|
|
செய்யுள்
26
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வள்ளியோ
ரீதல் வரையாது போல
வெண்டிசைக் கருவிருந் தினமழை கான்றது
வெண்ணகைக் கருங்குழற் செந்தளிர்ச் சீறடி
மங்கைய ருளமெனக் கங்குலம் பரந்து
தெய்வங் கருதாப் பொய்யினர்க் குரைத்த |
10
|
|
நல்வழி
மானப் புல்வழி புரண்டது
கால முடியக் கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவ
ருயிர்தொறும் வளைந்தென வுயிர்சுமந் துழலும்
புகர்மலை யியங்கா வகையரி சூழ்ந்தன |
15
|
|
வெள்ளுடற்
பேழ்வாய்த் தழல்விழி மடங்க
லுரிவை மூடிக் கரித்தோல் விரித்துப்
புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கி
னதள்பிறக் கிட்டுக் குதிபாய் நவ்வியின்
சரும முடுத்துக் கரும்பாம்பு கட்டி |
20
|
|
முன்புகு
விதியி னென்புகுரல் பூண்டு
கருமா வெயிறு திருமார்பு தூக்கி வையகத்
துயிர்கள் வழக்கறல் கருதித்
தொய்யி லாடுங் கடனுடைக் கன்னிய
ரண்ணாந்த வனமுலைச் சுண்ணமு மளறு |
25
|
|
மொழிலிவான்
சுழலப் பிளிறுகுரற் பகட்டினந்
துறைநீ ராடப் பரந்தகார் மதமும்
பொய்கையுங் கிடக்குஞ் செய்யினும் புகுந்து
சிஞ்சை யிடங்கரைப் பைஞ்சிலைச் சேலை
யுடற்புலவு மாற்றும் படத்திரை வையை |
30
|
|
நிறைநீர்
வளைக்கும் புகழ்நீர்க் கூடல்
வெள்ளியம் பொதுவிற் கள்ளவிழ் குழலொடு
மின்பநடம் புரியுந் தேவ நாயக
னருவியுடற் கயிறுஞ் சுனைமதக் குழியும்
பெருந்தேன் செவியுங் கருந்தேன் றொடர்ச்சியு |
|
|
மோவாப்
பெருமுலைக் குஞ்சர மணக்க
வளந்தரு முங்க டொல்குடிச் சீறூர்க்
கண்ணிய விருந்தின னாகி
நண்ணுவன் சிறுநுதற் பெருவிழி யோளே. |
(உரை)
கைகோள்: களவு, தலைவன் கூற்று
துறை: இரவுக்குறி
வேண்டல்.
(இ-ம்.) இதற்கு மெய்தொட்டுப்
பயிறல் (தொல். கள. 11) எனவரும் நூற்பாவின்கண் தண்டாதிரப்பினும் எனவரும் விதி
கொள்க.
34:
சிறு........................விழியோளே
(இ-ள்)
சிறுநுதல்-சிறிய நெற்றியினையும்; பெருவிழியோளே-பெரிய கண்களையும் உடையோய்! என்க.
(வி-ம்.)
நுதல்-நெற்றி. விழி-கண்: இஃது ஆகுபெயர். இதன்கண் சிறுநுதல் பெருவிழி என்புழிச் செய்யுளின்பம்
உணர்க. இனி, தன் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளு மலவு கண்ணோட்டமுடைய என்பான் பெருவிழியோளே
என விளித்தான் என்க.
1-2:
வள்ளியோர்.........................கான்றது
(இ-ள்)
வள்ளியோர் வரையாது ஈதல் போல-வள்ளண்மை யுடையோர் அளவின்றி இரவலர்க்கு வழங்குமாறு
போலே; இனமழை கூட்டமாகிய முகில்; கரு இருந்து-சூற்கொண்டு;
எண்திசை கான்றது-எட்டுத் திசைகளிலும் பரவிப் பொழிந்தது என்க.
(வி-ம்.)
வள்ளியோர்-வள்ளண்மையுடையோர். வரைதல்- பொருளை வரையறுத்துக் கோடல். இனி, இன்னார்க்கு
வழங்க வேண்டும் இன்னார்க்கு வழங்குதல் கூடாது என வரையறை செய்து கோடலுமாம். மழை-முகில்.
உள்ளி யுள்ளவெல் லாமுவந் தியுமவ வள்ளி யோரின் வழங்கின மேகமே (கமப. க. ஆற்றுப்.
செய். 4) என்றார் கம்ப நாடரும். காலுதல்-பொழிதல். எண்டிசையும் எனல் வேண்டிய முற்றும்மை
செய்யுள் விகாரத்தால் தொக்கது.
3-4:
வெண்ணகை.........................பரந்தது
(இ-ள்)
கங்குலும்-இருள் தானும்; வெள்நகை கருங்குழல் செந்தளிர் சீறடி-வெள்ளிய பற்களையும்
கரிய கூந்தலையும் சிவந்த தளிர்போன்ற சிறிய அடிகளையும் உடைய; மங்கையர் உளம் என
பரந்தது-மாதர்களுடைய நெஞ்சம் போல இருண்டு யாண்டும் பரவியது என்க.
(வி-ம்.)
வெண்ணகைக் கருங்குழல் செந்த்ளிர்ச் சீறடி என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்ப
மிகுதலுணர்க. நகை-பல். குழல்-கூந்தல். மங்கையர் என்பது பருவங் குறியாது மகளிர் என்னும்
பொருட்டாய் நின்றது. நுங்கள் உள்ளம் எதனால் காண்டற்கரியதாயிருந்தது எனக் குறிப்பாலுணர்த்துவான்
கங்குல் மங்கையருளமெனப் பரந்தது என்றான். இருண்டு பரந்து எனப் பொதுத்தன்மை விரித்துக்
கொள்க.
5-6:
தெய்வம்......................புரண்டது
(இ-ள்)
வழி-இனி இயங்கும் வழிதானும்; தெய்வம் கருதா பொய்யினர்க்கு உரைத்த நல்வழி மான-தெய்வம்
உண்டு என்று நினைத்தாலும் செய்யாத பொய்மையினையுடைய மடவோர்க்குச் சான்றோர் கூரிய
நன்னெறி பிறழ்ந்து போதல் போலே; புல் புரண்டது-புற்கள் மூடிப் பெறழ்ந்து போயிற்று
என்க.
(வி-ம்.)
மெய்ப்பொருளாகிய கடவுளை உணராத மடவோர் பொய்ப்பொருள்களையே பற்றி உழன்று கிடத்தலின்
தெய்வங் கருதாப் பொய்யினர் என்றார். நல்வழி-சரியை கிரியை முதலிய அறிவு நெறி.
புல்லர் இவற்றைக் கேட்ட பின்னரும் இவற்றையே பொய்ந் நெறியாக மாற்றி ஒழுகுவாராதலின்
இங்ஙனம் ஓதினர். மான உவம உருபு. புல்முடிப் புரண்டது என்க. இனி வழி என்னும் எழுவாயை
வருவித்து அது புல்லிய வழியாய்ப் புரண்டது எனினுமாம்.
7-10:
காலம்............................சூழ்ந்தன
(இ-ள்)
கணக்கின்படியே காலம் முடிய-படைப்புக் கடவுள் முன்னரே கணித்துள்ள கணிதத்தின் படியே
உயிர்களின்
அகவைக் காலம் முடிய; மறலி விடுக்க வந்த தூதுவர்-கூற்றுவனால் ஏவப்பட்டு வந்த அவன்
தூதர்கள்; உயிர் தொறும் வளைந்தென-அகவை முடிந்த அவ்வவ் வுயிகளையும் சென்றுவளைத்துக்
கொள்ளுமாறுபோலே; அரி-சிங்கங்கள்; உயிர்சுமந்து உழலும் புகர்மலை இயங்கா வகை-உயிர்தாங்கிச்
சுற்றித்திரிகின்ற யானைகள் அங்ஙனம் இயங்காதபடி; சூழ்ந்தன-அவற்றைச் சூழ்ந்து கொண்டன
என்க.
(வி-ம்.)
படைப்புக் கடவுள் கணித்த கணக்கின் படியே உயிர்களுக்கு அகவைக் காலம் முடிய என்றும்,
அவ்வுயிர்தொறும் என்றும் வருவித்துரைத்துக் கொள்க. காலம்-அகவைக் காலம். மறலி-கூற்றுவங்
தூதுவர்-கூற்றுவன்தூதுவர். புகர்மலை-யானை. அரி-சிங்கம்.
11
- 12: வெள்ளுடற்........................விரித்து
(இ-ள்)
வெள் உடல் பேழ்வாய் தழல்விழி மடங்கல் உரிவை-தெள்ளிய உடம்பினையும் பெரிய வாயினையும்
தீப்போன்ற விழிகலையும் உடைய சிங்கத்தின் தோலையும்; கரித்தோல் விரித்து மூடி-யானைத்
தோலையும் விரித்துப் போர்த்தி என்க.
(வி-ம்.)
பேழ்-பெரிய. தழல்-நெருப்பு. மடங்கல்-சிங்கம். உரிவை-தோல். விரித்து மூடி என மாறுக.
எண்ணும்மை தொக்கன.
13
- 15: புள்ளி................................உடுத்து
(இ-ள்)
வள் உகிர் தரக்கின்-கூரிய நகங்களையுடைய புலியினது; புள்ளி பரந்த அதள் பிறகிட்டு-புள்ளிகள்
பரவிய தோலையும் பின்புறத்தே அணிந்து; குதிபாய் நவ்வியின் சருமம் உடுத்து-தாவுகின்ற
மானின் தோலையும் உடுத்து என்க.
(வி-ம்.)
வள்-பெரிய. உகிர்-நகம். தரக்கு-புலி. இது தரஷ்ஷு என்னும் வடமொழித் திரிபு. பிறக்கிடுதல்-முதுகுப்
புறமாக அணிதல். குதிபாய்-ஒருசொல். நவ்வி-மாங் சருமம்-தோல்.
15
- 17: கரும்பாம்பு..............................தூக்கி
(இ-ள்)
கரும்பாம்பு கட்டி-கரிய பாம்புகளை அணிகலன்களாக அணிந்து கொண்டு; முன்பு உகு விதியின்
குரல் பூண்டு-முற்காலத்தே இறந்தொழிந்த பிரமர்களின் எலும்பினைக் கழித்திலே அணிந்து;
கருமா எயிறு திருமார்பு தூக்கி-திருமாலாகிய பன்றியினது கொம்பினை அழகிய மார்பின்கண்
தூங்கவிட்டு என்க.
(வி-ம்.)
அணிகலன்களாகக் கட்டி என்க. முன்பு உகுவிதி எனக் கண்ணழித்துக் கொண்டு முன்பு இறந்தொழிந்த
பிரமர்கள் என்க. என்பு-எலும்பு குரல். ஆகுபெயர்; கழுத்து. கருமா-பன்றி. முன்புஉகு திருமாலாகிய
பன்றி எனவும் கூட்டுக. பிரமன் திருமால் முதலியோர் பலர் இறந்தொழிந்தனர் என்பதனை,
மாண்டலின்
வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும்
எண்டரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம்
கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி
உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்து மென்பார்
(சித்தியார் சுபக்கம். 242) |
எனவும்,
நூறு கோடி பிரமர்கள்
நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே (அப்பர். 5. 214-3) |
எனவும் வரும் செய்யுள்களானும்
உணர்க.
18-20:
யைகத்து..............................அளறும்
(இ-ள்)
கன்னியர்வையகத்து உயிர்கள் வழக்கு அறல் கருதி-கன்னி மகளிர் நிலத்தின்கண் மாந்தர்கள்
இயங்குதலின்மை கருதி வைகறையில் நீராடுதலால்; தொய்யில் ஆடும் கடன் உடை-தொய்யிலெழுதும்
முறைமையினையுடைய; அண்ணாந்த வனமுலை சுண்ணமும் அளறும்-இறுமாந்துள்ள அழகிய முலையிலணிந்த
சுண்ணமும் குங்குமக் குழம்பும் என்க.
(வி-ம்.)
கன்னியர்-மணமாகாத பெண்கள். உயிர்கள் என்பது ஈண்டுச் சிறப்பால் மாந்தரைக் குறித்து
நின்றது. ஆள்வழக்கற்ற வைகறைப்பொழுதில் கன்னியர் நீராடினர் என்பது கருத்து. தொய்யில்-சந்தனக்
கோலம். வனமுலை-அழகிய முலை. சுண்ணம்-நறுமணப்பொடி.
21-22:
எழிலி...........................மதமும்
(இ-ள்)
எழிலின்வான் சுழல-முகில்கள் வானத்தே திரியா நிற்றல் கண்டு; பிளிறு குரல் பகட்டு
இனம்-அவற்றைத் தம் பகையானைகள் என்று கருதிச் சினத்தால் முழங்கானின்ற யானைத்
திரள்; துறை நீர்ஆட-துறைகளில் இறங்கி நீராடுதலாலே; பரந்த கார் மதமும்-அவை சிந்திய
பரவிய கரிய மதநீரும் என்க.
(வி-ம்.)
எழிலி-முகில். பகையானை என்று கருதிப் பிளிறும் பகட்டினம் என்க. பகடு-யானை.
23-27: பொய்கையும்........................பொதுவில்
(இ-ள்)
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து-வாவியினிடத்தும் அகழியினும் கழனிகளினும்
புகுந்து; சிஞ்சை இடங்கரை பைஞ்சிலை சேலை உடல்புலவு மாற்றும்-முழக்கத்தையுடைய முதலைக்கும்
பைஞ்சிலுக்கும் சேலுக்கும் உடலின்கண் உண்டாகிய புலல் நாற்றத்தைத் தீர்த்தற்குக்
காரணமான; படம் திரை நிறைநீர் வையை வளைக்கும்- வெண்படாத்தை விரித்தாற்போன்ற
அலைகலையுடைய நிறைந்த நீரினையுடைய வையைப் பேரியாறு சூழ்ந்துள்ள; பிகழ்நீர் கூடல்
வெள்ளி அம் பொதுவில்-பலரும் புகழ்ர்தற்குக் காரனமான தன்மையயுடைய மதுரைமா நகரத்தில்
வெள்ளியம்பலத்தின்கண் என்க.
(வி-ம்.)
(18-27) கன்னியர் நீராடுதலால் சுண்ணமும் குங்குமக் குழம்பும், பகட்டினம் நீராடுதலால்
மதமும் விரவப்பெற்றுப் பொய்கை முதலியவற்றிற் சென்று இடங்கர் முதலியவற்றின் புலால்
நாற்றத்தை மாற்றும் நீரையுடைய வையை என்க. பொய்கை- இயற்கை நீர்நிலை. கிடங்கு-அகழி.
செய்-கழனி. சிஞ்சை-முழக்கம். இடங்கர்-முதலை. பைஞ்சில், சேல் இரண்டும் மீன்கள்.
புலவு-புலால் நாற்றம். படம்-படாம். புகழ்நீர் என்புழி நீர் தன்மை. வெள்ளியம் பொது-வெள்ளியம்பலம்.
27-28:
கள்ளவிழ்......................நாயகன்
(இ-ள்)
கள்ளவிழ் குழலோடும் இன்பநடம் புரியும்-தேன் பொழியும் மலர் பொருந்திய கூந்தலையுடைய
பார்வதியோடே இன்பக் கூத்தியற்றியருளுகின்ற; தேவநாயகன்-தேவதேவனாகிய சிவபெருமான்
என்க.
(வி-ம்.)
வாலெயி றூறிய நீர் என்றாற்போல இடத்து நிகழ்பொருளின்றொழி லிடத்தின்மே லேற்றப்பட்டது.
அவிழ்குழல்; அன்மொழித்தொகை. அவிழ்தல்-சொரிதல். கள்ளவிழ் தார்வென்றிக் கழல்வெய்யோய்
என்றார் வெண்பா மாலையினும். மாலை என்பது வருவிக்கப்பட்டது. கள்ளவிழ் குழலவிழ்தல்;
சினை வினைப்பாற்பட்டு முதல்வினையாயிற்றெனினுமாம். அதற்கு மலர்சினை போலக் குழற்கின்றியாமையாமையிற்
சினைப்பாற்பட்டதென்க. மலர் சுழ்ந்திருடூங்கிப் புரள்வனவே என்றாற்போல. உவமையொருபாக
மாதலின் அவளொடுங் க்டியென்ற வுவமை யெண்ணும்மை. இன்ப நடம்-அகக்கூத்து. அர்த்தநாரீசுரமாம்
என்க. உம்மையை யிழிவு சிறப்பாக்கின் காளியொடுங் கண்ணுக்கின்பமாகிய கூத்தைச்
செய்தவனென்க. உம்மை அசையுமாம் பார்ப்பதிக்கு மின்பத்தினால் வருநடத்தை யுண்டாக்கிய
தெய்வநாயக னெனினுமாம். உமை, எச்சவ்சும்மை, தனக்கும் நடத்தை யுண்டாக்கலின். குழலொடு:
உருபுமயக்கம். இன்பத்தினால் வரு நடமாவது உமை பருப்பதத்திற் சிவனோடு கூடுதற் பொருட்
டனேககோடி காலந் தவம் பண்ணிக் காணாது யோகத்திற் பார்த்துக் கூடும்படி யாடிய விலாசியம்.
அதற்குச் சித்திரகுண்டலி என்று பெயர்.
29-34: அருவி.......................நண்ணுவன்
(இ-ள்)
அருவி உடை கயிறும்-அருவியாகிய கழுத்திலிடு புரோசைக் கயிறும்; சுனைமதக்குழியும்-சுனையாகிய
மதநீர்க்குழியும்; பெருந்தேன் செவியும்-பெரிய தேனிறாலாகிய செவிகளும்; கருந்தேன்
தொடர்ச்சியும்-கரிய வண்டு நிரலாகிய சங்கிலியும்; ஓவாப் பெருமலை குஞ்சரம்-நீங்காத
பெரிய மலையாகிய யானையின்கண்; மணக்க வளம்தரும்-பொருந்த வளங்கொடுக்கின்ற; உங்கள்
தொல்குடி சீறூர்-உங்களுடைய பழைய குடியினையுடைய சிற்றூருக்கு; கண்ணிய விருந்தினன் ஆகி-நுங்களால்
கருதப்பட்ட ஒரு விருந்தினனாக; நண்ணுவன்-இற்றைநாள் இரவு யான் வருவேன்காண்! ஆதலால்,
என்னை மறாது ஏற்றுக்கொள்ளுமின் என்க.
(வி-ம்.)
இதன்கண் குறவர் வாழும் மலை யானையாக உருவகிக்கப்பட்டது. அந்த யானைக்கு அருவிநீர்
புரோசைக்கயிறு என்றும், சுனை மதக்குழி என்றும், மதமொழுகும் செவி அம்மலையிற் பொருந்திய
தேன் இறால் என்றும், அம் மலையில் மொய்க்கும் கரிய வண்டு வரிசைகள் சங்கிலி என்றும்
உருவகிக்கப்பட்டன எனவே, நீங்கள் யானை ஏறி வாழும் பெருங்குடிமக்கள் என்று புகழ்ந்தானாயிற்று.
பெருங்குடி மக்களாதலின் விருந்தினைப் புறக்கணிப்பீரல்லீர் என்பது குறிப்பு. எண்டிசையும்
மழை கான்றது, என்றது போதல் அருமை கூறுவான் போன்று மழையையுடைய இரவுக்குறி பெரிதும்
இன்பம் தருவதொன்று என்றுணர்த்தியவாறு. கங்குலும் பரந்தது என்றதும் போதலருமை கூறுவான்போன்று
நம்மை ஏதிலார் காண்கிலர் என்றுணர்த்தியபடியாம். வழிபுரண்டது என்றதும் போதலருமை
கூறியதாம். இனி அரிசூழ்ந்தன என்றது அஞ்சுவான் போன்று கொலைக்குடன்படுதல் நுமக்கு
அருளன்று என்றுணர்த்தியபடியாம். இன்னும் கங்குலும் பரந்தது என்றது இரவு வந்த விருந்தினை
மாற்றல் அறன் அன்று என்றுணர்த்தியபடியாம். வலந்தரும் உங்கள் தொல்குடிச் சீறூர்
என்றது புகழ்வான் போன்று யானும் அவ்வூரை நண்ணி வலம்பெற நினைக்கின்றேன் என்றுணர்த்தியபடியாம்.
இனி, சிறுநுதற் பெருவிழியோளே!
எண்டிசையும் மழை கான்றது; கங்குலும் பரந்து, வழியும் புரண்டது, அரிகளும் சூழ்ந்தன, இங்ஙனமாதலின்
நாயகன் வரையின்கண் வாழும் மறாது ஏற்றுக்கொண்மின் என வினை முடிவு செய்க.
என்னை மருதேற்றுக்கொண்மின்
என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.
|