பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 32

நேரிசையாசிரியப்பா

 
   
5
  தன்னுட லன்றிப் பிறிதுண் கனையிருள்
பகல்வலிக் கொதுங்கிய தோற்றம் போலப்
பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பி
லண்ட நாடவர்க் காருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண்டரு நுதலோன்
10
  முன்னொரு நாளி னாற்படை யுடன்று
செழிய னடைத்த சென்னி பாட
வெள்லருங் கருணையி னள்ளிரு ணடுகா
ளவனெனத் தோன்றி யருஞ்சிறை விடுத்த
முன்னவன் கூடன் மூதூ ரன்ன
15
  வெண்கைச் செவ்வாய்க் கருங்குழன் மகளிர்
செம்மணி கிடந்தநும் பசும்புனத் துலறி
வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
குழிகட் பரூஉத்தாட் கூர்ங்கோட் டொருத்தல்
சினைதழை விளைத்த பழுமர மென்ன
  வறுகாற் கணமும் பறவையுங் கணையு
மேகமும் பிடியுந் தொடர
வேகிய துண்டே கூறுதிர் புரிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று

துறை: வேழம்வினாதல்.

     (இ-ம்.) இதற்கு. “மெய்தொட்டுப் பயிறல்’ (தொல். கள. 11) எனவரும் நூற்பாவின்கண், ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவு நீரிற் குறுப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்னும் விதி கொள்க.

3-5: பெருநிலவு................................நுதலோன்

     (இ-ள்) பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பின்-மிக நிலவொளியை வீசுகின்ற மணல் பொருந்திய நெய்தற் பரப்பின்கண்; அண்ட நாடவர்க்கு ஆர் உயிர்கொடுத்த-வானவர்களுக்குத் தம்மாற் பெறுதற்கரிய உயிரை வழங்கினமை காரணமாக; கண்டக் கறையோன்-மிடற்றின்கண் தோன்றும் கறுப்பினையுடையோனும்; கண்தரு நுதலோன்-கண்ணைத் தோற்றுவித்த நெற்றியையுடையோனுமாகிய சிவபெருமான்; என்க.

     (வி-ம்.) தேவர் முதலியோர் திருப்பாற்கடல் கடைந்தபொழுது கடைகயிறாகிய பாம்புகான்ற நஞ்சம் அத்தேவர்களை அழிக்கத்தொடங்கிய காலத்தே சிவபெருமான் அந்நஞ்சினை அள்ளிப் பருகியது காரணமாக மிடறு கறுத்தலின் பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பின் அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த கண்டக் கறையோன் என்றார். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த இடம் வருணன் மேய பெருமணலுலகம் ஆதலின் பெரு நிலவுகான்ற நீறுகெழு பரப்பு என்றார். கண்-தீக்கண். பெருநிலவு கான்ற நீறு என்றது நிலாப்போல ஒளிபரப்பும் மணற்பரப்பினை. அண்டநாடவர்-தேவர். அவரால் பாதுகாத்துக்கோடற்கரிய உயிர் என்பார், ஆருயிர் என்றார். கண்டம்-மிடறு. நுதல்-நெற்றி.

6-11: செழியன்.............................மகளிர்

     (இ-ள்) செழியன் நால்படை உடன்று அடைத்த சென்னி-பாண்டியனால் தன்னுடைய யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையினையுங்கொண்டு போஎ செய்து முன் காவலிடப்பட்ட சோழன்; பாட-பாடாநிற்றலால்; முன்னொரு நாளில் தனது இகழ்தற்கரிய அருளுடைமையாலே செறிந்த இருளினையுடைய இடையாமத்தில்; அவனெனத் தோன்றி- அப்பாண்டியனே போலத்தோன்றி; அருஞ்சிறை விடுத்த முன்னவன்-தப்புதலரிய சிரையினை விட்ட எல்லாப் பொருட்கும் முன்னவனாகிய சிவபெருமானுடைய; கூடல் மூதூர் அன்ன- மதுரையாகிய பழைய நகரத்தினைப்போன்ற சிரப்பினையுடைய; வெள்நகை செவ்வாய் கருங்குழல் மகளிர்-வெள்ளிய பற்கலையும் சிவந்த வாயினையும் கரிய கூந்தலையுமுடைய மகளிரே! என்க.

     (வி-ம்.) நாற்படை-யானை முதலிய நால்வகைப்படை. இனி மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என இந்நான்கு பண்பினையும் உடைய படை எனினுமாம். இனி, கூலிப்படை, துணைப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை எனும் நால்வகைப்படை எனினுமாம். அடைத்த-அடைக்கப்பட்ட. அவன்: பாண்டியன். வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் என்புழிச் செய்யுளின்பமுணர்க. மகளிர்: அண்மைவிளி.

1-2: தன்னுடல்...............................போல

     (இ-ள்) தன்னுடல் அன்றிப் பிறிது உண்கனை இருள்-தனது உடலை அன்றி உலகத்திலுள்ள வேறு எப்பொருளையும் மறைக்குமியல்புடைய மிக்க இருளானது; பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம்போல-தன்னுடலைத் தின்னும் ஞாயிற்றினுடைய ஆற்றலுக்கு அஞ்சி இக்காட்டினூடே வந்து ஒதுங்கித் திரியும் ஒரு ஆட்சிபோலே என்க.

     (வி-ம்.) இருள் தன்னுடலைத் தின்பதன்றி உலகிலுள்ள வேறு பொருள் அத்தனையும் தின்னும் என்பதும், அது தன்னுடலைத் தின்னும் ஞாயிற்றின் வலிகு ஒடுங்கித் திரியும் என்பதும் நினைந்தின்புறுக. உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டனபோலக் கூறலு மரபே என்றமையால் பிறிதுண் கனையிருள் என்றார். கனையிருள்-மிக்க இருள். பகல்-ஞாயிறு. இருள் யானைக்கு உவமை. இனி ஞாயிற்றின் உடலைத் தின்பதன்றி அதற்கு வேறாகிய திங்களின் உடலை நாள்தோறும் சிறிது சிறிதாகத் தின்று அழிக்கும் மிக்க இருள் எனினுமாம். தன் என்றது ஞாயிற்றை.

12-14: செம்மணி......................ஒருத்தல்

     (இ-ள்) செம்மணி கிடந்த பசும்புனத்து-சிவந்த மாணிக்கங்கள் கிடந்த பசிய இத்தினைப்புனத்தின்கண்ணே; வாய் உலறி- வாய்விட்டுப் பிளிறி; சொரிமழை மதம் தழை செவி புழக்கை குழிகண் பரூஉத்தாள் கூர்கோடு ஒருத்தல்-மழை போலச் சொரியாநின்ற மதநீரினையும் தழைத்த காதுகளையும் துளையுடைய கையினையும் குழிந்த கண்களையும் பரிய கால்களையும் கூரிய கொம்புகளையுமுடைய களிற்றியானை யொன்று என்க.

     (வி-ம்.) வாய் உலறி என மாறுக. உலறுதல்-பிளிறுதல். தழைசெவி: வினைத்தொகை. புழை-துளை. குழிகண்: வினைத்தொகை. ஒருத்தல்-களிற்றியானை. இருளின் தோற்றம் போன்ற தோற்றத்தையும் மத முதலியவற்றையுமுடைய ஒருத்தல் என இயைக்க.

15-18: சினை.................................புரிந்தே

     (இ-ள்) சினைதழை விளைத்த பழுமரம் என்ன-கிளைகளையும் தழைகளையும் உண்டாக்கிய பழுத்த மரங்களை அடையுமாறுபோலே; அறுகால் கணமும் பறவையும்-வண்டுக் கூட்டங்களும் பறவைகளும்; கணையும்-யான் எய்த அம்பும்; மேகமும் பிடியும் தொடர-முகில்களும் பிடி யானைகளும் தன்னைப் பின் தொடர்ந்து வரவும்; ஏகியது உண்டே-ஈண்டு வந்ததுண்டோ; புரிந்து கூறுதிர்-விரும்பிக் கூறுமின் என்க,

     (வி-ம்.) பழுத்த மரங்களை அவற்றின் பழத்தை உண்ணக் கருதி வண்டுகளும் பறவைகளும் அடையுமாறுபோலே இந்த யானையின் மதத்தையுண்ணவும் அதனால் கொலையுண்ணும் ஏனைய உயிரினங்களின் உடலைத் தின்னக் கழுகு பருந்து முதலிய பறவைகளும் தொடரும் என்பது கருத்து. மேகம் அதன் விரைவினாலே ஈர்ப்புண்டு பிந்தொடர்ந்தன என்க. பிடியானைகள் அவாவினாலே தொடரும் என்றவாறு. கணையும் தொடரா எனவே என் கணைக்குத் தப்பி அக்கணையினும் விரைந்து ஓடிற்று என்றானாயிற்று, புரிந்து-விரும்பி.

     இனி இதனை, மகளிர்காள்! நும் பசும்புனத்தின்கண் மத முதலியவற்றையுடைய ஒருத்தல் ஒன்று வண்டுகளும் பறவைகளும் கணையும் முகிலும் பிடியும் தொடர ஏகியதுண்டே புரிந்து கூறுதிர் என வினை முடிவு செய்க. அறுகாற் கணம் என்றது வண்டுக் கூட்டத்தை. பழுமரம் பின்தொடர என்பர் பழைய உரையாசிரியர். அது பொருந்தாமை யுணர்க. மெய்ப்பாடும் பயனும் அவை.