பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 25

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வேற்றுப் பிடிபுணர்ந்து தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க வுய்த்த காதலிற்
கருங்கைவெண் கோட்டுச் சிறுகட் பெருங்களி
றுளத்துநின் றளிக்குந் திருத்தகு மருநூல்
பள்ளிக் கனக்கர் பாற்பட் டாங்குக்
10
  குறிஞ்சிப் பெருந்தே னிறாலொடு சிதைத்து
மென்னடைப் பிடிக்குக் கைப்பிடித் துதவி
யடிக்கடி வணங்குஞ் சார னாட
வந்தன ரிருக்கை யகல்வோர் சூழ்ந்தென
நன்னயங் கிடந்த பொன்னகர் மூடிப்
15
  புலைசெய் துடன்று நிலைநிலை தேய்க்குந்
தள்ளா மெய்ம்பி னுள்ளுடைந் தொருகால்
வேதியன் முதலா வருமரு மரசனும்
போதுது யிரப்பப் புணரா மயக்க
நாரண னடித்த வெழுவாய்த் தருக்கத்
20
  தறிவுநிலை போகி யருச்சனை விடுத்த
வெள்ளமுர ணரக்கர் கள்மதின் மூன்று
மடுக்குநிலை சுமந்த வலிதடப் பொன்மலை
கடுமுரண் குடிக்கு நெடுவிற் கூட்டி
யாயிரந் தீவா யரவுநாண் கொளுவி
25
  மாதவ னங்கி வளிகுதை யெழுநுனை
செஞ்சரம் பேரரு ளரக்கன் மதியாகத்
தேர்வரை வையை மாகத் திருத்தச்
சென்னிமலை ஈன்ற கன்னிவிற் பிடிப்ப
வொருகான் முன்வைத் திருகால் வளைப்ப
30
  வளைத்தவில் வட்டங் கிடைத்தது கண்டு
சிறுநகை கொண்ட வொருபெருந் தீயி
னேழுயர் வானம் பூமிபடக் கருக்கி
யருச்சனை விடாதங் கொருப்படு மூவரி
லிருவரைக் காவண் மருவுத லீந்து
35
  மற்றொரு வற்கு வைத்தநட மறிந்து
குடமுழ விசைப்பப் பெறுமரு ணல்கி
யொருநா ளருச்சனை புரிநா டலர்க்கு
மரும்பெற லுளதாம் பெரும்பதங் காட்டி
யெரியிடை மாய்ந்த கனல்விழி யரக்கர்க்
40
  குலவாப் பொன்னுல கடைதர வைத்த
சுந்தரக் கடவுள் கந்தரக் கறையோன்
மாமி யாடப் புணரி யழைத்த
காமரு கூடற் கிறைவன் கழலிணை
களிப்புடை யடியார்க்கு வெளிப்பட் டென்ன
45
  வொருநீ தானே மருவுதல் கிடைத்துக்
கள்ளமும் வெளியு முள்ளமுறை யனைத்தும்
விரித்துக் கூறிப் பொருத்தமுங் காண்டி
யீயா மாந்தர் பொருடோய்ந் தென்ன
நுண்ணிடை சுமந்தாற் றாது
  கண்ணிய சுணங்கின் பெருமுலை யவட்கே.

(உரை)
கைகோள்; களவு; தோழிகூற்று

துறை: நின்குறை நீயே சென்றுரையென்றல்.

     (இ-ம்.) இதற்கு “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவி 23) எனவரும் நூற்பாவின்கண் ‘அவளின் அறிவுறுத்துப் பின்வர என்றலும்’ எனவரும் விதி கொள்க.

1-8: வேற்றுப்பிடி........................நட

     (இ-ள்) கருங்கை வெல் கோட்டு சிறுகன் பெருங்களிறு-கரிய கையினையும் வெள்ளிய கோட்டினையும் சிறிய கண்ணினையுமுடைய பெரிய களிற்றி யனையானது; வேற்றுப் பிடி புணர்ந்து தீராப்புலவி சுற்றமொடு தீர்த்த-தான் பரத்தமை யுடைய வேறு பிடியானையைப் புணர்ந்ததனாலே தன் காதலியாகிய பிடியானை தீராத ஊடலைத் தன் சுற்றமாகிய யானைகள் காணும்படிதீர்த்தற்பொருட்டு; உய்த்த காதலின்-தன்னிடத்தில் அப்பிடி செலுத்திய காதல் காரணமாக; பள்ளிக் கணக்கர் பால்-பள்ளியின்கண் இருந்து சிறார்களுக்கு ஓதுவிக்கும் கணக்காயர் பால்; உளத்து நின்று அளிக்கும் திருத்தகும் அருநூல்-சான்றோர் உள்ளத்தின்கண் நிலைநின்று அவரைப்பாதுகாக்கும் சிறப்புத்தகுதியையுடைய உணர்தற்கரிய நூல்; பட்டாங்கு- அகப்பட்டுழிச் சிதைந்தாற்போல; குறிஞ்சி இறாலொடு சிதைத்து மெல் நடை பிடிக்கு-குறிஞ்சி நிலத்துண்டாகிய தே கூண்டினைச் சிதைத்து மெல்லிய நடையினையுடைய அப்பிடியானைக்கு; பெருந்தேன் கைப்பிடித்து உதவி-மிகுந்த தேனை அதன் கையைப் பிடித்து வழங்கி; அடிக்கடி வனங்கும் சாரல் நாட-பலகாலும் அதன் முன் வனங்குதற்கிடமாகிய சாரலினையுடைய மலைநாடனே என்க.

     (வி-ம்.) வேற்றுப்பிடி என்றதனாலும் புணர்ந்து என்றதனாலும் பரத்தமையுடைய பிடி என்பது பெற்றாம் புலவி-ஊடல். புணர்ந்தமையால் தன் காதற்பிடியுற்ற தீராப் புலவி என்க. சுற்றமொடு-சுற்றத்தின்முங் இது தீராப்புலவியைத் தீர்த்தற்கு உபாயமாகச் செய்யும் ஒரு சூழ்ச்சி என்க. உய்த்த காதல் என்பதற்குத் தன்னை அப்பிடியின்பால் செலுத்திய காதல் எனினுமாம். கருங்கை வெண்கோட்டுச் சிறுகட் பெருங்களிறு என்புழி முற்றும் முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. உளத்து நின்று அளிக்கும் திருத்தகும் அருநூல் என்றது மெய்யஞ்ஞான நூலை. உணர்தற்கரிய அந்நூல் சிறு கல்வியையுடைய பள்ளிக் கணக்கர் கையில் அகப்பட்டக்கால் அவர் அதன் அருமை யுணராது பொருளைத் தன்மனம் போனபடி சிதைப்பராகலின் இங்ஙனம் கூறினர் என்க. சிற்றறிவினர் என்பது தோன்றப் பள்ளிக் கணக்கர் என்றார்; மெய்ந்நூல் என்பது தோன்ற உளத்து நின்று அளிக்கும் திருத்தகும் அருநூல் என்றார். பட்டாங்கு-பட்டுழிச் சிதைத்தாற்போல என்க. இறால்- தேன்கூண்டு. அடிக்கடி என்றது பன்முறையும் என்பதுபட நின்றது. நாட: விளி. இனி, இதன்கண் யானையானது பிடியின் ஊடல் தீர்த்து அஃது இனிது பருகும்படி தேனைக் கொடுத்து மேலும் அது மனம் நெகிழும்படி அடிக்கடி வணங்கினாற்போல நீயும் எம்பெருமாட்டி வருத்தந் தீர்ந்து இனிதுவாழும்படி நின்னுடைய மொழிகளை இனிமையாக நீயே கூறி வேண்டிக்கொள்வாயாக என உள்ளுறை உவமங் கொள்க. “தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற்குரியர் கொள்வழி யான” என்பதோத்தாகலின் (தொல். உவம் 24), இனி, திருத்தகும் அருநூல் பள்ளிக் கணக்கர் பாற்பட்டாங்கு என்றது ஏனையுவமம். இது குறிஞ்சிப் பெருந்தேன் இறாலொடு சிதைக்கும் என்ற உள்ளுறை உவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. பிடிபுணர்ந்த என்பதும் பாடம். இறாலொடு: உருபு மயக்கம்.

22-23: பேரருள்............................திருத்தி

     (இ-ள்) அருக்கன் மதிபேர் உருள் ஆக-ஞாயிற்று மண்டிலமும் பெரிய சக்கரங்களாகவும்; வையவரை தேராகத் திரித்தி-நிலப்புரத் தேராகவும் செய்து என்க.

     (வி-ம்.) அருக்கன்-ஞாயிறு.

21-22: மாதவன்.................................செஞ்சரம்

     (இ-ள்) மாதவன் அங்கி வளி-திருமாலும் தீக்கடவுளும் காற்றுக் கடவுளும் நிரலே; செஞ்சரம் எழுநுனை குதை-சிவந்த அம்பாகவும் எஃகாலியன்ற நுனியாகவும் குதையாகவும் அமைய என்க.

     (வி-ம்.) இஃது எதிர் நிரனிரை. மாதவன்-திருமால். அங்கி-தீக்கடவுள். வளி-காற்றுக் கடவுள். எழு-எஃகு. குதை-வில்லுறப்பினுளொன்று.

24: சென்னி...........................பிடிப்ப

     (இ-ள்) சென்னி மலை ஈன்ற கன்னி-மலகளுள் வைத்து மிக உயர்ந்த உச்சியினையுடைய இமவான் ஈன்ற மகளாகிய பார்வதி; வில்பிடிப்ப-வில்லைப் பற்றா நிற்பவும் என்க.

     (வி-ம்.) சென்னி-உச்சி. இது மிக உயர்ந்த சென்னி என்பதுபட நின்றது. மலை-இமயமலை. கன்னி-ஈண்டு மகள் என்னும் பொருட்டாய் நின்றது. சிவபெருமான் விற்பிடித்த கை இடப்பாகத்துள்ள இறைவி கையாகலின் கன்னி விற்பிடிப்ப என்றார்.

18-20: அடுக்கு............................கொளுவி

     (இ-ள்) அடுக்குநிலை சுமந்த வலிதடம் பொன்மலை- அடுக்காகிய உலகங்களை எல்லாம் தாங்கி நின்ற ஆற்றலையும் பெருமையுமுடைய பொன்னாகிய மேருவினை; கடுமுரண் கெடுக்கும் நடுவில் கூட்டி கடிய பகைவருடைய உயிரைக் குடிக்கும் நெடிய வில்லாகக் கைக்கொண்டு அவ்வில்லின்கண்; ஆயிரம் தீவாய் அரவு நாண் கொளுவி-ஆயிரமாகிய நஞ்சமைந்த வாயினையுடைய பாம்பினை நாணாக ஏற்றி என்க.

     (வி-ம்.) அடுக்குநிலை: அன்மொழித் தொகை. தடம்-பெருமை பொன்மலை-மேருமலை. முரண்: ஆகுபெயர். “உண்டாதற்குரியவல்லாப் பொருளை உண்டனபோலக் கூறலு மரபே” என்பதோத்தகலான் கடுமுரண் குடிக்கும் என்றார். அரவு-ஆதிசேடங் தீ: ஆகுபெயர். நஞ்சு என்க.

25-27: ஒருகால்......................தியின்

     (இ-ள்) ஒருகால் முன்வைத்து இருந்தால் வளைப்ப-தன் ஒரு காலை முன்னே வைத்து அவ்வில்லினது இரண்டு நுனிகளையும் வளையா நிற்ப; வளைந்தவில் வட்டம் கிடைத்தது கண்டு-அங்ஙனம் வலைக்கப்பட்ட வில் வட்டவடிவமாக வந்து பொருந்தினமை கண்டு; சிறு நகை கொண்ட ஒரு பெருந்தீயின்-புன்முறுவல் பூத்ததனால் எழுந்த ஒப்பற்ற பெரிய தியினால் என்க.

     (வி-ம்.) ஒருகான் முன்வைத் தெனவே-ஒருகால் வளைத்தமை தோன்றிற்று; அதனால் ஆலீட நிலையும் பிரந்தியாலீடமு மடங்கின. இரட்டுற மொழிதலால் ஒருகான் முன்போல் வைத்தென்னவே யொருகால் வளைண்டமை தோன்றிற்று. அதனால் பைசாசநிலை அடங்கிற்று. “ஒரு பொருளிருசொற் பிரிவில வரையார்” என்றமையானமைக்க. “குழல் வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு” என்றாற் போலவும், “பாடுதும் பாவை பொற்பே” என்றாற் போலவும். இருகால் வளைப்ப வெனவே மண்டிலநிலை யடங்கிற்று. “சிலையோர் நால்வகை நிலைபை சாச, மாலீட மண்டிலம், பிரத்தியா லீடம், ஒருகா னிலை நின்றொருகான் முடக்கும், பரியாய மென்ப பைசாச நிலையே.” “வலக்கான் மண்டலித் திடக்கான் முந்துறு, மதற்பெய ராலீட நிலைய தாகும், இருகான் மண்டலித் திடுதன்மண் டிலநிலை வலக்கான்முந் துற்றிடக் கான் மண்டலிப்பிற் பிரத்தியா லீட மெனப்பெய ராகும்” இவற்றானறிக. வில்லினொருகாலை முன்னே யூன்றி, அதனிருகாலும் வளைத்ததனால் அவ்வில் வட்டமாகப் பெற்ற தொழில்களை எனினுமாம். வட்டம்-இடமுமாம். “மற்றநாடு வட்டமாக’ என்றாற்போல வில்லிடத்துக்கேற்ற தொழில்களைப் பார்த்தெனினுமாம்.

9-10: அந்தணர்................................மொய்ம்பின்

     (இ-ள்) அந்தனர் இருக்கை அகல்வோர் சூழ்ந்து என-அறவோருடைய பள்ளியின்கண் நன்னெறியினின்றும் நீங்கிய கயமாக்கள் சூழ்ந்து அதனை வாலாமை செய்தாற்போல; நல்நயம் கிடந்த பொன்ந்கர் மூடி-நல்ல நலம் பலவும் தங்கி இருந்த வானுலக முழுவதினையும் முற்றுகை செய்து; உடன்று புலை செய்து நிலைநிலை தேய்க்கும்-வெகுண்டு புன்றெழில் பலவும் செய்து அந்நகரங்கள் இருக்குமிடத்திலேயே அழித்தொழிக்கின்ற; தள்ளா மொய்ம்பின்-அசுரரின் யாராலும் ஒழிக்கப்படாத வலிமைக்கு அஞ்சி என்க.

     (வி-ம்.) “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழு கலான்” என்னும் திருக்குறளினால் அவரியல்புணர்க. அகல்வோர் என்றது நன்னெறியில் நின்றும் விலகிய கயவரை. பொன்நகர்-வானவர் நகரங்கள். மூடுதல்- முற்றுகை செய்தல். நகரின்மேல் வீழ்ந்து கவிழ்ந்து கோடலுமாம் புலை-கொலை முதலிய தீமை. நிலைநிலை-அந்நகரங்கள் இருக்கும் இடங்களிலேயே; மொய்ம்பு-வலிமை.

12-17: உள்ளுடைத்து.................................மூன்றும்

     (இ-ள்) வேதியன் முதலா அமரரும் அரசனும்-நான்முகன் முதலான தேவர்களும் தேவேந்திரனும்; ஒருகால் உள் உடைந்து-ஒருபொழுது மனமுடைந்து வருந்தி; போதுதூய் இரப்ப- மலர்களைத் திருவடிகளிலே இட்டுத் தம்மைப் பாதுகாக்க வேண்டுமென வேண்டிக் கோடலாலே; நாரனன் மயக்கம் புணரா- திருமால் அத்தேவர் பொருட்டு அசுரர்களை மயக்குதற்கு; நடித்த-மெய்போல் நடித்துக் கூறிய; எழுவாய் தருக்கத்து- தோற்றுவாயினையுடைய தருக்கநூல் காரணமாக; அறிவு நிலை போகி-தம் அறிவு பிறழ்ந்து; அருச்சனை விடுத்த- இறைவழிபாட்டினை ஒழித்த; வெள்ளம் முரண் அரக்கர்-பெருங்கூட்டமாகிய வலிமையுடைய அவ்வசுரருடைய; கள்ளமதில் மூன்றும்-வஞ்சகத் தொழிலையுடைய மூன்று மதில்களையும் என்க.

     (வி-ம்.) அமரரும் உள்ளுடைந்து என மாறுக. வேதியன்; நான்முகன், அரசன்-இந்திரங் தூய்-தூவி. மயக்கம் புணரா-மயக்கம் புணர்ந்து என்க. நாரனன்-திருமால். எழுவாய்-தோற்றுவாய் நூலின் ஓருறுப்பு. தருக்கம்-ஒருநூல். அருச்சனை-வழிபாடு. வெள்ளம்-ஒரு பேரெண். முரண்-வலிமை. கள்ளம்-வஞ்சகம்.

28-34: ஏழுயர்.......................காட்டி

     (இ-ள்) ஏழுயர் வானம் பூமிபடக் கருக்கி-ஏழாகி உயர்ந்த அவ்வானத்தின் கண்ணேயே சாம்பலாகும்படி சுட்டெரித்து அவ்வசுரருள்ளும்; அருச்சனை விடாது அங்கு ஒருப்படும் மூவரில் இருவரை-அத்திருமால் மயக்குகையினாலே மயங்காமல் தன்னை பழிபடுதல் விடாது அம்முப்புரத்தே ஒருவழிப்பட்டிருந்த அசுரர் மூவருள் வைத்து இரண்டசுரர்களை, காவல் மருவுதல் ஈந்து-தன் திருக்கோயில் வாயிலின்கண் காவற்றொழிலிலே பொருந்துதலை வழங்கி; மற்று ஒருவற்கு-எஞ்சிய அசுரனுக்கு; வைத்த நடம் அறிந்து குடமுழவு ஆடுகின்ற இசைப்ப பெறும் அருள் நல்கி-தான் திருவுளங்கொண்டு ஆடுகின்ற கூத்தின்கண் அதன் இயலறிந்து அதற்கேற்பக் குடமுழா என்னும் தோற்கருவியினை முழக்கும் பேறுபெறும்படி திருவருள் வழங்கி இவ்வாற்றால், ஒருநாள் அருச்சினைபுரி நாடலர்க்கும்-ஒஎஉநாள் தன்னை வழிபடும் பகைவர்க்கும்; அரும்பெறல் பெரும்பாதம் உளது ஆம் காட்டி-பெறுதற்கரிய பேறு உளதாகின்ற பெரிய பதங்களையும் உலகத்தோர்க்குக் காட்டியருளி என்க.

     (வி-ம்.) மேலேழுலகம் என்பது பற்றி வானமும் ஏழு என்றார். இனி ஏழுலகத்தினையும் கடந்த வான் எனினுமாம். பூமி-துகள். ஒருவற்கு-எஞ்சிய வாணாசுரனுக்கு. குடமுழவு-ஒருவகைத் தோற்கருவி. நாடலர்-பகைவர். அரும்பெறல்-பேறு. பெரும்பதம் சாமீப பதம்.

35-39: எரியிடை........................கழலிணை

     (இ-ள்) எரிஇடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு-மேலும் அம்முப்புரத்தின்கண் தீயிற் பட்டிறந்த தீக்காலும் கண்களையுடைய அசுரர் தாமும்; உலவாப்பொன் உலகு அடைதர வைத்த-கெடாது துறக்க நாட்டினை எய்தும்படி திருவருள் செய்த; சுந்தரக் கடவுள் கந்தரக்கறையோன்-அழகனாகிய இறைவனும் நீலமிடற்றோனும்; மாமி ஆடப் புணரி அழைத்த காமரு கூடற்கு இறைவன்-மாமியாகிய காஞ்சனமாலை என்பாள் நீராடுதற்பொருட்டுக் கடலினை வரவழைத்தருளிய பொழில் சூழ்ந்த நான்மாடக் கூடலுக்கு அரசனும் ஆகிய; கழலிணை-சிவபெருமானுடைய திருவடிகள் என்க.

     (வி-ம்.) இனி (9-29) பொன்நகர்.................மூடிப் புலைசெய்து தேய்க்கும் அசுரர் மொய்ம்பினால் வேதியன் முதலியோர் வேண்ட நாரணன் நடித்த தருக்கத்தால் அருச்சனை விடுத்த அவ்வசுரர் மதில் மூன்றினையும் மலைவில் கூட்டி அரவுநாண் கொளுவித் திருத்திக் கன்னி விற்பிடிப்ப வளைப்பக் கண்டு கொண்ட நகைத்தியில் வானத்தே கருக்கி, அவருள் இருவர்க்குக் காவல் ஈந்து ஒருவன் முழவிசைப்ப நல்கிப் பகைவர்க்கும் பேறுண்டெனக் காட்டி இறந்த அசுரரைப் பொன்னுலகடைதரச் செய்த கடவுளும், கறையோனும், இறைவனும் ஆகிய சிவபெருமானுடைய கழலிணை என இயைபு காண்க. எரி-நெருப்பு. மய்தற்கு முன்னர்க் கனல்பட விழித்து-மாய்ந்தமையின் மாய்ந்த கனல்விழி அரக்கர் என்றார். உலவா-உலவாத. காமரு-விருப்பம் வருதற்குக் காரணமான எனினுமாம்.

40-46: களிப்புடை......................அவட்கே

     (இ-ள்) களிப்புஉடை அடியார்க்கு வெளிப்பட்டு என்ன-நினைந்து நினைந்து நெஞ்சம் களித்தலையுடைய மெய்யடியார்க்கு வெளிப்பட்டாற்போல; ஈயா மாந்தர் பொருள் தேய்ந்தென்ன-வறியவர்க்கு வழங்காத புல்லர் பொருள் தேய்ந்து இல்லையானாற் போல; நுண் இடை-தேய்ந்து நுண்ணியதாகிய இடையினையும்; சுமந்து ஆற்றாது அவ்விடையால் சுமக்க இயலாமல்; கண்ணிய-என்செய்வோமெனக் கருதற்குக் காரணமான; சுணங்கின்- தேமலையுடைய; பெருமுலை அவட்கு-பெரிய முலையினையுமுடைய எம்பெருமாட்டியை; ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து-ஒப்பற்ற நீயே அவள் முன்னிலையிற் சென்று; கள்ளமும் வெளியும் உள்ளம் உறை அனைத்தும்-மெய்யும் பொய்யுமாய் நின் நெஞ்சத்தே உறைகின்ற மொழிகள் அனைத்தையும்; விரித்துக் கூறி-நன்கு விரிவாகச் சொல்லி; பொருத்தமும் காண்டி-நின் கருத்த்டு அவள் கருத்துப் பொருந்துவதனையும் கண்டுகொள்வாயாக! யான் குற்றேவல் மகளாகலின் அவள்மாட்டுச் சென்று நின் குறையினைக் கூறுந் தகுதியிலேன் காண்! என்பதாம்.

     (வி-ம்.) கூடற்கு இறைவன் கழலிணை அடியார்க்கு வெளிப்பட்டாற்போல் நீயே அவள்முன் தோன்றிக் கூறிக் காண்டி எனக் கூட்டுக. ஈண்டுத் தலைவனுக்கு கழலிணைகள் உவமை. தலைவிக்கு அடியர் உவமை. இவ்வுமையால் அடியார் சிவபெருமானை உள்ளத்தில் நினைந்திருந்தாற்போல் எம்பெருமாட்டியும் நின்னை இடையறாது நினைந்து நின்வரவினை எதிர்பார்த்திருக்கின்றனள் எனத் தோழி, குறிப்பாகத் தலைவனுக்குணர்த்திய நுணுக்கமும் உணர்க. கள்ளம்-பொய். வெளி-மெய். உறை-பெயர். உறைகின்ற மொழிகள் என்க. இனி, நாட முலையவட்கு நீ தானே சென்று கூறிப் பொருத்தமுங் காண்டி என இயைத்துக் கொள்க. யான்குற்றேவல் மகளாகலின் அவள்மாட்டுச் சென்று நின்குறையினைக் கூறுந் தகுதியிலேன் காண்! என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.