|
|
செய்யுள்
28
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பற்றலர்த்
தெறுதலு முவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி யெனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்பர்க் குருதி வேலவ
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருந் தான்பெரிது நிறுத்தி |
10
|
|
யமுதயில்
வாழ்க்கைத் தேவர்கோ னிகழ்ச்சிய
மதமலை யிருநான்கு பிடசுமந் தோங்கிச்
செம்பொன்மணி குயிற்றிய சிகரக் கோயிலு
ளமையாத் தண்ணளி யுமையுட னிறைந்த
வாலவா யுறைதரு மூலக் கொழுஞ்சுடர் |
15
|
|
கருவி
வான மடிக்கடி பொழியுங்
கூடஞ் சூழ்ந்த நெடுமுடிப் பொதியத்துக்
கண்ணுழை யாது காட்சிகொளத் தோற்றிய
வெறிவீச் சந்தி னிரையிடை யெறிந்து
மற்றது வேலிகொள வளைத்து வளரேன |
20
|
|
னெடுங்காற்
குற்றுழி யிதணுழை காத்துந்
தேவர் கோமான் சிறையரி புண்ணினுக்
காற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தெனக்
கமஞ்சூற் கொண்மூ முதுகுகுடி யிருந்து வானுட்க
முரற்று மலைச்சுனை குடைந்தும் |
25
|
|
பிரசமும்
வண்டு மிரவிதொறு மணியும்
வயிரமும் பொன்னு நிரைநிரை கொழித்துத்
துகினான்று நுடங்கு முருவி யேற்று
மறுவறு செம்மணி காற்கவ ணிறுத்தி
நிறைமதி கிடக்கு மிறால்விழ வெறிந்து |
30
|
|
மெதிர்சொற்
கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழிற் புக்கு நெடுமலை கூயு
நுசப்பின் பகைக்கு நூபுர மரற்றப்
பைங்காடு நிரைத்த வெண்மலர் கொய்து
மனத்தொடு கண்ணு மடிக்கடி கொடுபோஞ் |
|
|
செம்பொன்
செய்த வரிப்பந்து துரந்து
மினைய பன்னெறிப் பண்ணை யெங்கு
மளவாக் கன்னிய ரிவரு
ளுளமாம் வேட்கைய ளின்னளென் றுரையே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.
துறை: அறியாள்போன்று
நினைவுகேட்டல்.
(இ-ம்.)
இதனை நாற்றமும் தோற்றமும் (தொல், களவி. 23) எனவரும் நூற்பாவின்கண், குறையுறற்கெதிரிய.......................இரு
நான்கு கிளவியும் என்பதன்கண் எஞ்சாது கிளந்த என்னும் மிகையால் அமைத்துக்கொள்க.
1-3:
பற்றலர்........................வேலவ
(இ-ள்)
பற்றலர் தெறுதலும் உவந்தோர் பரித்தலும்-பகைவரை அழித்தலாலும் நண்பரைப் பாதுகாத்தலாலும்
நிரலே; வெஞ்சுடர் என தண்மதி என-வெவ்விய ஞாயிறு போலும் குளிர்ந்த திங்கள் போலும்;
புகழ் நிறீஇய-உலகத்தே புகழை நிலைநிறுத்திய; நெடுஇலைகுறும்புகர் குருதி வேலவ-நெடிய இலையினையும்
சிறிய புள்ளிகளாய் அமைந்த குருதியினையுமுடைய வேற்படையினையுடையயோய் என்க.
(வி-ம்.)
பற்றலர்-பகைவர். தெறுதல்-அழித்தல். உவந்தோர்- நண்பர். பரித்தல்-பாதுகாத்தல்.
வெஞ்சுடர்-ஞாயிறு. தண்மதி- திங்கள். சுடரும் மதியும் எனல்வேண்டிய எண்ணும்மை தொக்கன.
இது நிரனிறையுவமை. தறுதலானும் பரித்தலானும் என மூன்றனுருபு விரித்துக்கொள்க. தெறுதலால்
வெஞ்சுடர் எனவும் பரித்தலால் தண்மதி எனவும் இயைத்துக்கொள்க. இலை- இலைவடிவிற்றாகிய
உறுப்பு. புகர்-புள்ளி. இப்பகுதியில் மூன்றடிகளிலும் முரணணிதோன்றிச் செய்யுளின்பம்
மிகுதலுணர்க.
4-10: வேதியன்......................................சுடர்
(இ-ள்)
ஆலவாய் அமுது அயில் வாழ்க்கை தேவர்கோன்- திருவாலவாய் என்னும் மதுரையம்பதியின்கண்
அமிழ்த முண்ணும் வாழ்க்கையினையுடைய அமரர்கோமான்: இருநான்கு மதமலை பிடர்சுமந்து
ஓங்கி-அயிராவதம் முதலிய திசையானைகள் எட்டும் தம்முடைய பிடரின்கட் சுமந்து ஓங்கும்படி;
வேதியன் படைக்க மாலவன் காக்கப் பெறாதோர் திருஉருதான்- பிரமன் படைக்கவும் திருமால்
காக்கவும் பெறாததோர் அழகிய உருவத்தினை; பெரிது நிறுத்தி இழிச்சிய-பெரிதாக நிறுத்திக்
கீழிறக்கிய; செம்பொன் மணிகுயிற்றிய கிகரக் கோயிலுள்-சிவந்த பொன்னாலும் மணிகளாலும்
இயற்றப்பட்ட முடியினையுடைய திருக்கோயிலின்கண்; அமையா தண் அளி உமையுடன்-ஒழியாத
குளிர்ந்த அருளையுடைய அங்கையற்கண்ணம்மையோடே; உறைதரும் நிறைந்த மூலக் கொழுஞ்சுடர்-எழுந்தருளிய
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த முதன்மையுடைய கொழுவிய ஒளிப்பிழம்பாகிய இறைவன்
என்க.
(வி-ம்.)
வேதியன்-பிரமன். வேதியன் படைக்கவும் மாலவன் காக்கவும்படாத திருவுரு என்றது சுயம்புலிங்கத்தை.
மதமலை- யானை. இருநான்கும் எனல்வேண்டிய முற்றும்மை தொக்கது. ஓங்கி-ஓங்கும்படி. இருநான்குமதமலை
என்றதனால் திசையானைகள் என்பது பெற்றாம். அவை ஐராவதம், புண்டரீகம், வாமனம்,
குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபூமம், சுப்பிரதீபம் என்பன. குயிற்றிய-இயற்றிய.
சிகரம்-முடி. உமையுடன் உறைதரும் கொழுஞ்சுடர். நிறைந்த கொழுஞ்சுடர, மூலக்கொழுஞ்சுடர
எனத் தனித்தனி கூட்டுக. உலகிலுள்ள ஏனைய இலிங்கங்களுக்கெல்லாம் இவ்விலிங்கம் மூலலிங்கமாதல்பற்றி
மூலக்கொழுஞ்சுடர என்றார். இதனை,
பொன்னெடு மேரு
வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்
(திருவிளை. மூர்த்தி. 2) |
எனவும்,
அப்பதி யிலிங்க
மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரன மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ
(திருவிளை. மூர்த்தி. 3) |
எனவும் வரும் பரஞ்சோதிமுனிவர்
வாக்காலும் உணர்க. தேவர்கோன் ஓங்கும்படி உருநிறுத்தி இழிச்சிய கோயில் என் இயைபு
காண்க.
11-12:
கருவி....................................பொதியத்து
(இ-ள்)
அடிக்கடி கருவிவானம் பொழியும்-திங்கள் மும்முறையாக அடிக்கடி மின்னல் முதலிய தொகுதிகலையுடைய
முகில் மழைபொழிதற்கிடனான; கூடம் சூழ்ந்த நெடுமுடி பொதியத்து-தேவகோட்டங்கள் சூழ்ந்துள்ள
நெடிய முடியினையுடைய பொதிய மலையின்கண் என்க.
(வி-ம்.)
திங்கள் மும்மாரி பொழியும் என்பார் அடிக்கடி பொழியும் என்றார். அடிக்கடி என்றது
அணித்தணித்தாக என்றவாறு. கருவி-தொகுதி. வானம்: ஆகுபெயர். கூடம்-நன்றாகச் சூழப்பட்ட
தேவகோட்டம்.
13-16:
கண்..............................காத்தும்
(இ-ள்)
கண்நுழையாது காட்சிகொளத்தோன்றிய வெறிவீ சந்தின் நிரை இடை எறிந்து-காண்போர்
கண்ணொளி தன்னகத்தே நுழையப்படாததாய்ப் புறத்தே நின்று நோக்குவார்க்குக் காட்சி
இன்பமுண்டாடக் காணப்பட்ட நறிய மலர்களையுடைய சந்தனமரங்களின் வரிசையினை இடைவெளியுண்டாகும்படி
வெட்டி வீழ்த்தி; மற்று அது வேலிகொள வளைத்து வளர் ஏனல்-பின்னரும் அச்சந்தன மரத்தினையே
வேலியாகவைத்து வளைத்துக் கட்டியதனால் அப்புனத்திலே வலராநின்ற தினையினை; நெடுங்கால்
குறுஉழி இதண்உழை காத்தும்-நெடிய கால்கலையும் குறிய இடத்தினையுமுடைய பரணிடத்து காவல்
செய்தும் என்க.
(வி-ம்.)
கண்: ஆகுபெயர். காட்சி: ஆகுபெயர். வெறி- நறுமணம். வீ-மலர். சந்து-சந்தனம். மற்றது:
சாதி ஒருமை. சந்தன மரத்தை வெட்டி அதனையே வேலியாக்கி என்பது கருத்து. ஏனல்-தினை.
நெடுங்கால் குற்றுழி என்புழிச் செய்யுளின்பமுணர்க. உழை இருந்து என ஒருசொல் வருவித்துக்கொள்க.
இதண்-பரண்.
17-20:
தேவர்...............................குடைந்தும்
(இ-ள்)
தேவர்கோமான் சிரை அரி புண்ணினுக்கு ஆற்றாது-இந்திரன் தம்முடைய சிரகுகளை அரிந்தமையாலுண்டான
புண்ணால் உண்டாகும் துன்பத்திற்கு ஆற்றாமல்; பெருமுழை வாய்விட்டுக்கலுழ்ந்து என-தமுடைய
பெரிய முழைகளாகிய வாயைத் திறந்து அழுதாற்போலே; கமம் சூல்கொள்மூ முதுகு குடியிருந்து
வன் உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும்-நிறைந்த சூலினையுடைய முகிலள் தம் முதுகிலே
குடியாகவிருந்து தேவர்களும்
அஞ்சும்படி முழங்குதற்கிடனான மலையின்கண் அமைந்த சுனைகளிலே நீராடியும் என்க.
(வி-ம்.)
மலையில் உறைகின்ற முகில் முழங்குதல் அமலை அழுவதுபோலத் தோன்றுகின்றது என்பது கருத்து.
இனி மலை அழுதற்குக் காரணங்கூறுவார் தம்முடைய சிறகுகளை இந்திரன் அரிந்தமையால் உண்டான
புண்ணிற்கு ஆற்றாது என்றார். சிறை-சிறகு. அரிபுண்: வினைத்தொகை. புண்: ஆகுபெயர்:
மலை முழையாகிய வாயைத்திறந்து அழுதாற்போல என்க. கலுழ்தல்- அழுதல். கமம்-நிறைவு.
கொண்மு-முகில். வாள்: ஆகுபெயர். முரற்றுதல்-முரலுதல்; முழங்குதல். குடைதல்-நீராடுதல்.
21-23:
பிரசமும்........................ஏற்றும்
(இ-ள்)
பிரசமும் வண்டும் இரவி தெறும் மணியும்-தேனையும் வண்டுகலையும் ஞாயிற்றின் ஒளியைத்
தோற்பிக்கும் மாணிக்கத்தையும்; வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து- வயிரத்தையும்
பொன்னையும் வரிசைவரிசையாகக் கொழித்து; துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்-பல
வண்ணத்துகில் தூங்கி அசைதல்போலே நுடங்கிவீழும் அருவிநீரினை மெய்யின்கண் ஏற்று
விளையாடியும் என்க.
(வி-ம்.)
பிரசம்-தேன். இரவி தெறுமணியெனவே சாதுரங்கம் என்னும் மாணிக்கம் என்பது பெற்றாம்.
என்னை! சாதுரங்க நிறம் கமலம், கருநெய்தல், இரவியொளி, தழல் என்பவாகலான் என்க.
தேன் கருவண்டு மாணிக்கம் வயிரம் பொன் இவற்றை வரிசை வரிசையாகக் கொழித்துக்கொண்டு
வீழ்தலால் அருவிக்குப் பலவண்ணத் துகில் உவமை என்க. அருவிநீரை உடம்பில் ஏற்று விளையாடுதலின்
அருவியேற்றம் என்றாள்.
24-25:
மறுவறு......................எறிந்தும்
(இ-ள்)
மறுஅறு செம்மணி கால் கவண்நிறுத்தி-குற்றமற்ற மாணிக்கத்தைக் காலினையுடைய கவணிடத்தே
வைத்து; நிறைமதி கிடக்கும் இறால்விழ-முழுத்திங்கள் கிடந்தாற்போலே கிடக்கின்ற
தேன் கூண்டு வீழும்படி; எறிந்தும்-அம்மாணிக்கத்தை வீசியும் என்க.
(வி-ம்.)
மறு-குற்றம். கால்-கவணினைச் சுற்றுதற்குரிய சிறு கயிறுகள். நிறைமதி தேன்கூண்டுக்கு
உவமை.
26-27:
எதிர்........................கூயும்
(இ-ள்)
எதிர்சொல்கேட்ப நெடுமலை கூயும்-எதிரொலி கேட்டு மகிழ்தற் பொருட்டு நெடிய மலை எதிர்நின்று
கூவியும்; கால்புக திகைத்த நெருக்கு பொழில் புக்கும்-காற்றும் புகுதற்கியலாதபடி நெருங்கிய
சோலையின்கண் புகுந்தும் என்க.
(வி-ம்.)
எதிர்சொல்-எதிரொலி. கூயும்-கூவியும். கால்-காற்று. இனி அடி வைத்தற்கியலாத எனினுமாம்.
28-29:
நுசுப்பின்.................................கொய்தும்
(இ-ள்)
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற-இடைக்குப் பகையாதல் கருதித் தங் கிங்கிணிகள் புலம்பவும்;
பைங்காடு நிரைத்த எண்மலர் கொய்தும்-பசிய பூஞ்சோலையிற் பரவிய தாம்தாம் கருதிய
மலர்களைக் கொய்தும் என்க.
(வி-ம்.)
எண்மலர்: வினைத்தொகை. நுசுப்பு-இடை. இடைக்குச் சுமையாகி அதனை வருத்துதலின் நுசுப்பின்பகை
எனப்பட்டது. நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற என்க. நூபுரம்-சிலம்புமாம். நிரைத்த:
பலவறிசொல். சிலம்பரற்றக் கொய்தும் என்றமையால் யாண்டும் சுற்றித்திரிந்து கொய்வார்
என்பது பெறப்பட்டது.
30-31:
மனத்தொடு...............................துரத்தும்
(இ-ள்)
மனத்தொடு கண்ணும் அடிக்கு அடிகொடுபோம்- புடைப்போருடைய மனத்தையும் கண்களையும் புடைக்குந்தொறும்
தம்மோடு கொண்டு செல்லுகின்ற; செம்பொன் செய்த வரிபந்து துரத்தும்-சிவந்த பொன்னாலியற்றிய
வரிகலையுடைய பந்துகளைப் புடைத்தும் என்க.
(வி-ம்.)
பந்தாடுவோர் பந்துபுடைக்குங்கால் அதனை நினைந்தும் அது செல்லுமளவும் பார்த்தும் நிற்றல்
இயல்பாகலின் மனத்தொடு கண்ணுங் கொடுப்போம் பந்து என்றாள். வரிப்பந்து-வரிந்த
பந்துமாம்.
32-34:
இனைய.....................உரையே
(இ-ள்)
இனைய பல்நெறி பண்ணை எங்கும் அளவாக் கன்னியர்-இத்தன்மையவாகிய பலவேறு வழிகளானும்
ஆடும் விளையாட்டிடங்கள் தோறும் அலவுபடுத்தப்படாத கன்னிமாராகிய தோழியர் உளர்;
இவருள் உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரை-இவர்களுள் நின்னெஞ்சத்திலுண்டாகும்
வேட்கைக்குக் காரணமானவள் இத்தன்மையள் என்று எனக்கு உணர்த்துவாயாக என்க.
(வி-ம்.)
பண்ணை-மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகுபெயராய் இடங்குறித்து நின்றது. உளர் என்றும்
யான் அறிகின்றிலேன் என்றும் அவளை எனக்கு உணர்த்துவாயாக என்றும் வருவித்தொதுக.
இனி வேலவ! கொழுஞ்சுடரையுடைய பொதியத்திடத்துத் தினைகாத்தும் சுனைகுடைந்தும், அருவி
ஏற்றும், கவணெறிந்தும், நெடுமலைகூயும், மலர்கொய்தும், பந்து துரந்தும் இனைய பன்னெறியானும்
விளையாடும் பண்ணையில் அளவிலாக் கன்னியர் உளர். இவருள் நின் வேட்கைக்குக் காரணமானவள்
யார்? யான் அறிகின்றிலேன். அவள் இன்னளென்று நீ எனக்கு உரை; என வினைமுடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|