றம் யாண்டும் கமழும்படி விரும்பியபடியே பருகுவாராக என்க.

     (வி-ம்.) வெறிக்களத்தில் வைக்கப்பட்டுள்ள கட்குடத்தைச் சுட்டிக் கூறுகின்றாளாகலின் இம்மது என்றாள். மது-கள். கட்குடிக்கும் தீய பழக்கம் பிறப்புத்தோறும் தொடர்ந்து வருவதொன்று என்றிகழ்வாள் மது உண்ண உம்மையின் உடையோர் என்றாள். உம்மை-முற்பிறப்பு. முருகுநாற என்றது இகழ்ச்சி. முருகு-மணம். நாறுதல்-வீசுதல். மணம் கமழ என்பது தீ நாற்றம் பரவ என்றவாறு. உண்டுகளித்த தொண்டர்போல இம்மதுவினை உண்ணுந் தவமுடையார் உண்ணுக என இயைத்துக் கொள்க.

23-24: வேலனும்.........................எடுக்க

     (இ-ள்) வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக-அன்றியும் ஈண்டு வேறியாடுதற்கு வந்துள்ள வேன்மகனும் வெறுயாடு களத்தின்கண் ஏறும் தொழில் தடையின்றி நிகழ்வதாக; அணங்கு ஆட்டு முதியோள்-தெய்வம் ஏறி ஆடுதலைச் செய்யும் மூதாட்டியாகிய இக்கட்டுவித்தி தானும்; முறம் கொள் நெல் எடுக்க-தன் வழக்கப்படியே அவள் முறம் கொள்ளும் அளவும் நெல்லை முகந்து கொள்வாயாக என்க.

     (வி-ம்.) வேலன்-வெறியாட்டாளங் வெறிக்களன்-வெறியாடு களம். அணங்கு-தெய்வம். முதியோள்-ஈண்டுக் குறிகூறிய கட்டுவித்தி. அவள் நோக்கம் உண்மையைக் கண்டு கூறுவதன்று. தன் முறம் நிறைய நெல் கோடலே என்று குறிப்பால் இகழ்வாள் முறங்கொள் நெல் எடுக்க என்றாள்.

25-29: பிணி....................................நிற்க

     (இ-ள்) பிணிதர விசித்தமுருகு இயம் துவைக்க-இறுகுதலுண்டாக விசைத்துக் காட்டிய வெறியாட்டுப் பறையும் இனி முழங்குவதாக; ஐயவி அழலொடு செய் இடம் புகைக்க-அன்றியும் வெண்சிறு கடுகினைத் தீயிலிட்டுப் புகைத்தல் செய்யும் இடத்தே புகைக்கப்படுவதாக; இன்னும் பலதொழிற்கு இந்நிலை நின்று மாறுபாடு கூறுதல் இலன்-மேலும் இங்ஙனமே ஈண்டு நிகழவிருக்கும் பல்வேறு தொழில்களுக்கும் இவ்வண்ணம் யான் இங்கு நின்று உடன்பாடு கூறுதலல்லது மாறுபாடு சிறிதும் கூறுவேனல்லேன்; ஈங்கிவைநிற்க-இதுகாறும் கூறியவை ஒழிய என்க.

     (வி-ம்.) பிணிப்பு-கட்டு. விசித்தல்-விசைத்துக் கட்டுதல். முருகு இயம்-முருகனுக்குரிய பறை. அது வெறியாட்டுப் பறை. துவைத்தல்-முழங்குதல். ஐயவி-வெண்சிறு கடுகு. செய்யிடம்-புகை செய்யுமிடம்; இன்னும் பல தொழில் என்றது வெறியாடலும் கன்னந் தூக்கலும் பிறவுமாம். மாறுபாடு கூறுதல் இலன் என்பது உடன்படுதலல்லது மாறுபாடு கூறுதல் இலன் என்பதுபட நின்றது. இவை-யான் சொன்ன இவை. நிற்க என்றது இவையெல்லாம் எனக்குப் பொருளில்லை என்பதுபட நின்றது.

29-37: யாங்கள்..................................இருப்ப

     (இ-ள்) யாங்கள் அ அருவியில் ஒழுக-யாங்கள் எப்போதும் நீராடும் அந்த அருவியிலே வழக்கம்போல் ஒருநாள் நீராடுங்காலத்தே நீர் பெருகி எம்மை இழுத்துச் செல்லலாலே யாங்களும் அந்நீரோடு செல்வோமாக அங்ஙனம் செல்லுங்கால்; புக்குத் தழுவி எடுத்தும்-எங்கிருந்தோ வந்து அந்நீரினுட் புகுந்து எம்மைத் தன் கையால் தழுவி எடுத்துக் கரையேற்றியும் அன்றியும் மற்றொரு நாள்; பூம்புனம்-யாங்கள் விளையாட்டயர்ந்த பூம்பொழிலின்கண்; ஒருமதி முறித்து இருகவுள் செருகிய ஏந்து கோட்டு உம்பல்-ஒரு திங்களை இரு கூறாகப் பிளந்து தனது இரண்டு கவுளிலும் செருகி வைத்தாற்போன்ற உயர்ந்த மருப்புக்களையுடைய ஒரு களிற்றியானை; எம் உயிர் அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்-எம் உயிரைக் கொல்லும்படி அவ்விடத்தே வந்து புகுந்த எம் வாழ்வின் இறுதி நாளிலே; ஆண்டு நெடுங்கை வேலால் அடுந் தொழில் செய்தும்-அவ்விடத்தும் வந்து தன்னுடைய நெடிய கையில் ஏந்திய வேற்படையினாலே அக்களிற்றியானையைக் கொல்லும் தொழிலைச் செய்தும்; பெறும் உயிர் இரண்டும் மருவி அளித்த-யாம்பெறும் இரண்டு உயிரையும் இவ்வாறு உற்றுழி எம்மை அணுகிப் பாதுகாத்தருளிய; பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன்-நெடிய பொன்மலை நிலபெற்றாற் போன்ற தோளினையுடைய ஒரு தோன்றல்; செவ்வே தந்தமை துயர் இருப்ப-எம்பெருமாட்டிக்கு நேரே தந்தமையால் உண்டான இத்துயர்க்குக் காரணம் இங்ஙனம் இருப்பவும் என்க.

     (வி-ம்.) ஒருமதி இருகவுள் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. உம்பல்-யானை. கடைக்கொள் நாள்-சாக்காடு வந்துற்ற நாள். அந்த யானையை அடுந்தொழில் செய்தும் என்க. பெறும் உயிர்-பெறுதற்கு அவாவும் உயிர் என்க. இரண்டுயிர்-தலைவியுயிரும், தன்னுயிரும். செவ்வே தந்த மைதுயர் எனக் கண்ணழித்து மை-மயக்கம் எனக் கூறினுமாம். காரணம் இங்ஙனம் இருப்ப என்க.

38-41: கூறு.......................பொறாதே

     (இ-ள்) கூறுபெயரோடு வேறுபெயர் இட்டு-தாய் தந்தையர் இட்ட இயற்பெயரோடே பேய்கொண்டாள் என்று வேறொரு காரணப்பெயரும் இட்டு; குறுகி வந்து மாறி உயிர் உண்ண இருந்த-இவ் வேலனை அணுகி வந்து இந்த ஆட்டுக்கிடாயின் உயிரை உண்ணுதற்கு ஈண்டுக் காத்திருந்த தெய்வமானது; கற்ற அறிவை-இந்நோய் தீர்தற்குக் கற்றுள்ள அறிவினை; உய்ய கூறில் ஓர்நெஞ்சு இடம் பொறாது-இவள் உய்தற்பொருட்டுக் கூறின் அளியேனுடைய ஒரு நெஞ்சு இடந்தராது என்க.

     (வி-ம்.) கூறுபெயர்-தாய் தந்தையர் இட்ட பெயர். வேறு பெயர்-பேய்கொண்டாள் என்னும் காரணப் பெயர். மறி-ஆட்டுக்கிடாய். நோய்க்குக் காரணம் அந்த நம்பியின் தோள்களாகவும் அது தீர்க்கும் மருந்தும் அவைகளே யாகவும், இவ்வுண்மை உணராமல் இவள் நோய் தீர்த்தற்கு வேலனை அணுகி வந்து இவ்வேழை மறியின் உயிருண்ணக் காத்திருந்த இத்தெய்வத்தின் அறியாமையை யாரே கேட்டுப் பொறுப்பர் என்றவாறு. இனி இதன்கண் யாங்கள் அருவியில் ஒழுகப் புக்குத்தழுவி எடுத்தும் என்றது புனல்தரு புணர்ச்சி. உம்பல் அடுந்தொழில் செய்தும் என்றது களிறுதரு புணர்ச்சி. இவ்வி ரண்டும் ஏதீடு. பொன்னெடுங்குன்றம் மன்னிய தோளன் என்றது ஏத்தல் என்க.

     இனி, இத்ஃனை அறிந்தீரும் மாதரும் யான் ஒன்று கிளக்க இது கேண்மின் ஆடிய அமுதை உண்டுகளித்த தொண்டர்கள் என்ன இம்மதுவினை உடையோர் பருகுதல் செய்க. வேலனும் ஏறுதலாக; முதியோள் எடுக்க; இயம்துவைக்க: ஐயவி புகைக்க; யான் இவற்றிற்கு மாறுபாடு கூறுதலிலன் இவை நிற்க. ஒருநாள் யாங்கள் அருவியில் ஒழுக எடுத்தும், பின்னொரு நாள் எம் உயிரழிக்கப் புகுந்த உம்பலை அடுந்தொழில் செய்தும், எம் உயிர் இரண்டும் அளித்த தோளன் தந்த துயர் இருப்ப, அதற்குப் பெயரிட்டு உண்ண இருந்த தெய்வம் கற்ற அறிவைக் கூறின் ஒரு நெஞ்சு இடம்பொறாது என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.