|
|
செய்யுள் 31
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொருள்செய
லருத்தியி னெண்வழி தடைந்து
நாற்றிசை நடக்கு மணங்கி னவயவத்
தலைதரு தட்டைக் கரும்புற மலைமடல்
கடற்றிரை யுகளுங் குறுங்கயன் மானுங்
கடுங்கான் றள்ளித் தடைதரு நெஞ்சங் |
10
|
|
கயிலைத்
தென்பாற் கானகந் தனித்த
தேவர்நெஞ் சுடைக்குந் தாமரை யேவின்
மணக்கோ றுரந்த குணக்கோ மதனைத்
திருக்குள முளைத்த கட்டா மரைகொடு
தென்கீழ்த் திசையோ னாக்கிய தனிமுதற் |
15
|
|
றிருமா
மதுரை யெனுந்திருப் பொற்றொடி
யென்னுயி ரடைத்த பொன்முலைச் செப்பி
னளவம ரின்பங் கருதியோ வன்றிப்
புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ வாழி
வளர்முலை யின்பெனின் மறித்துநோக் குமதி |
|
|
பெரும்பொரு
ளின்பெனிற் பிறிதுடை யின்றே
யோதல் வேண்டு வாழிய பெரிதே. |
(உரை)
கைகோள்: கற்பு; தலைவன் கூற்று
துறை: நெஞ்சொடுநோதல்.
(இ-ம்.)
இதற்கு, கரணத்தின் அமைந்து முடிந்த காலை (தொல். கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண்,
வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் எனவரும் விதிகொள்க.
1-5:
பொருள்................................நெஞ்சம்
(இ-ள்)
பொருள்செயல் அருத்தியின் அலைதரு கடுங்கான் தள்ளி-பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை
எனவும் ஆகலின் பொருளைப் பெரிதும் ஈட்டுதல் வேண்டும் எனவும் எனக்கு எடுத்துக்கூறி அதனை
ஈட்டும் அவாவினாலே என்னைத் துன்பம் தருதற்குக் காரணமான கடிய காட்டினிடத்தே செலுத்திப்
பின்னர்; எண்வழி தடைந்து-இங்ஙனம் எண்ணுகின்ற பொருளீட்டும் வழியிற்செல்லும் செலவினைத்
தடுத்துப்பின்னர்; நாற்றிசை
நடக்கும்-நாம் நோக்குகின்ற நான்கு திசைகளினும் உருவெளிப்பாடாகத் தோன்றி நம்
கண்முன்னே இயங்காநின்ற; அணங்கின் தெய்வப் பெண்போல்வாளாகிய நங்காதலியின்;
கரும்பு உரு தட்டை அ மலை மடல் கடல்திரை உகளுங் குறுங்கயல் மானும் அவயவத்து அருத்தியின்-கரும்பு
எழுதப்பட்ட மூங்கிலும் அழகிய மலையும் மலரும் கடலினது அலையுள் திரிகின்ற குறிய கயல்மீனும்
ஆகிய இவையிற்றை நிரலே ஒக்கும் தோளும் முலையும் முகனும் கண்ணும் ஆகிய உறுப்புக்களின்பால்
உண்டான வேட்கையினாலே; தடைதரும் நெஞ்சம்-என் செலவினைத் தடுக்கின்ற நெஞ்சமே கேள்!
என்க.
(வி-ம்.)
அருத்தி-அவா. இதனை அவயவத்து அருத்தியின் எனவும் பின்னுங்கூட்டுக. தலைவன் நோக்கும்
திசைதொறும் தன் நெஞ்சங்கவர்ந்த தலைவியின் உருவெளிப்பாடு தோன்றி இயங்குதலின்
நாற்றிசை நடக்கும் அனங்கு என்றான். அணங்கு-தெய்வப் பெண் போல்வாள் என்க; என்றது
தலைவியை. அணங்கின் கரும்புறுதட்டை மலை மடல் கடற்றிரை யுகளுங் குறுங்கயல் ஆகிய இவற்றை
மானும் அவயவத்து அருத்தியின் தடைதரு நெஞ்சம் எனக் கொண்டு கூட்டிக் கொள்க. தட்டை-மூங்கில்.
அ-அழகு. மடல்-இதழ். இஃது ஆகுபெயராய் மலரைக் குறித்து நின்றது. பின்னரும் சிறப்பால்
தாமரையைக் குறித்து நின்றது என்க. தலைவியின் தோளுக்கு மூங்கிலும் மலை முலைகட்கும்
மடல் முகத்திற்கும் கடற்றிரை யுகலுங் குறுங்கயல் கண்களுக்கும் உவமை. மானும்: உவம உருபு.
தோளில் தொய்யிலாகக் கரும்பு எழுதப்படுதலின் கரும்புறு தட்டை என்றான். அலைதரு கடுங்கான்
என ஒட்டுக. இதன்கண் தலைவன் பொருள் செய்யத் தூண்டிய நெஞ்சின் வழிபட்டுத் தலைவியைப்
பிரிந்து காட்டினூடே செல்லுங்கால், அத்தலைவியின் தோள் முதலிய உறுப்புக்களின் நலன்களை
நினைந்து மேர்செல்லவுந்துணியாமல் மீளவுந் துணியாமல் வருந்துபவன் தன் நெஞ்சை உணர்வுடையதுபோலும்
உறுப்புடையதுபோலும் வேறு நிறுத்தி அதனை நோக்கிக் கூறுகின்றான் என்க. இதற்கு,
|
நோயும் இன்பமும்
இருவகை நிலையிற்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியு விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி (தொல். பொருளி. 2) |
எனவரும் நூற்பாவால்
அமைத்துக் கொள்க. உறுப்பினுள் வைத்துத் தோளும் முலையும் முகமும் கண்ணும் நுகர்ச்சிக்குச்
சிறத்தலின் அவற்றையே கூறினான். தலைவியோடு உறையுங்கால் அவளருமை தோன்றாமல் அவளைப்
பிரிந்த பின்னர்ப் பொருளாசை குறைந்து அவள்பால் வேட்கையே மிக்கு நிற்றல் மக்களியல்பிற்கு
மிகவும் பொருந்துதல் உணர்க.
6-8: கயிலை...............................மதனை
(இ-ள்)
கயிலைத்தென்பால் கானகந் தனித்த தேவர் நெஞ்சு உடைக்கும்-கயிலைமலைக்குத் தென்றிசையிலுள்ள
காட்டின்கண் மனைவிமாரைப் பிரிந்து தனித்திருந்து தவஞ்செய்யும் தேவர்களின் நெஞ்சினைப்
பிளக்கும்; தாமரையேவின் குணக்கோ-தாமரை முதலிய மலரம்புகளையுடைய காமப் பண்பினையுண்டாக்கும்
தலைவனாகிய; மதனை-காமவேளை; மணக்கோல் துரந்த-தன்மேல் மணமுடைய மலரம்புகளைத் தொடுத்தபொழுது
என்க.
(வி-ம்.)
தனித்த என்றதனால் மனைவிமாரை நீங்கித் தனித்திருந்த என்றும் கானகந் தனித்த என்றதனால்
தவஞ்செய்யும் என்றும் வருவிததோதுக. குணக்கோவாகிய மதனை என்க. குணம்-காமப்பண்பு
என்க. மணக்கோல் துரந்தபொழுது என ஒருசொல் வருவித்துக்கொள்க. தாமரையே வினையுடைய
குணக்கோ மதனை என மாறிக் கூட்டுக. மலரம்பாகலின் மணக்கோல் என்றான். கோல்-அம்பு.
9-13:
திருக்குளம்...................கருதியோ
(இ-ள்)
திருக்குளம் முளைத்த கண்தாமரை கொடு-அழகிய நெற்றியில் தோன்றிய கண்ணாகிய தாமரை
மலரைக் கொண்டு; தென்கீழ்த்திசையோன் ஆக்கிய-தென்கீழ்த்திசைக்குரிய காவற்றெய்வமாகிய
நெருப்பாக்கிய; தனிமுதல் திருமாமதுரை என்னும் திருப்பொற்றொடி-ஒப்பற்ற இறைவனாகிய
சிவபெருமானுடைய செல்வமும் பெருமையும் உடைய மதுரை மா நகரை ஒத்த அழகிய பொன்வளையலணிந்த
நங்காதலியின், என் உயிர் அடைத்த பொன் செப்பின் முலை-என்னுடைய உயிரைப் பொதித்து
வைத்துள்ள பொற்சிமிழையொத்த முலையின்; அளவு அமர் இன்பங் கருதியோ-நம் அவாவினளவாயமைந்த
பேரின்பத்தை நினைத்தோ என்க.
(வி-ம்.)
குளம்-நெற்றி. கண்-நெருப்புக்கண். திருக்குளம் முளைத்த தாமரைகொடு நெருப்பாகிய என்புழி
வியப்பணி. தோன்றி இன்புறுத்தலுணர்க, தென்கீழ்த்திசையோன்-தீக்கடவுள்; எனவே மன்மதனை
நெற்றிக்கண்ணால் எரியச்செய்தவன் என்பதாயிற்று. மா-பெருமை. மதுரை நகரம் கண்டு
கேட்டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்பங்களையும் அரம் முதலிய உறுதிப் பொருள்களையும்
தருதல்போல இவளும் ஐம்புலவிபங்களையும் அறத்தையும் வழங்குபவள் என்பான் மதுரை
எனும் பொற்கொடி என்றான். அளவமர் இன்பம்-ஆசையின் அளவிற்றாய் இருக்கும் இன்பம்
என்க. இனி என் உயிராகிய பொன்னை அடைத்துவைத்த முலையாகிய செப்பு எனினுமாம்.
13-17:
அன்றி...........................பெரிதே
(இ-ள்)
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ-தலைவி தரும் இன்பம் போன்று உள்ளத்துணர்வால்
உணரப்படுதலன்றிப் புறத்தார்க்கும் காணப்படும் அறமுதலிய பயனை அளிக்கும் இயல்புடைய
பொருளைக் கருதியோ; ஆழிவளர்முலை இன்பு எனின்-வட்டமாக வளரும் தலைவியினது முலையால்வரும்
இன்பமேயாயின்; மறித்து நோக்குமதி-உடனே மீண்டு செல்வாயாக அஃதின்றேல்; பெரும்
பொருள் இன்பு எனில்-யாம் மேற்கொண்டு எழுந்த மிக்க பொருள்தரும் இன்பமேயாயின்;
பிறிதுதடை இன்று-நீ அதனை ஈட்டுதற்குத் தடையேதும் இல்லை உடனே செல்வாயாக; ஓதல் வேண்டும்
வாழிய பெரிது-ஆதலால் நீ கருதிய தொன்றனை எனக்கு இப்பொழுது கூறவேண்டும். நீ நன்கு
வாழ்வாயாக! என்க.
(வி-ம்.)
புறப்பயன்-உள்ளத்து உணர்வானன்றிப் புறத்தார்க்கும் புலப்பட நுகரும் இன்பம். கருதியோ
என்பதனைப் பொருட்கும் கூட்டுக. பொருட்கோ வாழி என்புழி வாழி என்பதனை அசையாக்கினுமாம்.
மதி: முன்னிலையசை. ஓதல் வேண்டும்-கூறுதல் வேண்டும். பெரிது-நன்மை குறித்து நின்றது.
இதனோடு,
உண்ணா மையி
னுயங்கிய மருங்கி
னாடாப் படிவத் தான்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லுங்
கான யானை கவினழி குன்ற
மிறந்தபொரு டருதலு மற்றாய் சிறந்த
சில்லையங் கூந்த னல்லகம் பொருந்தி
யொழியின் வறுமை யஞ்சுதி யழிதக
வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவே லெஃகி னிமைக்கு
மழைமருள் பஃறோன் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை
யிறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கட லோதம் போல
வொன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே (அகம்.
123) |
எனவரும் பாவினையும்
ஒப்பு நோக்குக.
இனி, நெஞ்சமே நீ தலைவியோடிருந்த என்னைப் பொருளாசையால் அலைதருங் கடுங்கானிற் றள்ளிப் பின்னர் அவள் உறுப்பின் ஆசையால் பொருளீட்டும் நெறியையும் தடுக்கின்றாய். நீ இங்ஙனம் செய்தல் அறிவுடைமையாகுமோ? ஒன்று நீ கருதுவது முலையின்பமெனில் உடனே மீள்வாயாக! பொருளின்பமெனில் உடனே செல்வாயாக. அதற்குத் தடை ஏதும் இல்லை. அவ்வழிச் செல்வாயாக! இவ்விரண்டனுள் ஒன்றை இப்பொழுது துணிந்து எனக்குக் கூறுவாயாக! என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-மருட்கை. பயன்-ஒன்று துணிதல்.
|