பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 20

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பொருப்புமலி தோலினு நெருப்புமிழ் வேலினுஞ்
செந்திரு மகளைச் செயங்கொண் மங்கையை
வற்றாக் காதலிற் கொண்ட மதியின்றிக்
கலவலர் தூற்றத் தளவுகொடி நடுங்க
வேயுளம் பட்டுப் பூவையின்கண் கறுக்கத்
10
  தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்றக்
காலங் கருதித் தோன்றிகை குலைப்பத்
துன்பு பசப்பூருங் கண்ணிழ றன்னைத்
திருமல ரெடுத்துக் கொன்றை காட்ட
விறைவளை நில்லா தென்பன நிலைக்கக்
15
  கோடல் வளைந்த வள்ளல ருகுப்பக்
கண்டுளி துளிகுஞ் சாயாப் பையுளைக்
கூறுபட நாடி யசையொடு மயங்கிக்
கருவிளை மலர்நீ ரருகுநின் றுகுப்பப்
பேரழல் வாடை யாருயிர் தடவ
20
  விளைக்குங் கால முளைத்த காலை
யன்புஞ் சூளு நண்புநடு நிலையுந்
தடையா வறிவு முடையோய் நீயே
யெழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போற்
றோங்கி நில்லா நிலைப்பொருள் செய்ய
25
  மருங்கிற் பாதி தருந்துகில் புனைந்தும்
விளைவய லொடுங்கு முதிர்நெல் லுணவினுந்
தம்மில் வீழுநர்க் கின்பமென் றறிந்துந்
தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண்வைத்
தலவாப் பாத மண்பரப் பாகத்
30
  தனிநெடு விசும்பு திருவுட லாக
விருந்திசைப் போக்குப் பெருந்தோ ளாக
வழுவறு திருமறை யோசைக ளனைத்து
மொழிதர நிகழும் வார்த்தை யாக
வுண்ணிறைந் துழலும் பாடிரண் டுயிர்ப்புப்
35
  பகலிர வொடுங்கா விடுவளி யாக
வடுபடைப் பூமியன் கடுமுரண் பற்றி
யிட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலந்
தளளையொடு நிறைநீர் விடுவண போலப்
புரசையொடு பாச மறவுட னிமிர்ந்து
40
  கூடமுங் கந்துஞ் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல் கான்றுமய லுவட்டி
யேழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூட லுறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையினர் போலவுங்
45
  கல்லா மனனினுஞ் ச்வெலுத்தி பெரும
விளமையு மின்பமும் வளனுங் காட்சியும்
பின்புற நேடின முன்பவை யன்றி
நுனித்த மேனித் திருவினட் கிடைத்த
வினைதரு மடைவி னல்லது
  புனையக் காணேன் சொல்லா யினவே.

(உரை)
கைகோள், கற்பு. தோழிகூற்று

துறை: ஆற்றாமை கூறல்.

     (இ-ம்.) இதற்கு “பெறற்கரும் பெரும் பொருள்” சொல் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண், “புரியுங்காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்’ எனவரும் விதி கொள்க.

1-3: பொருப்பு..................அன்றி

     (இ-ள்) பொருப்புமலி தோளினும்-மலையினுட் காட்டில் உயர்ச்சியால் உயர்ந்த தோளின்கண்ணும்; நெருப்பு உமிழ் வேலினும்-தீயை உமிழ்கின்ற வேலின்கண்ணும்; வற்றாக் காதலின்-குறையாத காதலாலே; செந்திருமகளை செயம் கொள் மங்கையை-சிவந்த திருமேனியையுடைய திருமகளையும் வெற்றி கோடற்குக் காரனமான வீரமகலையும்; கொண்டமதி அன்றி- கைக்கொண்டதனால் வந்த அறிவே யன்றி என்க.

     (வி-ம்.) பொருப்பு-மலை. மலிதல்-மிகுதல். தோளிலே திருமகளையும் வேலிலே வீரமகளையும் கொண்ட மதி என்க.

17-18: அன்பும்..........................நீயே

     (இ-ள்) அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்-அன்பும் வஞ்சினமும் காதலுடமையும் நடுநிலையும்; தடையா அறிவும் உடையோய் நீயே-கல்வி கேள்விகளிற் றடை படாத அறிவும் உடைய நீ ஆதலால் என்க.

     (வி-ம்.) அன்பு-தொடர்புடையார்மாட்டுச் செல்லும் மனநெகிழ்ச்சி. சூள்-நின்னிற்பிரியேன் என்னும் ஆணைமொழி. நண்பு-யாவர்மாட்டும் கேண்மையுடைய. நடுநிலை-பகை. நொதுமல், நண்பு என்னும் மூன்றிடத்தும் அரத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலை. தடையா-தடைபடாத. அறிவு-உண்மையறிவு, கல்வியறிவு, கேள்வியறிவு, பட்டறிவு (அனுபவ அறிவு எனப் பலவகைப்படும்.

21-23: மருங்கில்..........................அறிந்தும்

     (இ-ள்) மருங்கில் பாதி தரு துகில் புனைந்தும்-இடையில் பாதியை வெளியே காட்டும் ஆடையை உடுத்தியும்; விளைவயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும்- தாம் விளைந்த வயலின்கண் அடங்கிக் கிடக்கும் உதிர்ந்த நெல்லாகிய உணவினாலும்; தம்மில் வீழுநர்க்கு-தங்களில் ஒருவரை ஒருவர் விரும்பும் காதலர்க்கு; இன்பம் என்று அறிந்தும்-போதிய இன்பம் உண்டாகும் என்று அறிந்து வைத்தும் என்க.

     (வி-ம்.) மெய்யாய காதலர்க்கு ஓரலவு ஆடை உணவு முதலிய இன்றியமையாப் பொருள்கள் இருப்பினும் அமையும். அவர்கள் பெரிதும் இன்புற்று வாழ்தல் கூடும் என்னும் உண்மையை நீ அறிந்திருந்தும் என்பது கருத்து. மருங்கிற் பாதிதரும் துகில் என்றது உடுத்துதற்குப் போதாத குறைத்துகில் என்றவாறு. விளைந்த வயலில் நெல்லரியுங்கால் உதிர்ந்த நெல்லைப் பொருக்கி அவற்றையே உண்ணும் நல்கூர் நிலையிலும் என்பது கருத்து. இந்நிலையிலும் இன்பம் குறையாமைக்குக் காரணம் குறிப்பாக உணர்த்துவாள் தம்மில் வீழுநர் என்றாள். இக்கருத்தோடு, “தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழில் கனி” எனவரும் திருக்குறளையும் (1191) நோக்குக. தம்மில் வீழுநர்க்கு மருங்கிற்பாதி தரும் துகில் புனைந்தும்.................இன்பம், என்னும் இதனோடு,

“இளமையுங் ஆமமும் மோராங்குப் பெற்றார்
 வலமை விழைதக்க துண்டோ வுளநாள்
 ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
 ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்

“ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
 சென்ற விளமை தரற்கு”
(கலி. 18. 7. 12)

எனவரும் கலியையும் நோக்குக.

42-43: இளமையும்......................அன்றி

     (இ-ள்) முன்பு நேடின அவை அன்றி-முன்னர்த் தேடப்பட்ட அப்பொருல்கலே வாழ்விற்கு அமையும் என்னும் அமைதியின்றியும்; இளமையும் வளனும் காட்சியும் பின்புற-நுங்களுடைய இளமையும் இன்பமும் நின் முன்னர் ஈட்டிய பொருளும் அழகும் பிற்படும்படி என்க.

     (வி-ம்.) முன்பு நேடின அவை என மாறுக; என்றது தலைவன் பண்டு தேடிய பொருள்களை, வளன்-வளம். இது முன்னோர் ஈட்டிவைத்த செல்வத்தைக் குறிக்கும். இளமை இன்பம் காட்சி இம் மூன்றும் இருவர்க்கும் பொது. பிற்பட என்றது இவற்றைப் பொருளாகக் கருடாமல் இவை ஒதுங்கிக் கிடக்கும்படி என்றவாறு.

19-20: எழுந்து............................செய்ய

     (இ-ள்) எழுந்து காட்டி பாடுசெய் கதிர்ப்ல்-காலையில் எழுந்து தல் ஒளியினை உலகிற்குக் காட்டி மாலையில் மறைகின்ற ஞாயிற்று மண்டிலத்தல்ப்போல; தோன்றி நிலை நில்லாப் பொருள் செய்ய-உலகின்கண் தோன்றி நிலை நில்லாது அழியும் பொய்ப்பொருலை ஈட்டுதற்கு என்க.

     (வி-ம்.) காலையில் எழுந்து மாலையிற்படும் என ஓதுக. கதிர்-ஞாயிறு. நிலை நில்லா என மாறுக. இதனோடு,

“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
 நிலா உலகம் புல்லிய நெறித்தே”        (தொல். புறத். 23)

எனவரும் நூற்பாவினையும்,

“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
 போக்கு மதுவிளிந் தற்று”     (குறள். 332)

எனவரும் திருக்குறளையும் காண்க.

24-31: தண்மதி...........................வளியாக

     (இ-ள்) தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண் வைத்து-குளிர்ந்த திங்களையும் கடிய சுடரையுடைய ஞாயிற்றினையும் வெவ்விய தீயினையும் கண்களாகப் பெற்று; மண்பரப்பு அளவா பாதம் ஆக-நிலப்பரப்பு யாவரானும் அளக்கப்படாத திருவடியாக; தனிநெடு விசும்பு திடுஉடல் ஆக-ஒப்பற்ற நெடிய வானம் அழகிய உடம்பாக; இருந்திசைப் போக்குப் பெருந்தோள் ஆக-பெரிய திசைகளின் பரப்புப் பெரிய தோளாக; வழுஅறு திருமரை ஓசைகள் அனைத்தும்-குற்றமற்ற அழகிய மறைகளின் ஒலிகள் எல்லாம்; மொழிதர நிகழும் வார்த்தை ஆக-மொழிகளை உண்டாக்க நிகழுகின்ற சொற்களாக, பகல் இரவு ஒடுங்காவிடு உயிர்ப்பு-பகலும் இரவும் ஆகிய இருபொழுதிலும் இடையறாது விடுகின்ற மூச்சு; உள் நிறைந்து இரண்டு பாடு உழலும்-உள்ளம் நிறைந்து அகமும் புறமும் போக்குவரவு செய்யும்; வளி ஆக-காற்றேயாக என்க.

     (வி-ம்.) திங்கள் முதலியன கண்ணாகவும் நிலம் அடியாகவும் விசும்பு உடலாகவும் திசைகள் தோளாகவும் மறையோசைகள் சொல்லாகவும் வளி உயிர்ப்பாகவும் என்க. தண்மதி-திங்கள். கடுஞ்சுடர்-ஞாயிறு. அழல்-தீ. விசும்பு-வானம். போக்கு-பரப்பு. வார்த்தை-சொல். அகமும் புறமுமாகிய இரண்டு பாடும் என்க. வளி-காற்று. ஒழுங்காவீடு உயிர்ப்பு என்றும், உழலும் வளியாக என்றும் கொண்டு கூட்டுக. உயிர்ப்பு-மூச்சு.

32-34: அடு...............................கடவுளை

     (இ-ள்) அடுபடைப் பூமியன்-கொல்லும் படையினையுடைய பாண்டியன்; கடுமுரண் பற்றி இட்டவெம் கொடுஞ்சிறை பட்ட கார் குலம்-கடிய இகல் காரணமாகப் புகுத்திய வெவ்விய கொடிய சிறைக்கோட்டத்தின்கண் அகப்பட்ட முகிற்கூட்டம்; தளையொடு நிறை நீர் விடுவனபோல-விலங்குகளுடனே மிகுந்த நீரைச் சொரிவன போல; ஏழு உயர் கரிதிரள்-ஏழு முழம் உயர்ந்த யானைக் கூட்டம்; புரசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து- கழுத்திலிடு கயிஉம் பாசக்கயிறும் அற்றுப்போகும்படி உடலை நிமிர்த்து; கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப-தம்முடைய கொட்டிலிடமும் தறியிடமும் சேராய்க் குழம்பி நின்று சேர்ந்தோரைத் துன்புறுத்தும்படி; மூன்று மதம் நெடும்புனல் கான்று-மூன்றாகிய மதமாகிய மிக்க நீரினைச் சினத்தால் முழங்குதற்கிடனான; கூடல் பெருநகர் உறைதரு கடவுளை-நான்மாடக் கூடலாகிய பெரிய மதுரை மாநகரில் வீற்றிருந்தருளிய சோமசுந்தரக் கடவுளை என்க.

     (வி-ம்.) அடுபடை: வினைத்தொகை. பூமியன்-பாண்டியங் அவன் உக்கிரபாண்டியங் கடுமுரண்-கடிய இகல். இந்திரனுக்கும் தனக்கும் உண்டான கடிய இகல் என்பது கருத்து. கார்க்குலம்- முகிற்கூட்டம். தலை-விலங்கு. புரசை- யானைக்கழுத்திலிடும் கயிறு. பாசம்-கயிறு. ஈண்டுக் காலிற்கட்டும் கயிறு என்க. கூடம்- யானைக்கொட்டில். கந்து-தறி. மும்மதம்-யானையின் செவி, கவுள், குறி என்னும் மூன்றிடத்தினும் சொரியும் மதம். கான்று-சொரிந்து. மயல்-மயக்கம். உவட்டி-மிகுந்து. ஏழு-ஏழுமுழம், யானை ஏழுமுழம் உயர்ந்திருத்தல் நல்லிணக்கணம் என்க. கதம்-சினம். சிறைப் பட்டமுகில் மழை பொழிந்தாற்போலே மதம் பொழியும் களிறுகள் பிளிறும் கூடல் என்க.

40-41: நிறைய...............பெரும

     (இ-ள்) பெரும-எம்பெருமானே! நிறைய பேசாக் குறையினர் போலவும்-முழுதும் வாழ்த்தாமையால் உண்டாய குற்றத்தினை யுடையார் போலவும்; கல்லா மனனினும்-மெய்ந்நூல்களைக் கல்லாத கயவர் நெஞ்சம் போலவும்; செலுதி-சூள் பொய்த்த குற்றமுடையையாகவும் ஒருவழிப் படாமலும் பாலையிலே செல்லாநின்றனை என்க.

     (வி-ம்.) நிறையப் பேசுதலாவது முழுதும் வாழ்த்துதல். கல்லா மனம் ஒருவழிப்படாததுபோல நீயும் காதலாகிய ஒரு நெறியிற் படாமல் என விரித்தோதுக.

4-6: களவு...................அரற்ற

     (இ-ள்) களவு அலர் தூற்ற-களா மலரைச் சொரியா நிற்பவும், தளவு கொடி நடுங்க-முல்லைக்கொடி அசையவும்; வேயுளம் பட்டு பூவை கண் கறுக்க-மலரும் பருவமெய்துக் காயா தம்மிடமெலாம் கறாநிற்பவும், வண்டு-வண்டு; தண்டா மயல்கொடு-குறையாத விருப்பத்தைக் கொண்டு; பரந்து அரற்ற-யாண்டும் பரவி முரலாநிற்பவும் என்க.

     (வி-ம்.) களவு-களா; குறியதன்கீழ் ஆக்குறுகி உகரம் ஏற்று நின்று களவு என்றாயிற்று. தளவு-முல்லை. பூவை வேயுள் பட்டு என மாறுக. வேயுள்-மலர்ச்சி. வேய்; பகுதி உள்: விகுதி. எனவே மலர்தல் உண்டாகி என்க. வேயுளம் என்புழி அம்: இசைநிறை. பூவை-காயா. கன்-இடம். தண்டா- குறையாத. இனி இவை எம்பெருமானே, நின்னுடைய பிரிவினை கருதிக் களவு அலர் தூற்றவும் தளவு அஞ்சி நடுங்கவும் பூவை வெகுண்டு கண் சிவப்பவும் வண்டு மயங்கி அழாநிற்பவும் எனவும் வேறு பொருள் தோற்றுமாறுமுணர்க.

7-11: காலம்..........................உகுப்ப

     (இ-ள்) தோன்றி காலங் கருதி கை குலைப்ப-செங்காந்தள் இப்பருவத்தை நினைந்து கை விரல்கள் போல் மலர்க்குலைகளைத் தோன்றாநிற்பவும்; கொன்றை கண் தும்பு ஊரும் பசப்பு நிழல் தன்னை- கொன்றைகள் பிரிந்த மகளிர் கண்ணிடத்தே அத்துன்பங் காரணமாகப் பாய்கின்ற பசலையினது ஒளியை, திருமலர் எடுத்துக்காட்ட-தமது அழகிய மலரால் பிறர்க்கு எடுத்துக்கூறாநிற்பவும்; கோடல் இறை நில்லாதென்பன நிலைக்க- வெண்காந்தள்கள் அம்மகளிர் கையின்கண் அணிந்த வலையல் இனி அவர்தம் கையினிடத்தே தங்கியிராமல் இங்ஙனமே கழன்று வீழும் என்று அறிவுறுத்துவனபோல; வளைந்தவள் அலர் உகுப்ப-தம்முடைய வலைந்த பெரிய மலர்களைச் சிந்தாநிற்பவும் என்க.

     (வி-ம்.) தோன்றி-செங்காந்தள். காலம்-ஈண்டுப் பருவம். குலைப்ப-குலை தோற்றுவிப்ப. கைகுலைப்ப-மகளிர் கை போலப் பூங்குலையைத் தோற்றுவிப்ப என்க, துன்பு ஊரும் பசப்பு என மாறுக. நிழல்-ஒளி. அஃது ஈண்டு நிறத்தையுணர்த்தி நின்றது. பசலையின் நிறம் பொன்னிறமாதல் பற்றிக் கொன்றை தம் மலரின் நிறத்தைக் காட்டிப் பசலையின் நிறத்தை நினைப்பூட்டியது என்பது கருத்து. “பூப்போ லுன்கண்பொன் போர்த் தனவே” (குறுந். 101) என்றார் பிறரும் கோடல்-வெண்காந்தள். இக்காந்தளின் மலர் சங்குவலையல் போன்றன ஆதலின் அவை பிரிந்த மகளிர் வளை உகுதற்கு உவமையாக்கப்பட்டன. இறை-கோடு; ஆகுபெயர். கை என்க. நிலைக்க: உவம உருபு. வள்-பெரிய.

12-14: கண்.....................காலை

     (இ-ள்) கருவிளை மலர் அருகு நின்று-கருவிளை மலர்கள் (எம்பெருமாட்டியின்0 பக்கத்தே நின்று நீக்கி; கண் துளி துளிக்கும் சாயப் பையுளை-(அவளுடைய) கண்கள் துன்பக் கண்ணீர்த் துளியைச் சிந்துதற்குக் காரணமாகிய கெடாத துன்பத்தை; கூறுபட நாடி ஆசையொடு மயங்கி நீர் உகுப்ப-பகுதிப்பட ஆராய்ந்து பார்த்துத் திசைகளிற் பொருந்திக் கண்ணீரினைச் சிந்தாநிற்பவும்; ஆருயிர் பேர் அழல் வாடை தடவ-பெறுதற்கரிய உயிரினை மிகுந்த வெப்பமுடைய வாடைக் காற்றுத் தடவாநிற்பவும்; விளைக்கும் காலமும் முளைத்த காலை-உண்டாக்கும் பருவம் தோன்றிய இக்காலத்தே என்க.

     (வி-ம்.) கருவிளை-ஒருவகைக் கொடி. இதனை இக் காலத்தார் காக்கணங்கொடி என்பர். அருகு நின்று என்றது தலைவியின் கண்களையாம் நிகர்த்துமோ என்றது காண்டற்கு அருகு நின்று நோக்கி என்பதுபட நின்றது. நோக்கி என ஒரு சொல் பெய்க. சாயா-கெடாத. பையுள் துன்பம். ஆசை-திக்கு. இனி அவாவோடும் மயங்கி என ஒரு பொருள் தோன்றுதலும் உணர்க. நீர்-கள்ளாகிய நீர். இனி இதன்கண் கருவிளைமலர் தலைவியின் கண்கள் சொரியும் துளி நோக்கித் தாமும் அவள்பால் விருப்பமுடையனவாய் மயங்கிக் கண்ணீர் துளிப்பவும், வாடைக்காற்று அவள் உயிரைக் கைக் கொள்ளுதற்கு இதுவே ஏற்ற செவ்வி என்றுணர்ந்து அவளுயிரைத் தடவிப் பார்க்கவும் எனவும் வேறு பொருளும் தோன்றுதலுணர்க.

44-46: நுனித்த.....................சொல்லாயினவே

     (இ-ள்) நுனித்தமேனி திருவினட்கு அடைத்த-கூர்ந்த வுருவ அழகையுடையாளுக்கு அமைத்த; விளைதரும் அடைவின் அல்லது-ஊழ்வினை தரும் முறைமையின்றி; சொல் ஆயின புனைய காணேன்-சொல்லித் தேற்றுதற்கு அமைந்த காரியங்களைப் புனைந்து கூறுதற்கு யானும் அறிகின்றிலேன் என்க.

     (வி-ம்.) இஃது எதிர்வினை விலக்கு என்னும் அலங்காரம். நுனித்தல் என்றும் பாடம். இதற்கு நுனித்தல் வினை எனக் கூட்டி உரிமையாகிய வினை என்க. ஏகாரம் ஈற்றசை. இனி இதனைப் பெரும நீ தோளினும் வேலினும் கொண்ட அறிவன்றி அன்பு முதலியனவும் உடையை ஆதலால் பாதிதரும் துகில் புனைந்தும் உதிர் நெல் உண்டும் தம்மில் வீழுநர்க்கே இன்பமென்றறிந்தும் இளமை முதலிய பிற்படப் பொருளைத் தேடச் செல்லுகின்றவனை; அதனால் கார்ப்பருவம் தோன்றிய காலத்தே இவள் இறந்து படாமல் ஆவன் செய்தற்குரிய செயல்களை யான் அறிகின்றிலேன் என இயைபு காண்க. இனி இதன்கண் எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர் போல் தோன்றி என்பது நாளதுசின்னம். “கடைநாளிது வென்றறிந்தாரு மில்லை” (பாலைக்கலி) எனவும், “உண்டோ உளநாள்” (பாலை) எனவும் பிறரும் ஓதுதல் காண்க.

புறந்தந்து இருளிரியாப் பொன்னேமி யுய்த்துச்
சிரந்த வொளிவளர்க்குந் தேரோன்-மறைந்தான்
புறவழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்”

என வரும் பழம்பாடலையும் ஈண்டு நினைக.

     இளமையும் காமமும் பிற்பட என்பதும் இளமையதருமை. “இளமையும் காமமும் நின்பணி நில்லா” (பாலை 12) எனப் பிறரும் கூறுதல் காண்க.

     தடையா அறிவு முடையோய் என்பது தாளாண் பக்கம். அறிவினான் முயலுதலின் உரனுடை யுள்ளத்தை என்றார் பிறரும். நில்லா நிலைப் பொருள் செய்ய என்றது தகுதிய தமைதி.

வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ
லேழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம்
யாழிநுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ;
மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்கற் போலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறுந்
திருவினுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ:
புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை
வரையின்றிச் செறும்பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவு
மரைசினுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ” (கலி. 8)

எனப் பிறரும் ஓதுதல் காண்க.

    இனி மருங்கிற் பாதி தரும் துகில் புனைந்து என்பது இன்மையதிழிவு. “ஒரோஒ கை தம்முட்டழீஇ யொரோஒகை ஒன்றன்கூ ருடையுடுப்பவரே யாயினும்” (கலி. 18) என வருதலும் காண்க. நேடின் முன்பவை யன்றி என்பது “உடைமையது உயர்ச்சி. இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றர் வலமை விழைதக்கது உண்டோ” (கலி 18) என வருதலும் காண்க. செல்லுதி பெரும என்பது அன்பினதகலம். “அரும்பொருள் வேட்கையின் உள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதியைய” (கலி. 18) என வருதலும் காண்க. உதிர் நெல்லுணவிலும் தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்பது தகுதிய தமைதி. இனி துன்பு பசப்பூரும் கண்ணிழ றன்னைத் திருமலர் எடுத்துக் கொன்றை காட்ட என்பதும் இறைவனை நில்லா தென்பன நிலைக்கக் கோடல் வளைந்த வள்ளலருகுப்ப என்பதும் கண்டுளி துளிக்கும் சாயாப் பையுளைக் கூறுபட நாடி யாசையொடு மயங்கிக் கருவினை மலர்நீ ரருகுநின் றுகுப்பவென்பதும், பேரழல் வாடை யாருயிர் தடவ என்பதும், அகற்சிய தருமை. என்றோளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் என்றாற் போலவும், “இடைமுலைக்கோதை குழைய முயங்கு முறைநாள் கழிந லுரிமை காண்டை” என்றார் போலவும், இது “நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே” யென்றமையான் முன்னொருகாற் றலைவன் கூறக்கேட்டுத் தோழி யதனை யுட்கொண்டு கூறினாள். “ஒன்றாத் தமரிவும் பருவத்துஞ் சுரத்தும்” என்னு மகத்திணைச் சூத்திரத்தில் “நாளது சின்மையு மிளமைய தருமையுந், தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியு, மின்மைய திழிவு முடைமைய துயர்ச்சியு, மன்பின தகலமு மகற்சிய தருமையும்” என்றார் தொல்காப்பியனார். மெய்ப்பாடும் பயனும் அவை.