பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 22

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கண்ட காட்சி சேனின் குறியோ
வென்னுழி நிலையா வுள்ளத்தி மதியோ
சூர்ப்பகை யுலகிற் றோன்றினர்க் கழகு
விதிக்கு மடங்கா வென்பது விதியோ
வென்னுடைக் கண்ணு முயிரு மாகி
10
  யுண்ணக ழின்ப முள்ளா ளொருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே யாகி
யம்மலைத் திருநுதற் கழியா தமைந்த
வெளைகொள் சிந்துர நல்லமணி யாகித்
15
  தூர நடந்த தாளெய்ப் பாறி
யமுதொடு கிடக்கு நிறைமதிப் பக்க
மொருபாற் கிடந்த துணைமதி யாகி
யருவி வீசப் பறவைகுடி போகி
விண்டுனற வொழுக்கும் பாண்டி லிறாலா
20
  யிளமை நீங்காது காவல்கொள் ளமுதம்
வரையர கமாதர் குழுவுட னருந்த
வாக்கியிடப் பதித்த வள்ளமு மாகி
டிடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகங் காணு மாடி யாகிச்
25
  சிறந்தன வொருபுனை யிம்மலை யாட
வளவாக் காதல் கைமிக் கணைந்தன
ளவளோ நீயா என்கண் குறித்த
தெருமர றந்த வறிவுநிலை கிடக்கச்
சிறிதுநின் குறுவெயர் பெருமணங் காறி
30
  யொருகன னிலைக்க மருவுதி யாயி
னிந்நிலை பெயர வுன்னுமக் கணத்திற்
றுண்டா விளக்கி னீண்டவ ளுதவ
மவ்வழி யுறவு மெய்பெறக் கலந்தின்
றொருகட லிரண்டு திருப்பயந் தாங்கு
35
  வளைத்த நெடுங்கார்ப் புனத்திரு வீரு
மணிநிறை யூச லணிபெற வுகைத்துங்
கருந்தாற் கவைடைச் செம்மணி வைத்துப்
பெருந்தே னிறாலொடு குறிவிழ வெறிந்தும்
வெண்டுகி னுடங்கிப் பொன்கொழித் திழியு
40
  மருவி யேற்று முழைமாஇ கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலங் கொய்துங்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்கு லறையுங் கிளிக்கணங் கடிதிர்
வெள்ளி யிரும்பு பொன்னெனெப் பெற்ற
45
  மூன்றுபுரம் வேவத் திருநகை விளையாட்
டொருநாட் கண்ட பெருமா னிறைவன்
மாதுட னொன்றி மெய்மனம் புகுந்து
பேணா வுள்ளங் காணாது நடந்து
கொலைகள வென்னும் பழமரம் பிடுங்கிப்
50
  பவச்சுவ ரிடித்துப் புதுக்கக் கட்டி
அன்பொடு வேய்ந்த நெஞ்சமண் டபத்து
பாங்குடன் கானத் தோன்றியுண் ணின்று
பன்மலர்ச் சோலை விம்மிய மெருமல
ரிமையோர் புரத்தை நிறைமணங் காட்டுங்
55
  கூடலம் பதியகம் வீடுபெற விருந்தோ
னிருதாள் பெற்றவர் பொருந்திருப் போல
மருவிய பண்ணை யின்பமொடு விளைநலஞ்
சொல்லுட னமரா தீங்கு
வில்லுடன் பகைத்த செந்துரு நுதலே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.

துறை: வேறுபடுத்துக் கூறல்

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவு 23) எனவரும் நூற்பாவின்கண் ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தானும், எனவரும் விதி கொள்க

55: வில்..............................நுதலே

     (இ-ள்) வில்லுடன் பகைத்த செந்துரு நுதலே-வில்லுடனே மாறுபட்ட திலதத்தால் சிவந்த அழகிய நெற்றியினையுடையோய்! என்க.

     (வி-ம்.) இனி, செந்துரு நுதல் என்பதற்குப் புதுமைஆகிய அழகிய நுதலினை யுடையோய் எனினுமாம். இனி வில்லுடன் பகைத்த நுதல் செந்துருவே என மாறி நுதலினுடைய சிவந்த திருமகளைப் போல்வாய் எனினுமாம்.

5-6: என்னுடைய...........................ஒருத்தி

     (இ-ள்) என்னுடைய காண்ணும் உயிரும் ஆகி-எனக்குக் கண்ணும் உயிரும் போல்பவளாகி; உள்நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி-என் உள்ளத்தே நிகழும் இன்பத்தையும் தன்னின்பமாகக் கொண்டாள் ஒரு நங்கை என்க.

     (வி-ம்.) தான் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்தமையால் அவற்றையே உவமை எடுத்து என் கண்ணும் உயிரும் ஆகி என்றாள். எனவே அவளை யின்றி எனக்குக் காட்சியும் உயிரும் வேறு இல்லை என்றாளாயிற்று. என்னின்பமே அவளின்பம் என்றமையால்தான் அவள் என்னும் வேற்றுமை யின்மை கூறினாள்.

7-10: மலை.....................................அணியாகி

     (இ-ள்) மலை குஞ்சரத்தின் கடக்குழியாகி-இதோ தோன்றும் மலையாகிய யானைக்கு அருவியாகிய அதன் மதநீர் வீழ்ந்தும் நிரம்பும் குழியும் ஆகி; நெடுமலை விழித்த கண்ணே ஆகி-இன்னும் நெடிய மலையாகிய இத்தேவன் விழித்துப் பார்த்த கண்னும் ஆகி; அம்மலை திருநுதற்கு அழியாது அமைத்த-இன்னும் அந்த மலையாகிய மகளுடைய நெற்றியின்கண் ஒருகாலமும் அழியாது இட்ட; வெள்ளை கொள், நல் அணி சிந்துரம் ஆகி-வெண்ணிறங் கொண்ட நல்ல அழகினையுடைய பொட்டும் ஆகி என்க.

     (வி-ம்.) மலைக் குஞ்சரம்; பண்புத் தொகை. குஞ்சரம் யானை. விழித்தகண் என்பதற்கேற்ப மலையாகிய தேவன் என்க. திரு: ஆகுபெயர். ஈண்டு உவமை குறியாது நங்கை என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. சிந்தூரம்-திலகம்; பொட்டு. நுதற்கு: உருபுமயக்கம்.

11-15: தூர..............................இறாலாய்

     (இ-ள்) தூரம் நடந்ததாள் எய்ப்பு ஆறி- நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்ததானாலுண்டான கால்களின் இளைப்பு ஆறப் பெற்று; அமுதொடு கிடக்கும் பக்கம் நிறைமதி ஒருபால்-அமிழ்தத்தோடே பொருந்திக் கிடக்கும் தன் பகுதிகளெல்லாம் நிறையப் பெற்ற முழுத்திங்கள் மண்டிலத்தின் ஒரு பக்கத்தே; துணை கிடந்த மதி ஆகி அதற்குத் துணையாகக் கிடந்த மற்றொரு திங்கள் மண்டிலமே ஆகி; பறவை குடிபோகி விண்டு அருவி வீச-அறுகாற் சிறு பறவையாகிய வண்டுகள் தன்பால் நின்றும் அகன்று போய்விடச் சிதர்ந்து அருவி போலச் சிந்துபடி; நற ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய்-தேனைச் சிந்துகின்ற வட்டமாகிய தே கூடும் ஆகி என்க.

     (வி-ம்.) எய்ப்பு-இளைப்பு. பக்கம்-பகுதி (கலை) பக்கம் நிறைமதி-முழுத்திங்கள். பறவை ஈண்டு அறுகாற் சிறு பறவை. அஃதாவது வண்டு என்க. “தாது பறவை பேதுற லஞ்சி” என்றார் பிறரும். விண்டு-கிழிந்து; பிளந்துமாம். நற-தேன். பாண்டில்-வட்டம். இறால்-தேன்கூடு.

16-20: இளமை..............................ஆடிஆகி

     (இ-ள்) வரையர மாதர் இளமை நீங்காது குழுவுடன் காவல் கொள் அமுதம் அருந்த-வரையர மகளிர் தம்மிளமை நீங்காமைப் பொருட்டுக் கூட்டத்தோடு பாதுகாத்து வரும் அமிழ்த உணவினை உண்ணும்படி; வாக்கி இடப்பதித்த வள்ளமும் ஆகி- ஒருவருக்கொருவர் வாக்கி வழங்கும் பொருட்டுப் பதித்து வைத்த கிண்ணமும் ஆகிப் பின்னும்; இடைவளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர்- இடையிலே காற்றும் புகுந்து போகுதற்கியலாதபடி நெருங்கிய முலையினையுடைய குறத்தியர்; சிறுமுகம் காணும் ஆடி ஆகி-தம்முடைய சிறிய முகத்தினது அழகைப் பார்த்தற்குரிய கண்ணாடியும் ஆகி என்க.

     (வி-ம்.) வரையர மாதர்-மலைகளில் உறையும் ஒரு வகைத் தெய்வ மகளிர். இளமை நீங்காது எனது காவல் கொள்ளுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. வாக்கி இட-வார்த்து வழங்குதற்கு. இனி வாக்கி இடம் பதித்த எனப் பாடமோதி அமுதத்தை வார்த்துத் தன்னிடத்தே பதித்து கைக்கப்பட்ட எனினுமாம். வள்ளம்-கிண்ணம். வளி-காற்று. கொடிச்சியர்-குறிஞ்சி மகளிர். ஆடி-கண்ணாடி. இடைவளியும் போகாது எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. இனி 7-10 குழியாகிக் கண்ணும் ஆகிச் சிந்தூரமும் ஆகித் துணைமதியும் ஆகி இறாலும் ஆகி வள்ளமும் ஆகிச் சிரந்தன ஒருசுனை (21) என அனைத்தையும் சுனைக்கு அடையாக்குக.

21-22: சிறந்தன................................அணைந்தனள்

     (இ-ள்) இம்மலை சிரந்தன ஒருசுனை-இந்த மலையிடத்தே சிறந்தனவாகிய சுனைகளுள் வைத்து ஒப்பற்ற ஒரு சுனையின்கண்; ஆட-நீராடுதற்கு; அளவாக் காதல் கைமிக்கு அணைந்தனள்-அளவு படுத்தப்படாத வேட்கை கை கடந்து மிகுதலாலே சென்றனள் என்க.

     (வி-ம்.) (6) எந்தோழி ஒருத்தி இம்மலையில் ஒருசுனையில் ஆட அணைந்தனள் என்க. சிறந்தனவாகிய சுனைகளுள் வைத்து ஒரு சுனை என வருவித்தோதுக. கைமிகுதல்-தன்வயமின்றி மிகுதல்.

1-4: கண்ட................................விதியோ

     (இ-ள்) சேணில் கண்ட காட்சிக் குறியோ-யான் நின்னைத் தொலைவின்கண் வைத்துக் கண்டமையால் உண்டான காட்சிப் பிழையின் குறியோ, என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ- என்னுள் நிலை நில்லாத அறிவின் பிழையினாலோ; சூர்ப்பகை உலகில் தோன்றிநர்க்கு-குறிஞ்சி நிலத்தின்கண் பிறந்தவர்க்கு; அழகு விதிக்கும் அடங்கா-அழகு இயற்கை விதிக்கும் அடங்கமாட்டா; என்பது விதியோ-என்று சொல்லப்படும் ஒரு விதியுமுளதோ? யாதோ அறிகின்றிலேன் என்க.

     (வி-ம்.) சேண்-தொலைவு. மதி-அறிவு. சூர்ப்பகை-முருகங் எனவே சூர்ப்பகை உலகு என்றது முருகவேளுக்குரிய குறிஞ்சி நிலம் என்றவாறாயிற்று. “சேயோன் மேய மைவரை யுலகமும்” 9தொல். பொருள். அகத்தி) எனத் தொல்காப்பியனாரும் கூறுதல் காண்க. யான் நின்னைத் தொலைவின்கட் கண்டதனாலோ அல்லது என் அறிவுப் பிழையாலோ குறிஞ்சி நில மகளிர் அழகு ஒரு விதியின்கண் அடங்கமாட்டாது என்னும் விதியும் உண்டோ? உண்டாயின் அதனாலேயோ யாதோ யான் அறிகின்றிலேன் என்றாயிற்று. இது குறிப்பெச்சம். உலகில் ஒருவரைப்போல் மற்றொருவர் இருப்பதில்லை என்பது இயற்கைவிதி. அவ்விதி இக் குறிஞ்சி நுல மகளிர்க்குப் பொருந்தாது போலும் என்பாள் சுர்ப்பகை உலகில் தோன்றினார்க்கு அழகு விதிக்கும் அடங்கா என்பது ஒருவிதி போலும் என்றாள். என்பன விதியோ என்புழி ஒருமை பன்மை மயக்கம் என்க.

23-24: அவளே................................கிடக்க

     (இ-ள்) நீ அவளே ஆய்-தெய்வமாகிய நீ மானிடமகளாகிய என் தோழியே யாக; என் கண் குறித்த தெருமரல்-என் கண் குறித்ததனால் உண்டான தடுமாற்றத்தை; நிலைதந்த அறிவு கிடக்க-நிலையாகச் செய்த என் மயக்க அறிவு ஒருபால் இருக்க என்க.

     (வி-ம்.) ஆய்-ஆகி. நீ தெய்வமாகவும் எந்தோழி மானிடமகளாகவும் நீயிர் இருவீரும் ஒருவீர் போலவே எனக்குத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் என் அறிவு மயக்க காதலுங் கூடும். அங்ஙனமாயினும் ஆகுக என்பது கருத்து.

25-28: சிறிது............................உதவும்

     (இ-ள்) குறு வெயர் பெறும் நின் அணங்கு சிறிது ஆறி-நின் மெய்யின்கண் குறு வெயர்வை தோன்றுதற்குக் காரணமான நின்னுடைய வழிநடை வருத்தம் சிறிது தீரும்படி; ஈங்கு ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின்-இவ்விடத்தே ஒருநொடிப் பொழுது நிலை பெறப் பொருந்தி நிற்பாயாயின. இந்நிலை பெயர உன்னும் அக்கணத்தில்-பின்னர் நீ இங்ஙனம் நின்ற நிலையினின்று நீங்க நினைக்கும் அடுத்த நொடிப் பொழுதில்; ஈண்டு தூண்டா விளக்கின் அவள் உதவும்-இங்குத் தூண்டாமணி விளக்கம் ஒன்று வருமாறு போலே நீராடச் செற என் தோழியும் வந்துறுவாள் என்க.

     (வி-ம்.) வெயர் பெறுதற்குக் காரபமான அணங்கு என்க. வெயர்-வியர்வை. அணங்கு-வருத்தம். சிறிது ஆறி என ஒட்டுக. கணம்-நொடிப் பொழுது. நிலைக்க மருவுதல்-நிற்றல். உன்னும்- நினைக்கும். தூண்டா விளக்கு-மணி விளக்கு. அவள் என்றது நீராடச் சென்ற என் தோழி என்றவாறு. உதவும் என்றது வருவள் என்றவாறு.

28-32: அவ்வுழி............................உதைத்தும்

     (இ-ள்) அவ்வுழி-அங்ஙனம் அவ்ள் வந்த விடத்து; இருவீரும் மெய்யுற உறவு கலந்து-ஒருவீர் போலும் நீவிர் இருவீரும் வாய்மையாகவே உளங் கலந்து உறவாடி; இன்று இரண்டு திரு ஒருகடல் பயந்தாங்கு-இற்றைநாள் இரண்டு திருமகளிரை ஒரு பாற்கடல் பெற்றாற்போல; நெடுங்கார் வளைத்த புனத்து-நெடிய முகில் சுழ்ந்த இத்தினைப் புனத்தில்; அணிபெற மணிநிறை ஊசல் உகைத்தும்-அழகு பெறும்படி மணிகளெழுதிச் செய்த ஊசலின்கண் ஏறி இருந்து உந்தி ஆடுதலானும் என்க.

     (வி-ம்.) நீயும் என்தோழியும் ஓரிடத்திருப்பின் இரண்டு திருமகள் ஓரிடத்தில் இருந்தாற்போல அழகாகத் தோன்றுவிர் என்பது கருத்து. பின்னரும் நீவிர் ஓரூசலின்கண் இருந்து ஆடும் அழகு மிகப் பெரிதாம் என்பாள், இருவீரும் மணிநிறை ஊசல் அணிபெற உகைத்தும் என்றாள். இனி வலைத்த நெடுங்காற் புனம் என்பதற்கு வேலி இட்டு வளைக்கப்பட்ட நெடிய கரிய தினைப்புனம் எனினுமாம். ஒரு கடல் என்றது திருப்பாற் கடலை. ஒருகடல் இரண்டு திருப்பயந்தாங்கு என்புழி முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இஃது இல்பொருளுவமை. மணி-பவளம் முத்து முதலிய. உகைத்தல்-உந்துதல்.

33-34: கருங்கால்............................எறிந்தும்

     (இ-ள்) பெரும் தேனொடு இறால் குறி விழ-மிக்க தேனுடைய தேன்கூடு இலக்காகி விழும்படி; கருங்கால் கவணிடை செம்மணி வைத்து எறிந்தும்-கரிய மயிரால் அமைத்த காலினையுடைய கவணிடத்தே மாணிக்க மணியை வைத்து எறிவதனாலும் என்க.

     (வி-ம்.) தேனொடு என உருபினைத் தேனொடுங் கூட்டுக. கருங்கால் செம்மணி என்புழிச் செய்யுளின்பம் உணர்க. கருங்கால் என்றது கவணின் பக்கக் கயிறுகளை. அவை மயிரால் திரிக்கப் பட்டமையின் கருங்கால் எனப்பட்டது. இறால்-தேன்கூடு. குறி-இலக்கு.

35-37: வெண்டுகில்....................கொய்தும்

     (இ-ள்) வெள்துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் அருவி ஏற்றும்-வெள்ளைத்துகில் போல அசைந்து பொன்னை வரன்றிக் கொண்டு வீழுகின்ற அருவி நீரை மெய்யின்கண் ஏற்று ஆடுவதனாலும்; முழை மலை கூஉயும்-முழையினையுடைய மலைக்கெதிர் நின்று எதிரொலி உண்டாகும்படி கூவுதலானும்; பெருஞ்சுனை விழித்த நீலம் கொய்தும்-பெரிய சுனையினிடத்தே மலர்ந்துள்ள நீல மலர்களைக் கொய்வதனாலும் என்க.

     (வி-ம்.) துகில்நுடங்கு என்புழி உவம உருபு தொக்கது. வெண்டுகில் அருவிக்கும் நுடங்குடல் அதன் வீழ்ச்சிக்கும் தொழிலுக்கும் பண்பும் பற்றி வந்த உவமைகள். முழை-குகை. மலைக்கெதிர் கூவுதல் எதிரொலி கேட்டு இன்புறுதற் பொருட்டு. இனி மலை முழையருகே நின்று கூவுங்கால் அம்முழையினின்றும் எதிரொலி எழும் என்பதனை,

பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை
பிறங்கால் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியாள்
வந்த நெறியு மறந்தேன் சிரந்தவர்
எஎயோஓவென் றேலா அவ்விளி
அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துச்
செ;ல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை
மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடந்தை
வாழ்த்துவப்பான் குன்றின் வகை;”        (பரி. 19; 58-66)

எனவரும் பரிபாடலிலும் காண்க. விளித்த நீலம் என உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருண்மேல் வுனை புணர்ந்தமையால் இது சமாதி என்னும் அணி. நீலம்: ஆகுபெயர்.

38-39: கொடு.........................கடிந்தும்

     (இ-ள்) கொடுமரம் பற்றி நெடு இதண் பொலிந்தும்-பழுமரத்தினைப் பற்றிக்கொண்டு நெடிய பரணின்கண் ஏறி இருந்து பொலிவுறுவதாலும்; குரல்தினை அரையும் கிளி கணம் கடிந்தும்-கதிரினையுடைய தினையிடத்தே வந்து ஆரவாரிக்கும் கிளிக் கூட்டத்தை ஓட்டுதலானும் என்க.

     (வி-ம்.) கொடுமரம்-பரணில் ஓருறுப்பு, இதனைப் பழுமரம் என்பர். கொடுமரம் நெட்டிதண் என்புழிச் செய்யுளின்ப முணர்க. பரணின்மேல் ஏறி இருத்தலே ஒரு விளையாட்டாகலின் நெட்டிதண் பொலிந்தும் என்றாள். இதண்-பரண். குரல்-கதிர். அறையும்-ஆரவாரிக்கும். கடிதல்-ஓட்டுதல்.

40-42: வெள்ளி...........................இறைவன்

     (இ-ள்) ஒருநாள் திருநகை வெள்ளி இரும்பு பொன்எனப் பெற்ற மூன்று புரம்-ஒரு காலத்தே தனது அழகிய நகைப்பினாலே வெள்ளியாலும் இரும்பாலும் பொன்னாலும் தனித்தனியே இயற்றப்பட்டவை என்று கூறப்பெற்ற முப்புரங்களும்; வேவ விளையாட்டுக் கண்ட பெருமான் இறைவன்-ஒருசேர வெந்தழியும்படி திருவிளையாடல் செய்தருளிய சிவபெருமானாகிய கடவுள் என்க.

     (வி-ம்.) வெள்ளி இரும்பு பொன்னென என்புழி எண்ணும்மை தொக்கன. மூன்று புரமும் எனற்பால முற்றும்மை தொக்கது. நகை-நகைப்பு. பெருமாணிறைவன் என்றது பெருமானடிகள் என்றாற் போல நின்றது. இப்பகுதியிலும் முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க.

43-44: மாதுடன்.......................நடந்து

     (இ-ள்) பேணா உள்ளம் காணாது நடந்து-தன்னை விரும்பாத நெஞ்சங்கள் காணாமல் மறைந்து சென்று; என்மனம் மாதுடன் ஒன்றி புகுந்து-அடியேனாகிய என் நெஞ்சத்திலே அங்கயற்கண் அம்மையாரொடு பொருந்திப் புகுந்து வீற்றிருந்து என்க.

     (வி-ம்.) காணாமல் மறைந்து சென்று என்க. மாது- அங்கையற்கண் அம்மை ஒன்றி-சேர்ந்து.

45-47: கொலை................................உண்ணின்று

     (இ-ள்) கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி- கொலையும் களவும் முதலிய தீவினையாகிய பழுமரங்களைச் சாய்த்து; பவச்சுவர் இடித்து-பிறப்பாகிய சுவரை இடித்துத் தள்ளி; புதுக்கக் கட்டி-கில்லாமை முதலிய மரங்களை நட்டுப் பிறவாமையாகிய சுவரை வைத்துப் புதுவதாகாக் கட்டி; அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்து-அருளாகிய பொற்றகடு கொண்டு வேய்ந்த உள்ளமாகிய மண்டபத்தின்கண்; உள்நின்று பாங்குடன் காணத் தோன்றி-அகத்தே வீற்றிருந்து யான் புறத்தேயும் யாண்டும் காணும்படி வெளிப்பட்டுத் தோன்றி என்க.

     (வி-ம்.) இனி, தலைமை பற்றிக் கொலையும் களவுமே கூறினாரேனும் “மொழியாததனையும் முட்டின்றி முடித்தல்” என்னும் உத்தியிலேனால் பொய், களவு, பிறர்மனை நயத்தல், அழுக்காறு, வெகுளி, வழிபடாமை, மாசுண்டல், செற்றம், கோட்டம் என்னும் ஏனைத் தீவினைகளையும் கூறிக் கொள்க. இனி இத்தீவினைகளை மரங்களாக உருவகித்தலின் முண்மரங்கள் என்று கொள்க. பவம்-பிறப்பு. கொலை முதலிய மரங்களை வெட்டித்தள்ளிக் கொல்லாமை முதலிய பயன் மரங்களை நட்டு என்றும், பவச்சுவர் இடித்து எனவே பிறவாமை என்னும் சுவரை வைத்து எனவும் கொள்க. அன்பு ஆகிய பொற்றகடு வேய்ந்து என்க. அவனருளாலே அவன்றாள் பெறுதல் வேண்டுமாதலின் இச்செயலெல்லாம் இஐவன் செயலாகவே கூறப்பட்ட.ன. ஞானிகட்கு இறைவன் யாண்டும் வெளிப்பட்டுத் தோன்றுதலால் யான் பாங்குடன் கானத் தோன்றி எனப்பட்டது.

48-51: பன்மலர்................................போல

     (இ-ள்) பல்மலர் சோலை விம்மிய பெருமலர்-பலவாகிய பூஞ்சோலைகளிலே மலர்ந்த நறிய மலர்கள்; இமையோர் புரத்தை நிறை மணங்காட்டும்-வானுலகத்தினும் சென்று நிறைந்து கமழும் நறுமணத்தைத் தோற்றுவித்தற்கு இடனான; கூடல் அம்பதியகம்- நான்மாடக் கூடலாகிய மதுரையம் பதியினிடத்தே; வீடுபெர இருந்தோன்-தன்னைக் கண்டு வணங்கிய அன்பர்கள் வீட்டுலகத்தைப் பெறுதற் பொருய்யு வீற்றிருந்தவனுடைய; இருதாள் பெற்றவர்-இரண்டு திருவடிகளையும் அடைந்தமெய்யடியார்; பெறும் திருப்போல-பெறுகின்ற பெருஞ் செலவம் இன்பத்தோடு ஏனை நன்மைகளையும் விளைத்தாற்போல என்க.

     (வி-ம்.) சோலையில் மலர்ந்த மலர்கள் இமையோர் நகரத்திலும் சென்று நிறைந்த மணத்தை காட்டுதற்கு இடனான கூடலம்பதி என்க. கூடலம்பதியில் இருந்தவனாகிய இறைவனுடைய இருதாள் பெற்றவர் பெற்ற திரு என்க. பொன்மலர்ச்சோலை என்றும் பாடம். இப்பாடத்திற்குக் கற்பகச் சோலையினின்றும் மலர்களைக் கொணர்ந்து இந்திரன் மதுரையில் வழிபட்டமையாலே இமையோர் புரத்தை நிறைக்கும் கற்பகமலர் மணத்தை தன்னிடத்தே காட்டும் கூடலம்பதி என்று பொருள் கொள்க. பீடுபெற இருந்தோன் என்றும் பாடம்.

52-53: மருவிய................................அமராது

     (இ-ள்) மருவிய பண்ணை இன்பமொடு-இவ்வாறு பொருந்திய விளையாட்டின்பமோடு; விளைநலம்-மேலுமுண்டாகும் நன்மைகள்; சொல்லுடன் அமராது-சொல்லுதற்கு அமையாது என்க.

     (வி-ம்.) மருவிய பண்ணை சொல்லுடன் அமராது என்றது சொல்லால் சொல்லிக் காட்டும் அளவிற்றன்று என்றவாறு. இனி நுதலினையுடையாய் உன்னை யான் என் தோழியாகக் கருதிய அறிவு கிடக்க நீ ஒருகணம் ஈங்கு மருவுவையாயின் நீராடச் சென்ற என் தோழியும் இப்பொழுது இங்கு வருவள். அவள் வந்ததும் நீவிர் இருவீரும் மெய்பெற உறவு கலந்து இரண்டு திருமகள் போலக் கூடி ஊசல் உதைத்தும், இறால் விழ எறிந்தும், அருவி ஏற்றும், மலையொடு கூவியும். நீலங்கொய்தும், இதணிற் பொலிந்தும் கிளி கடிகுவீர். இங்ஙனம் நீவிர் விளையாடுதலால் கூடலம் பதியில் இருந்தோன் தாள்பெற்றவர் எய்திய பெரிய திரு இன்பமும் ஏனைய நலங்களும் விளைக்குமாறு போலவே விளையும் இன்பமும் நலமும் சொல்லில் அடங்குவன அல்ல காண்; என்று இயைத்துக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.