பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 
நேரிசையாசிரியப்பா
 
   
5
  பூமணியானை பொன்னென வெடுத்துத்
திங்களும் புயலும் பருதியுஞ் சுமந்த
மலைவருங் காட்சிக் குரிய வாகலி
னிறையுடைக் கல்வி பெறுமதி மாந்த
ரீன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து
10
  பாரிடை யின்ப நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூட
லுடலுயி ரென்ன வுரைதரு நாயகன்
கடுக்கைமலர் மற்றி வேப்பலர் சுடி
ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து
15
  விரிசாடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து
வழுதி யாகி முழுதுல களிக்கும்
பேரரு ணாயகன் சீரருள் போல
மணத்துடன் விரித்த கைதையங் கானத்
20
  தோடா வென்றிப் பொலம்பூட் குரிசில்
சின்னங் கிடந்த கொடிஞ்சி மாத்தோர்
நொச்சிப் பூவுதிர் நள்ளிரு ணடுநாள்
விண்ணஞ் சுமந்து தோற்றஞ் செய்தெனத்
தன்கண் போலு மென்க ணோக்கிக்
25
  கள்வரைக் காணு முள்ளம் போலச்
செம்ம்னந் திருகி யுள்ளந் துடித்துப்
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனண்
மாறாக் கற்பி னன்னை
கூறா மதியத் திருநுதற் கொடியே.             (2)

(உரை)
கைகோள், களவு, தோழிகூற்று

துறை: தாயறிவு கூறல்
(இ-ம்.) இதுவுமது

1 - 8: பூமணி..........................................நாயகன்

     (இ-ள்) பூமணியானை பொன் என எடுத்து-மலர்களையும் மணிகளையும் யானைகளையும் பொன்னையும் சுமந்துகொண்டு; திங்களும் புயலும் பருதியும் சுமந்த மலை-திங்கலையும் முகில்களையும் ஞாயிற்று மண்டிலத்தையும் தம் உச்சியிற் சுமந்த மலையினின்றும்; வருங்காட்சிக்கு உரியவாகலின்-வாராநின்ற அழகுக்கு உரியதாதலால்; நிறையுடைக்கல்வி பெறுமதிமாந்தர்-அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறூதிப்பொருள் நான்கும் நிறைதலையுடைய மெய்க்கல்வியைப் பற்று மதிநுட்பமுடைய நல்லிசைப் புலவர்கள்; பூமணி யானை பொன் என எடுத்து-பூ மணி யானை பொன் முதலிய மங்கலமொழிகளாலே தொடங்கி; ஈன்ற-இயற்றிய; திங்களும் புயலும் பருதியும் சுமந்த-திங்கள் மண்டிலம், முகில்கள், ஞாயிற்று மண்டிலம் முதலியவற்றை வருணனை வாயிலாகத் தம்பாற் சுமந்த; மலைவருங் காட்சிக்குரிய குற்றமற்ற அழகிற்குரிய; செங்கவியெனத் தோன்றி-செவ்விய பெருங்காப்பியமெனக் காணப்பட்டு; நீளிடை பாரிடை நனிபரந்து-நீண்டதூரம் நிலத்திலே மிகவும் பரவி; இன்பம் பயக்கும்-மாந்தர்க்குப் பேரின்பத்தை வழங்குகின்ற; பெருநீர் வையை வளைநீர்க்கூடல் உடல் உயிர் என்ன-மிக்க நீரையுடைய வையைப் பேரியாறு சூழ்ந்த நீர்மையையுடைய நான்மாடக்கூடல் என்னும் மதுரைமாநகரம் உடலாகவும் தான் அதற்கு உயிராகவும்; உறைதரும் நாயகன்-எழுந்தருளி இருக்கின்ற இறைவன் என்க.

     (வி-ம்.) வையையாற்றிற்குச் சான்றோர் கவிஉமை. பூ முதலியவற்றை உவமைக்கும் பொருளுக்கும் ஏற்றபெற்றி இயைத்துச் சிலேடை வகையால் பொருள் கொள்க. கவி-ஈண்டு ஆகுபெயராய்ப் பெருங்காப்பியத்தை உணர்த்தி நின்றது. நல்லிசைப் புலவர் நூலுயற்றத் தொடங்குங்கால் பூ முதலிய மங்கலமொழிகளில் ஒன்றை எடுத்துத் தொடங்குதல் மரபு. வையையாறும் தான் தோன்றும் குறிஞ்சியினின்றும் பூ மணி யானை பொன் பொருள் முதலியவற்றை எடுத்துவருதல் உணர்க. யாற்றுக்குக் கூறுங்கால் திங்களும் புயலும் பருதியும் சுமந்த மலையினின்றும் வரும் காட்சிக்கு உரியது எனவும், கவிக்குக் கூறுங்கால் திங்களும் புயலும் சுமந்த மலை முதலிய இயற்கைப்பொருள் வருணனை வாயிலாய் வரும் காட்சிக்குரிய கவி எனவும் ஏற்றப்பெற்றி கூறிக்கொள்க. மலைவருங் காட்சி-மலைவு அரிய காட்சி என்க. மலைவு-குற்றம்; அருமை-ஈண்டு இன்மை மேற்று. உரிய-உரியது. ஈறுகெட்டு நின்றது; பன்மை ஒருமை மயக்கமுமாம். நிறை-நிறைதல். மதி-மதிநுட்பம். கல்விபெறு மதிமாந்தர் என்றமையால் மதிநுட்பம் நூலோடுடைய நல்லிசைப்புலவர் என்பது பெற்றாம். எடுத்துச் சுமந்த காட்சியால் கவியெனத் தோன்றி என்க. நனி:உரிச்சொல் மிகுதிப்பொருட்டு; நீளிடை நனிபரந்து பாரிடை இன்பம் பயக்கும் வையை என மாறிக் கூட்டிக்கொள்க. நீர்க்கூடல்-நீர்மையுடைய கூடல். கூடல்-மதுரை. நாயகன்-இறைவன்.

9 - 15: கடுக்கை....................................கானத்து

     (இ-ள்) கடுக்கை மலர் மாற்றி-தனக்குரிய கொன்றை மலரைச் சூடாதுவிட்டு; வேம்புஅலர்சூடி-வேபமலர்மாலையை அணிந்து; ஐவாய் காப்புவிட்டு-ஐந்து தலைகளையுடைய பாம்பாகிய கங்கணத்தை ஒழித்து; அணிபூண் அணிந்து-பொன்னாலும் மணியாலும் ஆகிய அரசர்க்கியன்ற அணிகலன்களை அணிந்து; விரிசடை மறைத்து-தனது விரித்த சடையினை ஒளித்து; மணிமுடிகவித்து-மணிபதித்த முடியணிகலனை யணிந்து; விடைக்கொடி நிறுத்தி-தனக்குரிய காளைகொடியை விட்டு; கயல்கொடி எடுத்து-மீன் கொடியை உயர்த்தி; வழுதியாகி-ஒரு பாண்டிய மன்னனாகி; முழுது உலகு அளிக்கும்-உலகம் முழுவதும் செங்கோன்மை செலுத்திப் பாதுகாக்கும்; பேரருள் நாயகன் சீரருள்போல்-மிகுந்த அருளினையுடைய அவ்விறைவனது மிக்க புகழையுடைய அவ்வருள் கடவுள் மணத்துடன் உலகமுழுவதும் விரித்தாற்போன்று; மணத்துடன் விரிந்த கைதையங் கானத்து-நறுமனத்தோடே மலர்ந்த தாழைகளையுடைய நற்கடற் கரைச் சோலையிலே என்க.

     (வி-ம்.) கடுக்கை-கொன்றை; ஐவாய்: அன்மொழித்தொகை. ஐந்து வாயையுடைய பாம்பு என்க. விடை-காளை. இறைவன் தனக்குரிய மாலைமுதலியனவற்றை மரைத்துப் பாண்டிய மன்னனாய்ச் செங்கோல் செலுத்தி உலகினைப் பாதுகாத்த வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தே திருமனப்படலத்தில் காண்க. வழுதி-பாண்டியன். இறைவனுடைய அருள்விரிந்தாற் போன்று மலர்ந்த தாழை என்க. கைதை-தாழை. கானம்-கடற்கரைச் சோலை.

16 - 25: ஓடா.................................கொடியே

     (இ-ள்) கூறா மதியம் திருநுதல் கொடியே-பாதியாகிய திங்கள். மண்டிலம் போன்ற அழகிய நெற்றியையுடைய பூங்கொடி போன்ற எம்பெருமாட்டியே கேள்; நொச்சிப்பூ உதிர் நள்இருள் நடுநாள்-நொச்சியினது மலர் உதிராநின்ற செறிந்த இருளையுடைய இடையாமத்தே; ஓடா வென்றி பொலம் பூண் குரிசில்-போரின்கண் புறங்கொடாத வெற்றியினையும் பொன்னாலியன்ற அணிகலன்களையுமுடைய நந்தலைவனுடைய; விண் சுமந்து கிடந்த கொடிஞ்சி மாத்தோர்-முகில்களைத் தன்னுச்சியிற் சுமந்து கிடந்த கொடிஞ்சியினையும் குதிரைகளையுமுடையதேர்; சின்னம்-தோற்றம் செய்தென-இயங்கிய அடையாளமாகிய சுவடுகள் காணப்பட்டமையால்; மாறாக்கற்பின் அன்னை-மாறுபடாத கற்பொழுகத்தையுடைய நம் அன்னை; தன்கண் போலும் என்கண் நோக்கி-தன்னுடைய கண்ணையே போன்ற என்னை நோக்கி; கள்வரைக்காணும் உள்ளம் போலச் செம்மனம் திருகி- கள்வரைக் காண்போருடைய மனம் மாறுபட்டாற் போலத் தனது செம்மையுடைய மனம் மாறுபட்டு; உள்ளந்துடித்து-அம்மனந் துடித்து; புறன் வழங்காது-தன் மனக்கருத்தை வெளிப்படுத்திப் பேசாமல்; நெஞ்சொடு கொதித்தனள்-தன் நெஞ்சம் புழுங்குவாளாயினள், ஆதலால் அவள் இக்களவொழுக்கத்தை அறிந்தனள் ஆதல் வேண்டும் என்க.

     (வி-ம்.) ஓடாவென்றி-புறங்கொடாத வெற்றி. ஓடாத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது. பொலம்-பொன். குரிசில்-தலைவன். சினம்-அடையாளம். தேர்ச்சின்னம் தோற்றம் செய்தென என இயைத்துக்கொள்க. கொடிஞ்சி-தாமரைப்பூவடிவிற்றாய்ச் செய்து தேர்த்தட்டில் நட்டுவைக்கும் ஓருறுப்பு. கொடிஞ்சியையும் மாவினையும் உடைய தேர் என்க. மா-குதிரை. பெரியதேர் எனினுமாம். நல்லிருள்-செறிந்த இருள். நள்ளென்னும் ஓசையையுடைய இருள் எனினுமாம். விண்ணம் சுமந்து கிடந்த தேர் என இயைக்க. விண்ணம் என்புழி அம் இசைநிறை. தோற்றம் செய்தென-காணப்பட்டமையால். அதுகாறும் என்னைத் தன்கண்போலப் போற்றுபவள் இன்று என்னை நோக்கிக் கொதித்தனள் என்பாள் தன்கண்போலும் என்கண் என்றாள். தன்கண் என்புழி இரண்டாவதன்கண் ஏழனுருபு மயங்கிற்று. கள்வரைக் காண்போருடைய உள்ளம்போல என்க. மனந் திருகுதலாவது அன்புடைமையில் மாறுபடுதல். இயல்பாக மாறுபடாத அன்புடையாள் என்பாள் செம்மனந் திருந்தி என்றாள். புறன் வழங்குதலாவது மனம் புழுங்குவதற்குரிய காரணத்தை வெளிப்படையாகக் கூறுதல். கூறாமதியம்-எண்ணாட் பக்கத்துத் திங்கள். திருநுதற் கொடி: விளி.

     இதனைக் கொடியே! அன்னை கானலின்கண் நள்ளிருள் நடுநாளில் தேர்ச்சின்னம் தோற்றஞ் செய்தமையால் என்னை நோக்கி மனந்திருகித் துடித்து வழங்காது கொதித்தனள் என இயைத்துக்கொள்க. ஆதலால் இவ்வொழுக்கத்தினை நம்மன்னை அறிந்தாளாதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு- அச்சம். பயன்-வரைவுகடாதல்.