பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 30

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வள்ளுறை கழித்துத் துளக்குவேன் மகனு
மன்பும யிற்கழுத் தும்மலை யடியு
நெற்பிடித் துரைக்குங் குறியி னோரு
நடுக்கஞ ருற்ற பழங்கணன் னையரு
மயரா வெறியிற் றண்டா வருநோ
10
  யீயா துண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலைப் புணர்க்குவ வென்னாம்
நான்கெயிற் றொருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை
யறுகால் குளிக்கு மதுத்தொடை யேந்த
முட்டாட் செம்மலர் நான்முகத் தொருவ
15
  னெண்ணிநெய் யிறைத்து மணவழ லோம்பப்
புவியலந் துண்ட திருநெடு மாலோ
னிருகர மடுக்கிப் பெறுநீர் வார்ப்ப
வொற்றை யாழியன் முயலுடற் றண்சுட
ரண்டம் விளர்ப்பப் பெருவிளக் கெடுப்ப
20
  வளவாப் புலன்கொள விஞ்சைய ரெண்மரும்
வள்ளையிற் கருவியிற் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரஞ் சென்னி யாக்க
வுருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப
மும்முலை யொருத்தியை மணந்துல காண்ட
25
  கூடற் கிறைவ னிருதா ளிருத்துங்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப்
பிறவியுங் குற்றமும் பிரிந்தன போலப்
பீரமு நோயு மாறின்
வாரித் துறைவற் கென்னா தும்மே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: இன்னலெய்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் ‘வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்’ எனவரும் விதிகொள்க.

1-5: வள்ளுறை.........................வெறியில்

     (இ-ள்) வள்உறை கழித்து-வலிய உறையினை நீக்கி; துளக்குவேல் மகனும்-திரிகின்ற வேலையுடைய மகனாகிய வேலனும்; நெல்பிடித்து அன்பும் மயில் கழுத்தும் மலை அடியும் உரைக்கும் குறியினோரும்-முறத்திலே பரப்பிய நெல்லினை மூன்றும் இரண்டும் ஒன்றும்படக் கையால் அள்ளிப்பிடித்து உதோ எமக்கு முருகனும் அவன் ஏறும் மயிலின் எருத்தும் அவனது கோழிக் கொடியும் தோன்றுகின்ற என்று கூறுகின்ற குறிசொல்லுதலையுடைய கட்டுவித்தியரும் அவர் இது தெய்வத்தினாலாயது என்று கூறியதனால்; நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும்- நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினால் வந்த மெலிவினையுடைய எஞ்செவிலித்தாயருங் கூடி; அயரா வெறியில்-நிகழ்த்தாநின்ற இவ்வெறியாடலாலே என்க.

     (வி-ம்.) வள்-வலிமை. துளக்குதல்-சுழற்றுதல். வேன்மகன்-வேலன் (பூசாரி) அன்பு-முருகன் அன்பு என்னும் சொற்கு முருகு என்பதும் பொருளாகலின் முருகனை அன்பு என்றாள். அன்பே கடவுள் என்பது ஈண்டு நினைக. கழுத்தையுடைய மயில் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்ளினுமாம். மலையடி-போர் செய்யும் இயல்புடையன ஆதல் உணர்க. கட்டுவித்தியர் முறத்தில் நெல்லைப் பரப்பி அதனைக் கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு தெய்வமேறப் பட்டு மெய்விதிர்த்து உதோ முருகன் வந்தான்! உதோ மயில் தோன்றுகின்றது! உதோ சேவல் தோன்றுகின்றது! என்று கூறிக் குறிகூறுதல் இயல்பாகலின் அவரை நெற்பிடித்து அன்பும் மயிலும் மலையடியும் உரைக்கும் குறியினோர் என்றாள். இதனை,

“குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
     கூறன்சிற் றம்பலத்தான்
இயலிகன் றேயென்ன லாகா
     இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
     காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
     றோன்று மவன்வடிவே”      (திருக்கோவையார். 285)

எனவரும் மணிவாசகர் வாக்கானும் உணர்க. அயர்தல்-நிகழ்த்துதல். வேல்மகனும் குறியினோரும் அன்னையரும் கூடி நிகழ்த்தும் வெறியாடலால் என்க.

5-7: தண்டா............................என்னாம்

     (இ-ள்) ஈயாது உண்ணுநர் நெடும்பழிபோல-வரியார்க்கு வழங்காமல் தாமே உண்ணுகின்ற புன்செல்வருக்கு உண்டாகிய பெரிய பழி நீங்காததுபோல; தண்டா அருநோய்-தீராத பெறுதற்கரிய என்னுடைய இந்நோய்; போகாக்காலை- ஒழியாதவிடத்தே; புணர்க்குவ என்னாம்-அயலாஎ எம்மேல் ஏறட்டுக்கூறும் பழிசொல்லால் எந்நிலையாதாம் என்க.

     (வி-ம்.) இதலே புகழாதலின் ஈயாமை நெடும்பழியாயிற்று. தண்டாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது. அருநோய்- பெருதற்கரிய நோய். இவ்வெறியாடலால் எம்நோய் ஒழியாதவிடத்தே ஏதிலார் அலர் தூற்றுதல் ஒருதலை அங்ஙனம் தூற்றின் யான் இறந்துபடுதலும் ஒருதலை என்பாள் போகாக்காலை புணர்க்குவ என்னாம் என்றாள்.

8-11: நான்கு....................ஓம்ப

     (இ-ள்) நான்கு எயிற்று ஒருத்தல் பிடர் பொலிவாரைப் பகை-நான்கு மறுப்பினையுடைய அயிராவதம் என்னும் களிற்றி யானையின் எருத்திலே இருந்து பொலிவுறுகின்ற மலைகளின் பகைவனாகிய தேவேந்திரன்; அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த-ஆறு கால்களையுடைய வண்டுகள் குடைதற்கிடனான தேனையுடைய மலர்மாலையினை ஏந்தி நிற்பவும்; முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்-முள்ளைத் தண்டின்கண்ணுடைய செந்தாமரை மலரிலிருக்கும் நான்கு திருமுகங்களையுடைய பிரமன்; எண்ணிநெய் இறைத்து மண அழல் ஓம்ப-மறைமொழி கணித்து நெய்பெய்து திருமன வேள்வித்தீயினை வளர்ப்பவும் என்க.

     (வி-ம்.) நான்கெயிற்றொருத்தல்-அயிராவதம். வரைப்பகை: அன்மொழித்தொகை. இந்திரன் என்க. இந்திரன் மலைகளின் சிறகரிந்தமையால் வரைப்பகை என்றாள். இங்ஙனமே ஞாயிற்றைப் பனிப்பகை என்றும் முருகனைச் சூர்ப்பகை என்றும் வழங்குதலுமுணர்க. அறுகால்: அன்மொழித்தொகை. மது-தேன். தொடை-ஒருவகை மாலை. எண்ணி என்றது மந்திரம் ஓதி என்றவாறு. எண்ணுதல்-கணித்தல். மணவழல்-மணவேள்வித்தீ

12-17: புவி...........................விளைப்ப

     (இ-ள்) புவி அளந்து உண்ட திருநெடுமாலோன்-நிலத்தினை அளந்து பின்னர் உண்டருளிய நெடியோனாகிய திருமால்; இருகரம் அடுக்கி பெறுநீர் வார்ப்ப-இரண்டு கைகளையும் கூட்டி மகட்பெறுதற்குக் காரணமான நீர்வார்த்துக் கொடுப்பவும்; அண்டம் விளர்ப்ப-உலகமெல்லாம் விளங்கும்படி; ஒற்றை ஆழியன்- ஒற்றையுருளையுடைய தேரினையுடைய கதிரவனும்; முயல் உடல் தண்சுடர்-முயலென்னும் மறுவினையுடைய உடலினையுடைய குளிர்ந்த ஒளியையுடைய திங்கட்கடவுளும்; பெரு விளக்கு எடுப்ப-பெரிய திருவிளக்குகளை ஏந்தி நிற்பவும்; விஞ்சையர் எண்மரும் புலன்கொள அளவா-விச்சாதரர் எண்மரும் இசையினைத் தாளத்தால் அளந்து யாவரும் செவியால் இனிது நுகரும்படி; வள்ளையின் கருவியில்-தோல் போர்த்தலையுடைய இசைக்கருவியாகிய யாழினை வருடி; பெரும்புகழ் விளைப்ப-தனது பெரிய புகழினைப் பண்ணிற்பாடா நிற்ப என்க.

     (வி-ம்.) திருமால் நீர்வார்ப்பவும், ஞாயிறும் திங்களும் விளக்கேந்தவும், விஞ்சையர் புகழ்பாடவும் என்க. மகளை மணமகன் பெறுதற்கு உரிமை கொடுக்கும் நீர் என்பார் பெறுநீர்வார்ப்ப என்றார். ஒற்றையாழி: அன்மொழித்தொகை ஒற்றையாழியையுடைய தேர் என்க. முயல்-திங்கள் மண்டிலத்திலுள்ள மறு. தன்சுடர்-திங்கள். விஞ்சையர்-விச்சாதரர். அளவா-அளந்து. புலன்கொள்ளுதல்-செவியேற்றல். வள்ளை-தோல். யாழின் பத்தரைத் தோலால் போர்த்தலின் அதனை வள்ளையின் கருவி என்றாள். “விளக்கழு லுருவின் விசியுறு பச்சை” என்றார் பிறரும்.

18-21: முனிவர்....................இறைவன்

     (இ-ள்) முனிவர் சென்னி செங்கரம் ஆக்க-முனிவர்கள் தம்முடைய சிவந்த கைகள் தலையின் மேலாகக் கூப்பித் தொழா நிற்பவும்; உருப்பசி முதலியோர் முன்வாழ்த்து எடுப்ப-ஊர்வசி முதலிய அரம்பையர் முன்னின்று வாழ்த்துப் பாடாநிற்பவும்; மும்முலை ஒருத்தியை மனந்து உலகு ஆண்ட-மூன்று முலைகளையுடைய ஒப்பற்ற தடாதகைப் பிராட்டியாரைத் திருமணம் புணர்ந்துகொண்டு உலகினைப் பாதுகாத்தருளிய; கூடற்கு இறைவன்-மதுரைமா நகரத்திற்குத் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளுடைய என்க.

     (வி-ம்.) ஆக்க எனவே குவிப்ப என்றாயிற்று. உருப்பசி-வானவர் நாட்டு நாடகமகளிருள் ஒருத்தி. முன்வாழ்த்து-பழைய வாழ்த்துமாம். மும்முலை ஒருத்தி-தடாதகை.

21-25: இருதாள்....................ஆதும்மே

     (இ-ள்) இருதாள் இருத்தும்-இரண்டு திருவடிகளையும் இடையறாது நினைக்கும்; கவையா வென்றி நெஞ்சினர்-வேறுபடாத வெற்றியினையுடைய நெஞ்சினையுடைய மெய்யடியார்; நோக்க- அருளொடு நோக்குங்கால்; பிறவியுங் குற்றமும் பிரிந்தனபோல- நோக்கப்படாதவருடைய பிறவிப்பிணியும் அதற்குக் காரனமான இருள்சேர் இருவினையும் துவர நீங்கினவாதல் போல; பீரமும் நோயும் மாறின்-(இவ்வெறியாடலால்) பசலையும் அது முதிர்ந்ததனால் உண்டான எந்துன்பமும் ஒரோவழி நீங்குமாயின் அப்பொழுது; கடல் துறைவற்கு என்னாதும்-கடற்றுறைகளையுடைய எம்பெருமான் திறத்திலே யாம் எந்நிலையேம் ஆகுவேம்; எனவே இரண்டிடத்தும் யாம் உயிர் வாழ்தலரிது; என்க.

     (வி-ம்.) இறைவனுடைய மெய்யடியார் அருள்நோக்க முற்றவிடத்து நோக்கப்பட்டோருடைய பிறவியுங் குற்றமுன் ஒழிதல்போல ஒரோவழி முருகனுடைய அருள்நோக்குற்று என்னுடைய இப்பசலையும் நோயும் ஒழிந்துவிடின் எம்பெருமான் இவட்குற்ற நோய்க்குத் தெய்வக்குறையே காரணம்போலும். எம்பால் வைத்த அன்பு காரணம் இல்லை எனக் கருதுதல் இயல்பாயிற்றே. அங்.ஙனமாயின் அவன் என் அன்பை உணராது என்னை ஏதிலாட்டியாய் எண்ணுவன். அங்ஙனம் எண்ணுமிடத்தே யான் உயிர்நீத்தல் ஒருடலை என்பாள் பீரமும் நோயும் மாறின் வாரித்துறைவற்கு என்னாதும் என்றாள். எம்பெருமான் அன்பு கடலினும் பெரிது என்பாள் வாரித்துறைவன் என்றாள். இஃதிறைச்சிப்பொருள். இருவழியானும் யாம் வாழ்தலரிது என்பது குறிப்பெச்சம்.

     இனி வேலன் வெறியாடியும் நோய்நீங்காதாயின் ஏதிலார் புணர்க்குவ என்னாம். அன்றி ஒரோவழி அவ்வெறியாடலால் எம் பீரமும் நோயும் மாறின் யாம் துறைவற்கு என்னாதும் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.