பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 27

நேரிசையாசிரியப்பா

 
   
5
  புயற்கார்ப் பாசடை யெண்படப் படர்ந்த
வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து
நீடநிறை பாயும் வான வாவிக்கு
ளொருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன
மூவடி வழக்கிற் கோரடி மண்கொண்
10
  டொருதாள் விண்ணத் திருமைபெற நீட்டிய
கருங்கடல் வண்ணன் செங்க ருங்கரத்
தோன்றா லிருமலை யன்றேந் தியதென
வுந்தியொழுக் கேந்திய வனமுலை யாட்டியும்
வரைபொரு மருமத் தொருதிற னீயு
15
  முழைவா யரக்கர் பாடுகிடந் தொத்த
நிறைகிடைப் பொற்றை வரைகிடந் திறந்தா
லெரிதழற் குஞ்சிப் பொறுவிழிப் பிறழெயிற்
றிருளுட லந்தகன் மருள்கொள வுதைத்த
மூவாத் திருப்பதத் தொருதனிப் பெருமா
20
  னெண்ணிற் பெறாத வண்டப் பெருந்திர
ளடைவீன் றளித்த பிறைநுதற் கன்னியொடு
மளவாக் கற்ப மளிவைத்து நிலைஇய
பாசடை நெடுங்காடு காணிகோ ணீர்நாய்
வானவி னிறத்த நெட்டுடல் வாளைப்
25
  பேழ்வா யொளிப்ப வேட்டுவப் பெயரளி
யிடையுழற் நுசுப்பிற் குரவைவாய்க் கடைசியர்
களைகடுந் தொழிவிடுத் துழவுசெறு மண்டப்
பண்கா லுழவர் பகடுபிடர் பூண்ட
முடப்புது நாஞ்சி லள்ளல்புக நிறுத்திச்
30
  சூடுநிலை யுயர்த்துங் கடுங்குலை யேறப்
பைங்குவளை துய்க்குஞ் செங்கட் கவரி
நாகொடு வெருண்டு கழைக்கரும் புழக்க
வமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல
நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயுந்
  தண்ணம் பழனஞ் சூழ்ந்த
கண்ணிவர் கூடற் பெருவலம் பதியே.

(உரை)
கைகோள்: களவு. கண்டோர் கூற்று

துறை: நகரணிமை கூறல்.

     (இ-ம்.) இதற்கு, “பொழுதும் ஆறும்” (தொல். அகத். 40) எனவரும் நூற்பாவின்கண், ‘ஊரது சார்வும் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும்’ எனவரும் விதிகொள்க.

1-33: புயல்......................................வாவிக்குள்

     (இ-ள்) எண்படப்படர்ந்த புயல் கார்-ஆராய்தலுண்டாக வானெங்கும் பரவிய நீரையுண்ட முகிலாகிய: பாசடை-பசிய இலையினையும்; நீட கொள்ளை முகம் வைத்து-காலம் நீட்டிப்ப ஆயிரம் முகம் வைத்து; நிறை பாயும் வெள்ளப்பெரு நதி-பெருகப்பாயும் வெள்ளத்தையுடைய கங்கையாகிய வானப் பேரியாற்றினையுமுடைய; வானவாவிக்குள்-வானப்பொய்கையில் என்க.

     (வி-ம்.) காராகிய பாசடையையும் நதியினையும் உடைய வானமாகிய பொய்கை என்க. புயல்-நீர். கார்-முகில். எண்-ஆராய்ச்சி. கொள்ளை-மிகுதி. காலம் நீண்ட என்க. வாவி-இயற்கை நீர் நிலை. இது வியனிலையுருவகம். ஒன்றன் உறுப்புப் பலவற்றையும் உருவகித்தும் உருவகியாதும் உறுப்பியையும் கூறுதலான் என்க.

4-8: ஒரு....................................என

     (இ-ள்) நடு ஒரு செந்தாமரை மலர்ந்தென்ன-நடுவிடத்தே ஒரு செந்தாமரை மலர் மலர்ந்தாற்போல; மூஅடி வழக்கிற்கு ஓர் அடி மண்கொண்டு-மாவலிபால் மூன்றுஅடி மண்ணிரந்து அவற்றைப் பெறுகின்ற வழக்கிற்காக ஒரு காலால் நிலஉலக முழுவதையும் எஞ்சாது அளந்து கொண்டு; இருமை பெற ஒருதாள் விண்ணித்து நீட்டிய-பெருமையுண்டாக மற்றொரு திருவடியை வானத்தே நீட்டியருளிய; கருகடல் வண்ணன்-கரிய கடல்போலும் நிறத்தினையுடையவனாகிய திருமால்; செம்கரும் கரத்து ஒன்றால்-தனது சிவந்த கரிய கைகளுள் வைத்து ஒருகையால்; அன்று இருமாலை ஏந்தியது என்ன-பண்டொருநாள் ஏந்திய கோவர்தன மலையேயன்றி இரண்டு மலைகளை ஏந்தினாற்போல என்க.

     (வி-ம்.) வானத்தில் நீட்டப்பட்ட திருவடிக்கு வானவாவிக்குள் நடுவிடத்தே மலர்ந்த செந்தாமரை மலர் உவமை. விண்ணம்-விண். இனி விண்அத்து-அத்து சாரியை எனினுமாம். அகங்கை சிவந்து புறங்கை கறுத்தும் இருத்தலின் செங்கருங்கரம் எனப்பட்டது. இரு மலை ஏந்தியதுபோல என்றது இல்பொருள் உவமை.

9-10: உந்தி.....................................நீயும்

     (இ-ள்) உந்தி ஒழுக்கு ஏந்திய வனம் முலையாட்டியும்-கொப்பூழினின்று எழுந்த மடிரொழுக்கின்மேல் தங்கிய அழகிய முலையினையுடைய இந்நங்கையும்; வரை பெரும் மருமத்து ஒரு திறன் நீயும்-மலைபோல அகன்ற மார்பினையும் ஒப்பற்ற வெற்றியினையுமுடைய நீயும் என்க.

     (வி-ம்.) (1-10) திருமால் இரண்டு மலையேந்தி நின்றாற் போன்று தலைவியின் உச்சியினின்று ஒழுங்குபட்டுள்ள மயிரொழுங்கு அவள் முலை இரண்டினையும் சுமந்து நிற்கின்றது என்பது கருத்து. மயிரொழுங்கு திருமாலுக்கும் இருமலைகள் இரு முலைகளுக்கும் உவமை. வனம்-அழகு. மருமம்-மார்பு.

11-12: முழை................................இறந்தால்

     (இ-ள்) முழைவாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த-மலை முழைபோன்ற பெரிய வாயினையுடைய அரக்கர்கள் தவங்கிடந்தாற்போலக் கிடக்கின்ற; நிறை கிடைப்பொற்றை வரை கடந்து இறந்தால்-நிறையாகிய சிறிய மலைகள் கிடக்கின்ற அதோ தோன்றுகின்ற பெரிய மலையினைக் கடந்து அப்பாற் சென்றால் என்க.

     (வி-ம்.) வனமுலையாட்டியும் நீயும் அதோ தோன்றுகின்ற மலையைக் கடந்து சென்றால் என இயைக்க. முழை-குகை. பாடுகிடத்தல்-நோன்புமேற்கொண்டு ஓரிடத்தே கிடத்தல். இதனை “பாசண்டச்சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு” (சிலப். 9-15) எனவரும் சிலப்பதிகாரத்தானும் உரையானும் உணர்க. நிறை-கனம். பொற்றை-சிறு மலை. சிறுமலைகளையுடைய பெருமலை என்க. எதிரே தோன்றும் மலையைக் காட்டிக் கூறுதலின் சுட்டுசொல் வருவித்தோதுக. பாடு-உடல் என்பர் பழைய உரையாசிரியர்.

13-15: எரி..................................பெருமான்

     (இ-ள்) எரிதழல் குஞ்சி பொறி விழ பிறழ் எயிறு இருள் உடல் அந்தகன்-எரிகின்ற தீப்பிழம்பு போன்ற தலைமயிரினையும் தீப்பொறி பறக்கும் கண்களையும் பிறழ்ந்த பற்களையும் கறுத்த உடம்பினையுமுடைய கூற்றுவனும், மருள்கொள உதைத்த மூவா திருப்பத்து-மருளும்படி உதைத்த மூவாமையுமுடைய திருவடிகளையுடைய; ஒரு தனிப்பெருமான்-ஒப்பற்ற தனிமுதல்வனாகிய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) எரிதழற்குஞ்சிப் பொறிவிழிப் பிறழெயிற்று இருளுடலந்தகன் என்னும் சொல்லோவியம் பெரிதும் இன்பந் தருதலுணர்க. தழல்-நெருப்பு. குஞ்சி ஆண்தலைமயிர். பொறி-தீப்பொறி. இருள்-ஈண்டுக் கருநிறம். அந்தகன்-கூற்றுவன். அந்தத்தைச் செய்பவன் என்பது பொருள். அந்தகனும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. மூவா-முதிராத. மூவாதிருப்பதம் என்றது இறைவனுடைய அழியாத்தன்மையை உணர்த்தியபடியாம். கடவுளர்க்கெல்லாம் கடவுளாயவன் என்பார் ஒரு தனிப்பெருமான் என்றார்.

16-18: எண்ணில்...............................நிலைஇய

     (இ-ள்) எண்ணில் பெறாத அண்டப்பெருந்திரள் அடைவு ஈன்று அளித்த-அவைகளால் அளந்து முடிவு காணப்படாத அண்டங்களின் பெரிய கூட்டத்தைப் படைக்கும் முறையானே படைத்தளித்த; பிறைநுதல் கன்னியொடும்-பிறைபோன்ற நெற்றியினையுடைய பார்வதியோடும்; அளவாக் கற்பம் அளிவைத்து நிலைஇய-ஒருவராலும் அளவுபடுத்தப்படாத ஊழிகள் பலவும் இந்நகரத்தின்கண் உறைதல் வேண்டும் என்று ஓர் அருள் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற (கூடற்பதி) என்க.

     (வி-ம்.) பெருமான் கன்னியொடும் அளிவைத்து நிலைஇய கூடற்பதி எனக்கூட்டுக. எண்-அளவை. “அண்டப்பகுதி உண்டைப்பெருக்கம் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்பவாகலின் எண்ணிற்பெறாத அண்டப்பெருந்திரள் என்றார். அடைவு-படைக்கும் முறை. கன்னி-இறைவி. கற்பம்-ஊழி. அளி-அருள். இந் நகரத்தில் எப்பொழுதும் ஒருவாதுறைத்தல் வேண்டும் எனத் திருவுளத்தடைத்து உறைகின்றான் என்பது கருத்து.

19-21: பாசடை...............................ஒளிப்ப

     (இ-ள்) பாசடை நெடுங்காடு காணிகொள் நீர்நாய்-பசிய இலைகளையுடைய நெடிய தாமரைக்காட்டினை உறைவிடமாகக்கொண்ட நீர்நாயானது; வானவில் நிறத்த நெட்டுடல் வாளைபேழ்வாய் ஒளிப்ப-இந்திர வில்லைப்போன்ற நிறத்தையுடைய நீண்ட உடலினையுடைய வாளைமீனினது பெரிய வாயினூடே சென்று புகாநிற்பவும் என்க.

     (வி-ம்.) பாசடை நெடுங்காடு என்றது தாமரைக்காட்டினை. காணி-உறைவிடம். நீர்நாய்-நீரில்வாழும் ஒருவகை நாய்.

21-23: வேட்டுவ..................மண்ட

     (இ-ள்) வேட்டுவப் பெயர் அளி இடை உறழ்நுசப்பின் குரவைவாய் கடைசியர்-வேட்டுவன் என்னும் பெயரையுடைய குளவியினது இடையைப்போன்ற இடையினையும் குரவைபாடும் வாயினையும் உடைய உழத்தியர்; களைகடும் தொழில் விடுத்து உழவுசெறு மண்ட-களைகாட்டும் தங்கள் தொழிலைவிட்டு உழவினையுடைய வயலிலே செல்லாநிற்பவும் என்க.

     (வி-ம்.) வேட்டுவப்பெயர் அளி-வேட்டுவன் என்னும் பெயரையுடைய ஒருவகைக் குளவி. இதன் இடை மிகவும் நுண்ணி தாக இருக்கும். ஆதலின் மகளிர் இடைக்கு இப்புலவர் இதனை உவமையாக எடுத்தார். இக்குளவி சுவரில் மண்ணாற் கூட்டியற்றி ஒருவகைப் பச்சைப்புழுவினைக் கொணர்ந்து அக்கூட்டில்வைத்து மூடிவிடும். அப்பச்சைப்புழுவே பின்னர்க் குளவியாக மாறிவிடுகிறது என்பது நம்முன்னோர் நம்பிக்கை. இக்குளவிக்கு வேட்டுவன் என்னும் பெயர் உண்டு என்பதனை,

“வண்டுக ளாகி மாறு மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்
 பண்டைய வுருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
 கண்டுகொள் யோனி யெல்லாங் கன்மத்தால் மாறு மென்றே
 கொண்டன சமய மெல்லாம் இச்சொல்நீ கொண்ட தெங்கே”

எனவரும் சித்தியாரினும் காண்க. இதனை ‘வேட்டுவாளி’ என்றும் வழங்குப. களைகடும் என்புழிக் கடுதல்-கலைதல். செறு-வயல்.

24-26: பண்....................................ஏற

     (இ-ள்) பண்கால் உழவர் பகடு பிடர்பூண்ட முடப்புது நாஞ்சில்-மருதப்பண்ணை பாடுதலுடைய உழவர்கள் எருது தம் பிடரிற் சுமந்த வளைவினையுடைய புதிய கலப்பைகளை; அள்ளல்புக நிறுத்தி-சேற்றில் அழுந்தும்படி நிறுத்தி வைத்துக் கலத்திற் சென்று; சுடுதலை உயர்த்தும் கடுங்குலை ஏற- நெல்லரியினைப் போர்வாக உயர்த்தியுள்ள சிறப்பினையுடைய கடிய கரையின்கண் ஏறாநிற்பவும் என்க.

     (வி-ம்.) பண்-மருதப்பண். காலுதல்-ஈண்டு வெளிப்படுத்திப் பாடுதல் என்னும் பொருட்டு.

“கண்ணெனக் குவலையுங் கட்ட லோம்பினார்
 வண்ணவாண் முகமென மரையி னுட்புகார்
 பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
 தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே”         (சீவக. 1. 51)

என்றார் திருத்தக்க தேவரும். உழவர், நாஞ்சிலை அள்ளல்புக நிறுத்தி என்க. பகடு-எருது. நாஞ்சில்-கலப்பை. அள்ளல்-சேறு. உழவர் ஏரினை நிறுத்துங்கால் கலைப்பையைச் சேற்றில் அழுத்திவைத்து நிறுத்துதல் இயல்பு. சுடு-நெல்லரி. நிலை-ஈண்டுப் போர்வு. குலை-கரை. கடுங்குலை என்றது செங்குத்தாக உயர்ந்த கரை என்றவாறு.

27-28: பைங்குவளை..................................உழக்க

     (இ-ள்) பைங்குவளை துய்க்குகம் செங்கண் கவரி நாகொடு-பசிய குவளைமலரை மேய்கின்ற சிறந்த கண்ணையுடைய எருமை தன் கன்றோடு; வெருண்டு கழைக் கரும்பு உழக்க- வெருண்டோடிக் கழையாகிய கரும்புகளை உழக்கவும் என்க.

     (வி-ம்.) வைங்குவளை செங்கட்கவரி என்புழிச் செய்யுளின்பமுணர்க. கவரி-எருமை. “கரும்பினைக்கவரி முறித்திட” (சிவராத். குபேர. 9) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. நா-கன்று. “எருமையும் மரையும் பெற்றமும் நாகே” (மரபி. 63) என்பது தொல்காப்பியம். உழக்குதல்-துவைத்தும் முறித்தும் அழிவுசெய்தல்.

29-30: அமுத..............................பாயும்

     (இ-ள்) அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழிபோல-அமுதம்போன்ற வாயூறலையும் மொழியினையும் உடைய இள மகளிரின் நச்சுத்தன்மையுடைய விழிகள்போல; நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயும்-நெடிய குழைகள் கிழியும்படி மிக்க கயல்மீன்கள் பாய்தற்குக் காரணமான என்க.

     (வி-ம்.) அமுத வாயினையும் மொழியினையுமுடையோர் என்க. வாய்: ஆகுபெயர். வாயூறல் என்க. நச்சுவிழி-நச்சுத்தன்மை பொருந்திய விழி. குழைகிழிப்ப என்பது சிலேடை. விழிக்குக் குழை காதணிகலனாகவும் கயலுக்குப் பசிய இலையாகவும் பொருள் கொள்க. கடுங்கயல் என்புழி கடி என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்து விரைவுப் பொருள் உணர்த்தி நின்றது. உழத்தியர் உழுவயலில் மண்டவும், உழவர் கரையேறவும் எருமை கன்றொடு வெருண்டு கரும்புழக்கவும் கயல்பாயும் என்க.

31-32: தண்ணம்..................................பதியே

     (இ-ள்) தண்ணம் பழனம் சூழ்ந்த-குளிர்ந்த கழனிகளால் சூழப்பட்ட; கண் இவர் பெருவளம் கூடல்பதி-காண்போர் கண்கள் மீண்டும் காண்டற்கு அவாவும் பெரிய வளத்தினையுடைய நான்மாடக்கூடலாகிய மதுரைமாநகரம் நுங்களுக்குக் கண்கூடாகத் தோன்றும் ஆதலின் அம்மலை எய்துமளவும் விரைந்து செல்வீராக என்க.

     (வி-ம்.) தோன்றும் என்பது அவாய்நிலையால் வருவித்துக் கூறப்பட்டது. ஆதலின் அம்மலை எய்துமளவும் விரைந்து செல்வீராக என்பது குறிப்பெச்சம். என்னை" அவர்க்கு அப்பாலை நிலம் துன்பமாயிருத்தலின் கண்டோர் அத்துன்பம் தீருதற்கே இது கூறலின் இதுவே அவர் குறிப்பு என்க. ஒருதிறல்! நீயும் முலையாட்டியும் இவ்வரை கடந்திறந்தால் ஒரு தனிப்பெருமான் கன்னியொடு நிலைத்துள்ள கூடற்பதி தோன்றும். ஆதலால் விரைந்து செல்க! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.